கமல் ஹாசன் நடிப்பில் பல வெற்றி படங்கள் உருவாகியிருந்தாலும், தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் முழு நீல நகைச்சுவை படங்களை எடுத்து அதை இன்று வரை ரசிக்கும் படி உருவாக்கிய முக்கியமான கலைஞர்களில் ஒருவர் எழுத்தாளர் கிரேஸி மோகன். தமிழ் மட்டுமின்றி, சூழ்நிலைக்கு ஏற்ப சிலேடைகள் மற்றும் வார்த்தையுடன் விளையாடும் தந்திரமானவர் கிரேஸி மோகன். கமல் – கிரேஸி மோகன் கூட்டணியில் இதுவரை 12 படங்கள் உருவாகியுள்ளது, அதில் அணைத்து படைகளும் மக்கள் மனதை கவர்ந்த மறக்கமுடியாத படங்களில் முதன்மையான படம், ‘அபூர்வ சகோதரர்கள்’.
அபூர்வ சகோதரர்கள் (1989)

கமல் ஹாசன் மற்றும் கிரேஸி மோகன் இணைந்த முதல் படம், ‘அபூர்வ சகோதரர்கள்‘. புகழ்பெற்ற நடிகர் சார்லி சாப்லின் ஒரே ஒரு காட்சியில் முட்டி போட்டு குள்ளமாக நடித்ததை பார்த்து, ஏன் படம் முழுவதும் அப்படி நடிக்க கூடாது என நினைத்த நடிகர் கமல், தன்னுடைய குருவான கே. பாலச்சந்தரிடம் இதை கூறுகிறார். இதெல்லாம் சாத்தியமில்லை என்று அவர் கூற, அதை சாத்தியமாக்கி, படத்தில் உணர்ச்சிகரமாகவும் விறுவிறுப்பாகவும் எடுக்கப்பட்ட இந்த படத்தில் தான் கமல் ஹாசன் மற்றும் கிரேஸி மோகன் முதல் முறையாக இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“மீட்டர்க்கு மேல போட்டு குடுங்க சார்” (ஆட்டோ ஓட்டுபவர் கேட்க), “மீட்டர்க்கு மேலயா, நானே மேட்டர்க்கு கீழ தான் இருக்கேன்!” (அப்பு கமல்) கூறும் வசனங்கள் இன்றும் நினைவில் நிற்கும் ஒன்று.
மைக்கேல் மதன காமராஜன் (1990)

கமல் ஹாசனின் திரைக்கதையில், கிரேஸி மோகன் வசனம் எழுதி பிரம்மாண்ட வெற்றி படமாக உருவான படம், ‘மைக்கேல் மதன காமராஜன்’. ஒரே பிடசவத்தில் பிறக்கும் நான்கு குழந்தைகள் பிரிக்கப்பட்டு, சூழ்நிலையால் ஒரு இடத்தில சந்திக்கும் கதைதான் படம். இதில் உணர்வுகளை மென்மையாக வைத்து, நான்கு சகோதரர்கள் இணையும் விதமாக எடுக்காமல், இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாசன் படம் முழுவதும் அங்கங்கே நகைச்சுவையம் சேர்த்து இயக்கியிருப்பார்.
மகளிர் மட்டும் (1994)

கமல் ஹாசன் இந்த படத்தின் கதை எழுதியபோதே, தினசரி பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி மட்டும் பேசாமல் உடன் நகைச்சுவையும் சேர்க்க தன்னுடைய நண்பர் கிரேசி மோகனை திரைக்கதை எழுத அழைத்தார். வேலைக்கு செல்லும் மூன்று பெண்கள், அவர்கள் வேலை செய்யும் இடத்தில சந்திக்கும் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க, நடுவில் மருத்துவமனையில் ஒரு தீவிரவாதி, அங்கு ஒரு பிணத்துடன் இந்த பெண்கள் செய்யும் குளறுபடிகள் என படத்தின் நகைச்சுவை அழகாக பொருந்தியிருக்கும்.
சதி லீலாவதி (1995)

பாலு மகேந்திரா இயக்கி, கமல் ஹாசனின் முக்கியமான நகைச்சுவை பாத்திரமாக அமைந்த படம், ‘சதி லீலாவதி‘. கிரேசி மோகனின் நகைச்சுவையான வசனங்களை கோவை சரளாவின் கொங்கு தமிழில் கேட்கும்போதெல்லாம் சிரிப்பின் சரவெடி தான். அதிலும் பிரேக் பிடிக்காத காரை சரளா ஊட்டி செல்ல, பின்னாடியே கமல் மற்றும் அவர்களின் மகன் துரத்திவரும் காட்சிகள் ரசிகர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தியது. முழுமையாக ஒரு சீரியஸ் கதையா எடுக்க நினைத்த பாலு மகேந்திராவை ஒரு காமெடி கதையை எழுதவைத்தவர் கமல் ஹாசன். கிரேஸி மோகனின் வசனங்கள் படத்தின் முக்கிய கதையை விட்டு நகராமல், ரசிக்கும்படியாகவும் எழுதியிருப்பார்.
“பிரேக் புடிக்கலடி !” என கத்தும் கமல், அதற்கு சரளா, “என்னையே புடிக்கல, இப்போ பிரேக் புடிக்காட்டி என்ன!” என சொல்லும் காட்சிகள் சிரிப்பு மழை.
அவ்வை சண்முகி (1996)

கே. எஸ். ரவிக்குமார் இயக்கி எழுதி, கிரேஸி மோகன் கதை எழுதிய படம். ராபின் வில்லியம்ஸ் நடித்த ‘Mrs. Doubtfire’ என்ற படத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம், ‘அவ்வை சண்முகி‘. கமல் ஹாசனின் அட்டகாசமான நடிப்பும், நளினமும் படத்துக்கு பலம் என்றால், படத்தின் நகைச்சுவை காட்சிகள் நல்ல பின்பலமாக அமைந்தது என்று கூறலாம். அதிலும் மணிவண்ணன் நடித்த கதாப்பாத்திரம் சண்முகி பாட்டியிடம் பிரியம் காட்டும் கட்சியும், அதற்கு ஒத்துப்போகாமல் கமல் நழுவும் விதமும் நகைச்சுவையாக அமைந்த பெருமை கிரேசி மோகனுக்கே.
காதலா காதலா (1998)

சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கி, கமல் ஹாசன் நடித்து கிரேசி மோகன் எழுதிய படம் என்றாலே அது ப்ளாக்பஸ்டர் ஹிட் என்று முத்திரை குத்திவிடலாம். குழப்பமான திரைக்கதையில், மக்களுக்கு புரியும் வண்ணம் நகைச்சுவையை கலந்து ஒரு விருந்து அழிப்பது கமல் ஹாசன் – கிரேசி மோகனின் தனித்துவம். ‘காதலா காதலா’ படமும் ஒரு குழப்பமான, நுணுக்கமான திரைக்கதையில் உருவான படம் தான், அதிலும் இந்த படத்தின் வசனங்கள் சில இன்றளவும் பேச படுகிறது.
“ஜானகி எனக்கு wife ஆகிடதால, சுந்தரி வேலைக்காரி ஆயிட்டா” என்ற வசனம், எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் குறுக்கு கேள்விகளும் படத்தின் நகைச்சுவையை மெருகேற்றியது.
தெனாலி (2000)

கிரேசி மோகனின் வசனத்தில், கமல் ஹாசன் பேசிய மறக்கமுடியாத வசனங்கள் பல உண்டு என்றாலும், ‘தெனாலி’ படத்தில் அவருக்கு உள்ள பயம் மாற்றி பேசும் வசனம் மிக முக்கியமானது. இந்த படத்தில் இலங்கையில் போர் முடிந்து அந்த பயம்விட்டு போகாமல் ஒரு மனநல மருத்துவருடன் (ஜெயராம்) பயணிக்கிறார். ஜெயராமின் குடும்பத்துடன் கமல் பழகும் காட்சிகளின்போது, ஜெயராம் செய்யும் சேட்டைகள் என படம் முழுவதும், கிரேஸி மோகனின் இயல்பான நகைச்சுவை தென்படும்.
பஞ்சதந்திரம் (2002)

கமல் ஹாசன், ஜெயராம் , யூகி சேது, ஸ்ரீமன், ரமேஷ் அரவிந்த், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் முழுநீல நக்கைச்சுவை படமாக எடுக்கப்படட படம் தான் ‘பஞ்சதந்திரம்’. 5 நண்பர்கள் சேர்ந்து அடிக்கும் லுட்டியும், அதனால் அவர்கள் மாட்டிக்கொள்ளும் சிக்கல், சச்சரவு என படம் முழுவதும் கிரேசி மோகன், கமல் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் உடைய நகைச்சுவையான எழுத்து பிரம்மிக்க வைக்கிறது. இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் தவறாமல் மக்களை விரும்பி பார்க்கும் படமாக அமைந்துள்ளது.
“முன்னாடி பின்னாடி என இருக்குது” என்ற நகைச்சுவை காட்சியகட்டும், ஐயப்பன் நாயரின் பயம் கலந்த குழப்பமான காட்சிகளாகட்டும், கிரேஸி மோகன் நிஜமாகவே கிரேஸியாக வசனம் எழுதியுள்ள படம் இதுதான்.
“It அது But அனால் That அது What என்ன” என்ற வசனமெல்லாம் இன்றும் அர்த்தம் தெரியாமல் சுற்றுகிறார்கள் மக்கள்.
பம்மல் K. சம்பந்தம் (2002)

நடிகர் மௌலி எழுதி இயக்கிய படம், ‘பம்மல் K. சம்பந்தம்‘. பெண்கள் என்றாலே ஆகாத ஒருத்தர், அதனாலேயே கல்யாணத்தின் மீது நம்பிக்கை இல்லாமலும், அதை எதிர்க்கும் ஒருவராகவும் இருப்பவர், பம்மல் (கல்யாண) சம்பந்தம். அவரின் தம்பி ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ததை கேள்விப்பட்டு, அதை தடுக்க நினைக்கும் அவர் அங்கு டாக்டர் ஜானகியை சந்திக்கிறார். இருவரும் ஒரே எண்ணத்தில் கல்யாணத்தை வெறுத்து வாழ்பவர்கள். இந்த கதையில், கிரேஸி மோகன் மற்றும் மௌலியின் அசத்தலான நகைச்சுவை வரிகளுக்கு சிரிக்காதவர்களே இருக்கமுடியாது.
வசூல் ராஜா M. B. B. S (2004)

பிரபல ஹிந்தி படத்தின் ரீமேக் என்றாலும், கிரேஸி மோகனின் நக்கல் கலந்த நகைச்சுவையான வசனங்கள் ‘வசூல் ராஜா M. B. B. S’ படத்தை தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் மாற்றி அமைத்தது. பெற்றோரின் மனநிறைவிற்காக டொக்டராகும் ராஜா, அவரின் இயல்பான, எதற்கும் அஞ்சாத வாழ்க்கை முறையை அவர் சந்திக்கும் மக்களிடம் அதை பரிமாறி, அதில் நகைச்சுவையாக நடக்கும் நய்யாண்டித்தனமான காட்சிகள் இந்த படத்தை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது.
“What is மாமு?!”, “ராஜா calling ராஜு, மாமா calling மாமு”
‘கட்டிப்புடி வைத்யம்’, ‘மார்கபந்து, முதல் சந்து’ என்ற வசனங்கள் இன்றும் Meme வழியாக உபயோகிக்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]