தமிழ் திரையுலகில் கம்பன், வள்ளுவனுக்கு இணையாக பல எண்ணற்ற வசனங்கள், பாடல்கள் மூலம் எல்லாக்காலத்திற்கும் ஏற்ற நெஞ்சில் நீங்கா கருத்துக்களை பதித்தவர் கண்ணதாசன் எனும் தமிழ் ஆளுமை.
“முத்தையா” என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி ஆகியோருக்கு 8-வது மகனாக பிறந்தார். இவருக்கு உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதிலேயே இவரை சிகப்பு ஆச்சி என்பவருக்கு 7000 ரூபாய்க்கு தத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அங்கே நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார்.

பள்ளிப்படிப்பை அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயது முதலே எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் சிறு வயதிலேயே புத்தகங்களை வாசிக்க விரும்பினார். பின்னர் பத்திரிகைகளில் கதை, கட்டுரை எழுத வேண்டும் என்பதை கனவாக மாற்றினார்.
16-வது வயதில் வீட்டிற்குத் தெரியாமல் சென்னை சென்றடைந்தார். வந்தாரை வாழவைக்கும் சென்னை பல கஷ்டங்களுக்கு மத்தியில் அவரையும் வாழ வைத்தது. என்னசெய்வது, என்ன வேலை செய்வது என்று தெரியாமல் பல இடங்களில் சுற்றிதிரிந்த கண்ணதாசனுக்கு ‘திருமகள்’ பத்திரிகையில் பிழைதிருத்தும் பணி கிடைத்தது.
பத்திரிக்கையில் வேலை செய்யும் போது அவர் எழுதிய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்து பிரபலமானது. அதன் மூலம் சினிமாதுறையில் கால்பதித்தார். 1949-ஆம் ஆண்டு k.ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த ‘கன்னியின் காதலி’ என்ற திரைப்படத்தில் “கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே” என்று அவர் எழுதிய பாடல் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’ படத்தில் “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்ற பாடல் வரி தமிழகத்தில் திராவிட கட்சிகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அன்றே தனது பாடல் வரிகள் மூலம் கூறியிருந்தார்.
எல்லா சூழலுக்கும் ஏற்ற பாடல் வரிகளை எழுதுவதில் அவருக்கு ஈடு இணை இல்லை என்றே கூறலாம். படத்தில் வரும் காட்சிக்கான சூழலை மட்டும் வைத்து பாடல் எழுதாமல் படத்தின் முழுக்கதையையும் கேட்டு அதற்க்கு தகுந்தாற் போல பாடல் வரிகளை அமைப்பார்.
அப்படி எழுதி இன்றும் கொண்டாடப்படும் பாசமலர் படத்தில் “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே” என்ற பாடல் அண்ணன் தங்கை பாசத்தை கண் முன்னே நிறுத்தியிருப்பார்.
எந்த ஒரு சூழ்நிலையையும் கையாளும் மன தைரியத்தை “பாலும் பழமும்” என்ற படத்தில் “போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?” என்ற வரிகள் மூலம் எல்லாம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் என்று வாழ்க்கை தத்துவத்தை அழகாக கூறியிருப்பார்.
“எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான். “இப்படித்தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லும் தகுதி எனக்கு இருக்கிறது” – கண்ணதாசன்
அந்த காலத்தில் படிக்காத பாமர மக்களையும் தனது எளிய தமிழ் வளத்தின் மூலம் அறிவை புகுத்தினார். அவரது பாடல்களில் உள்ள எளிமை மக்களின் கலாச்சாரத்தையும், இலக்கியத்தையும், வாழ்வோடு கலந்து இனிக்க இனிக்க தமிழர்களை மகிழ்வித்தார்.

வாழும்போதே வரலாறு படைத்த மாமனிதர்கள் இறந்தபின்பும் மரணத்தை வென்று மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து தனது படைப்புகளால் இன்றும் வாழ்ந்து வரும் கவிஞர்களில் ஒருவர் கண்ணதாசன்.
தமிழோடும், தமிழ் மக்களோடும் கலந்து காலத்தால் மறக்க முடியாத காவியங்களை தன் எழுத்துக்கள் மூலம் திரைப்படப் பாடல்கள் வழியாக மக்களுக்கு தந்தவர். கண்ணதாசனின் ஒவ்வொரு படைப்பிற்கும் பின்னாலும் பெரிய அர்த்தம் ஒன்று நிச்சயமாக ஒளிந்திருக்கும்.
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான கண்ணதாசன் 4000-க்கும் மேற்பட்ட கவிதைகள், 5000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். மேலும் தமிழக அரசின் “அரசவைக் கவிஞராக” இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருதை 1980-ல் பெற்றறார்.
”யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே, ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டியிருக்கும்”.
அரசியலில் கருணாநிதி, எம்.ஜி.ஆர், பெரியார், சம்பத், இந்திரா காந்தி ஆகியோருடன் பயணித்துளார். கருணாநிதியை சமர்த்தியக்காரர் என்றும், எம்.ஜி.ஆர் -ஐ கெட்டிக்காரர் என்றும் கூறுவார்.
காப்பியங்கள், தொகுப்புக்கள், சிற்றிலக்கியங்கள், கவிதை நாடகம், புதினங்கள், சிறு கதைகள், ,தன்வரலாறு, சமயம், நாடகம், உரை நூல்கள் என தமிழ் மொழிக்கு எண்ணற்ற படைப்புக்களாய் தந்துள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]