தமிழ் சினிமாவின் ‘இயக்குனர் சிகரம்’ கே. பாலச்சந்தர் தன்னுடைய படங்களில் சமூகத்தில் நடக்கும் பேசப்படாத சூழ்நிலைகளை பிரதிபலிக்கும் படங்களை தந்தவர். அவரின் படங்களில் கதைகள் தான் ஹீரோ, கதாப்பாத்திரங்கள் அதை கடத்துவதாக மட்டுமில்லாமல் ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்பவை. அவரின் மறக்கமுடியாத படங்களின் பட்டியல் என குறிப்பிட்டு கூற முடியாது என்றாலும் பெரும்பாலான மக்களின் மனங்களில் நினைவலையாக இருக்கும் படங்கள் இவை.
மேஜர் சந்திரகாந்த் (1966)
நடிகர் நாகேஷ் உடைய புகழுக்கு பாலச்சந்தரின் படங்கள் மிக முக்கியமான பங்காக அமைந்தது. இளம் இயக்குனராக தன்னுடைய மேடை நாடகங்கள் வழியாக சினிமாவில் நுழைந்து பாலச்சந்திரன் பெரும்பாலான படங்களில் நாகேஷ் நடித்திருப்பார். மேஜர் சந்திரகாந்த் படத்தில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயலலிதா, பி. முத்துராமன் நடித்திருப்பார்கள். தன்னுடைய தங்கையை ஏமாற்றியவனை கொன்று தலைமறைவாக வாழும் வேடத்தில் நாகேஷ் நடித்திருப்பார். புதுமையான முயற்சியில் படத்தின் க்ளைமாக்ஸ் வரை ரசிக்கும் படியான படம் ‘மேஜர் சந்திரகாந்த்’.
எதிர்நீச்சல் (1968)

நகைச்சுவையான படங்களில் பல கதை திருப்பங்களுடன் ஒரு கருத்தையும் வைத்து படம் எடுப்பது எளிதானது அல்ல. இந்த படத்தில் நாகேஷ் ஒரு அனாதை வேலைக்காரர், அவரின் அன்றாட வாழ்க்கையில் திருமணம் என்ற திருப்பம், அதுவும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் என்பது படத்தின் முதல் பாதி கதை. இரண்டாம் பாதியில் நடக்கும் பல மாற்றங்களும் நகைச்சுவையான காட்சிகளும் கே. பாலச்சந்தர்-ன் படங்களில் மட்டுமே காண முடியும். ‘எதிர்நீச்சல்’ படம் வழியாக நடிகை சௌகார் ஜானகியின் திரைப்படமும் மாறியது குறிப்பிடத்தக்கது.
இரு கோடுகள் (1969)

கே. பாலச்சந்தருக்கு முதல் தேசிய விருதை பெற்றுத்தந்த படம் ‘இரு கோடுகள்’. இரு பெண்களை திருமணம் செய்த ஒரு ஆண். சூழ்நிலையால் முதலில் காதலித்து திருமண்ம் செய்த பெண்ணை விட்டு வேறு பெண்ணை கல்யாணம் செய்து குழந்தைகளுடன் வாழ்கிறார். முதல் மனைவிக்கு ஒரு குழந்தை பிறக்க அவளுக்கு மறுமணம் செய்யாமல் அவளை ஆட்சியராக ஆக படிக்க வைக்கிறார் அந்த பெண்ணின் தந்தை. இருவரும் ஒரு சமயத்தில் சந்திக்க அங்கு நடக்கும் திருப்பங்கள் தான் கதை. சௌகார் ஜானகி, ஜெமினி கணேசன், ஜெயந்தி நடித்துள்ள இந்த படம் பாலச்சந்தரின் மறக்கமுடியாத படங்களில் ஒன்று.
அவள் ஒரு தொடர் கதை (1974)

நடிகை சுஜாதாவின் முதல் தமிழ் படம், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்களின் தியாகம் பற்றி பேசும் கே. பாலச்சந்தர் படங்களில் இதுவும் ஒரு வெற்றி படம். குடும்ப சுமையை ஏற்று தன் வாழ்க்கையை பொருட்படுத்தாமல் உழைக்கும் பெண்ணை கதையின் நாயகியாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ‘அவள் ஒரு தொடர் கதை’. வேலை செய்யும் இடத்தில் பெண்கள் கடந்து வரும் பிரச்சினைகள், அவர்கள் தங்களின் குடும்பத்துக்காக எதையும் தாங்கிக்கொள்ள முடியும் என்ற கதையில் சுஜாதா சிறப்பாக நடித்திருப்பார்.
அபூர்வ ராகங்கள் (1975)

ஒரு விடுகதை. குழப்பங்கள் நிறைந்த சிக்கலான விடுகதையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை தான் ‘அபூர்வ ராகங்கள்’. நிஜமாகவே அன்றைய சூழலில் ஒரு அபூர்வமான கதையை தைரியமாக திரையில் காட்டி விருதுகளை குவித்தவர் கே. பாலச்சந்தர். வீட்டை விட்டு வெளியேறும் இளைஞன் ஒரு பிரபல பாடகியின் உதவியால் பிழைத்து இருவரும் காதலில் விழுகிறார்கள். அந்த பிரபல பாடகியின் மகளும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு ஆணிடம் தஞ்சம் அடைந்து அவரை விரும்புகிறாள்.
இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை- வயது வித்தியாசம் அதிகம் உள்ளவர்களை விரும்பியது. படத்தில் திருப்பம் என்று சுட்டிக்காட்ட எதுவும் இல்லை என்றாலும் விடுதலையின் முடிவு க்ளைமாக்ஸில் தெரிய வரும். சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகி என மூன்று தேசிய விருதுகளை தட்டிச் சென்ற படம்.
மூன்று முடிச்சு (1976)

முன்னணி நடிகர்களான கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீ தேவி நடிப்பில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது ‘மூன்று முடிச்சு’. முக்கோண காதலில் தொடங்கி படத்தின் ஒவ்வொரு திருப்பமும் படத்துக்கு ஒரு வேகத்தை கொடுத்தது. வில்லனாக நடித்த ரஜினிகாந்த் இந்த படத்திற்கு பிறகு அவருக்கென தனியாக ஸ்டைலை உருவாக்கிக்கொண்டார். நடிகை ஸ்ரீ தேவியின் கதாநாயகியாக நடித்த முதல் படம், பலராலும் பாராட்டப்பட்டு பின்னாளில் இந்தியா முழுவதும் கலக்கினார்.
மன்மத லீலை (1976)
கள்ளக்காதல் மற்றும் கள்ளத்தொடர்பு போன்ற கதைகள் பெரும்பாலும் பேசப்பட்ட காலம். ‘மன்மத லீலை’ படத்துக்கு சென்சார் போர்டு கூட ஒப்புதல் அளிக்க யோசித்தாலும் படத்தில் கே. பாலச்சந்தர் அவர்கள் சில சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களை சேர்ந்ததால் படம் வெளியானது. திருமணத்திற்கு பின்னும் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் கமல், க்ளைமாக்ஸில் சமூகத்தில் பொதுவாக ஆண்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி படத்தை முடித்திருப்பார் இயக்குனர்.
அவர்கள் (1977)

சுஜாதா நடிப்பில் கமல் ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ரவிக்குமார் நடித்துள்ள படம் ‘அவர்கள்’. ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில், அவளின் வாழ்க்கையில் நடக்கும் முதல் காதல், திருமணம், மறுவாழ்வு பற்றி பேசிய மிக சில இயக்குனர்களில் கே. பாலச்சந்தரும் ஒருவர். தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு பகுதியிலும் அவள் சந்திக்கும் ஆண்களால் அவளுக்கு நடக்கும் கதையை இயல்பாக காட்டியிருப்பார்.
நினைத்தாலே இனிக்கும் (1979)
எழுத்தாளர் சுஜாதாவின் கதையில் கே. பாலச்சந்தர் இயக்கிய ஒரு அற்புதமான இசை படம். கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஜெயப்பிரதா, கீதா, ஜெயசுதா நடித்து படம் முழுவதும் இனிமையான ஹிட் பாடல்கள் நிறைந்த படம் ‘நினைத்தாலே இனிக்கும்’. பணக்கார வீட்டுப் பெண் எதர்சையாக ஒரு இசைக்குழுவிடம் விலை மதிப்புள்ள வைரத்தை வைக்க, அதை தேடும் ஒரு கும்பல் ஒரு பக்கம் என கதை அமைந்திருக்கும். கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் வரும் பாடல் காட்சிகள் இன்றும் புதிதாக துள்ளலான இருக்கும்.
தில்லு முல்லு (1981)

இந்த படம் வரை நடிகர் ரஜினிகாந்த் ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடிப்பார் என்று இருந்த பிம்பத்தை உடைத்து வித்தியாசமான படமாக அமைந்தது ‘தில்லு முல்லு’. இயக்குனர் விசுவின் நக்கலான நகைச்சுவை திரைக்கதையில் கே. பாலச்சந்தர் இயக்கிய ஒரு எவர் க்ரீன் படமாக அமைந்தது. படத்தின் பெயருக்கு ஏற்றமாதிரி கதாநாயகன் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து முழுமையாக மக்களை என்டர்டெய்ன் செய்த படம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]