கிட்டத்தட்ட 100 வருட தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தனது காமெடி, நக்கல் பேச்சால் தமிழ் திரை உலகை ஆட்சி செய்தவர் Goundamani…
கவுண்டமணியின் உண்மையான பெயர் சுப்பிரமணியன் கருப்பையா. கோயமுத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தார். ஆரம்ப கட்டத்தில் நாடகங்களில் நடித்து வந்தார். சிறுவயதில் பெரிதாக யாரிடமும் பேசாமல் கூச்ச சுபாவம் கொண்டவராக இருந்து வந்தார். நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட கொஞ்சம் கொஞ்சமாக கூச்ச சுபாவத்தை விட்டு வெளிவந்தார். நாடகங்களில் நடிக்கும் போதே யாராவது பேசினால் அதற்க்கு கிண்டல் செய்யும் விதமாகவே பேசி வந்தார்.

சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்த கவுண்டமணிக்கு வசனமே இல்லை. “ராமன் எத்தனை ராமனடி” என்ற படத்தில் தனது முதல் வசனத்தை பேசினார். பின்னர் தொடர்ந்து படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.
பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் ரஜினி, கமலுக்கு எப்படி திருப்புமுனையாக அமைந்ததோ அதே போல கவுண்டமணியின் திரை வாழ்க்கையிலும் திருப்பு முனையாக இருந்தது. அந்த படத்தின் உதவி இயக்குனரான பாக்கியராஜ் சுப்பிரமணியன் என்ற பெயரை “கவுண்டமணி” என படத்தில் போட்டிருந்தார். அதற்க்கு காரணம் கவுண்டமணியின் நக்கல் பேச்சு தான். அதில் பேசிய “பத்த வெச்சுட்டாயே பரட்டை” என ரஜினியிடம் கூறும் வசனம் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது.
“நீ யாராக வேண்டுமானாலும் இரு ஆனால் என்னிடம் கொஞ்சம் தள்ளியே இரு” என்ற மாஸ் டயலாக் போல யாராக இருந்தாலும் கவுண்டமணியிடம் பேசும் போது கலாய்த்து தள்ளி விடுவார். ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், மணிவண்ணன், விஜயகாந்த், சரத் குமார், கார்த்திக், விஜய், அஜித், அர்ஜுன் என பல நடிகர்களுடன் நடித்து வந்துள்ளார்.
இயக்குனர்கள் நடிகர்களை தேர்வு செய்யும் முன் கவுண்டமணியிடம் தேதியை கேட்டு உறுதி செய்த பின்னர் நடிகர், நடிகைகளை பூக் செய்து வந்தனர். அந்த அளவிற்கு பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார். நடிகர்களுக்கு இணையாக சம்பளமும் வாங்கி வந்தார். கிட்டத்தட்ட 750 படங்களில் நடித்துள்ளார். காமெடியில் மட்டுமல்ல வில்லன், குணச்சித்திர நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து அசத்தினார்,

தனியாக நடித்து வந்த கவுண்டமணி வைதேகி காத்திருந்தாள் படத்திற்கு பின்னர் செந்தில் உடன் இணைந்து நடிக்கும்போது பல படங்கள் இவர்களின் காமெடிக்காக ஹிட் ஆனது. கவுண்டமணி, செந்தில் காம்போ தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம் என்றே கூற வேண்டும். தமிழ் சினிமாவில் இதுவரை இவர்களது கூட்டணி போல யாரும் காமெடியில் கலக்கியதில்லை என்றே கூற வேண்டும்.
தமிழ் படங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் கூறும் போது பல சர்ச்சைகள் ஏற்படும். ஆனால் இதற்க்கு விதி விலக்காக கவுண்டமணி அரசியல் கருத்துக்களை நக்கலாக பேசி ரசிக்க வைத்தார். “அவரா அவர் திருட்டு ரயில் ஏறி வந்தவராச்சே” என செந்திலை நக்கல் செய்வார். அதே போல “என்னடா மம்மியை பார்த்த MLA மாறி பம்முற” என்று கூறும் வசனங்கள் கவுண்டமணியை தவிர வேறு யாராலும் நக்கலாக பேச முடியாது. உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை கலாய்த்து தள்ளிவிடுவார்.
கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், உள்ளத்தை அள்ளித் தா, மேட்டுக்குடி, நடிகன், தங்கம், மன்னன், இந்தியன், நாட்டாமை, மாமன் மகள், உனக்காக எல்லாம் உனக்காக, முறை மாமன், சூரியன் போன்றவை கவுண்டமணி காமெடியில் கலக்கிய ஒரு சில படங்கள்.
80′ களில் வந்த கவுண்டமணியின் காமெடி காட்சிகள் அன்றைய கிராமபுற மக்களின் வாழ்க்கையை காட்டியிருந்தது. மேலும் அவர்களின் பழக்க வழக்கங்கள், நடைமுறை, பேச்சு வழக்கு ஆகியவற்றை இன்றைக்கு அறிந்து கொள்ள உதவியுள்ளது.
டெய்லர் காளியண்ணன், ஆல் இன் ஆல் அழகு ராஜா, குண்டலகேசி, ஐடியா மணி, மெக்கானிக் மாணிக்கம், காலிங்கராயன், கோவிந்தோ போன்ற கதாப்பாத்திரங்களில் நடித்து சிரிக்க வைத்தார்.
“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”, “அடங்கொப்பா இது உலகமகா நடிப்புடா சாமி”, “அல்லக்கைங்க ரூல்ஸ் என்னடா வாழ்க, ஒழிக அதோட நிப்பாட்டிக்கிங்க”, “இங்க நான் ஒரே பிஸி”, “நாராயணா.. இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி” போன்ற டயலாக்குகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிக்க வைத்துக்கொண்டே தான் இருக்கும்.

கவுண்டமணி செந்தில் காம்போ போல கவுண்டமணி சத்யராஜ், கவுண்டமணி கார்த்திக், கவுண்டமணி ரஜினி, கவுண்டமணி கமல், கவுண்டமணி விஜயகாந்த் என இவர்களுடன் நடிக்கும்போது கூட நக்கல் பேச்சால் கலக்கியிருப்பார்.
தமிழ் சினிமாவில் இப்பட்டிப்பட்ட கலைஞன் இதுவரை வரவில்லை என்ற அளவிற்கு அனைத்து தரப்பு மக்களையும் தனது நக்கல், நையாண்டி பேச்சால் ரசிக்க வைத்தார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]