K.S.Ravikumar அவர்களின் ஒருசில படங்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முதல்முறை பார்க்கும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சரத் குமார், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களை வைத்து Blockbuster ஹிட் படங்களை தந்தவர் K.S.Ravikumar. கிராமத்து படம், நகரத்து படம், காமெடி படம், குடும்பப்படம் என அனைத்து தரப்பு மக்களும் இன்றளவும் ரசிக்கும்படியாக படங்களை இயக்கியுள்ளார். தனது ஆரம்ப கட்ட சினிமா வாழ்வில் விக்ரமன் இயக்கிய புது வசந்தம் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் ரகுவரன் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக காட்டியிருப்பார். ரகுவரன் பேசும் I KNOW என்ற ஒற்றை டயலாக் கொண்டு வில்லன் கதாபாத்திரத்தை மிரட்டியிருப்பார். பின்னாளில் இவரது படங்களுக்கு என்று தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அந்த வகையில் K.S.Ravikumar அவர்களின் evergreen படங்கள்.
சேரன் பாண்டியன்:

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் சரத் குமார், விஜயகுமார், ஸ்ரீஜா, நாகேஷ், ஆனந்த் பாபு, மஞ்சுளா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடிப்பில் அண்ணன், தங்கை பாசத்தை கொண்டு எடுத்த படம் சேரன் பாண்டியன். அண்ணன், தம்பியாக விஜய் குமார் மற்றும் சரத் குமார் நடித்திருப்பார்கள். இருவருக்குமிடையேயான கருத்து வேறுபாட்டால் ஏற்படும் நிகழ்வுகளை ரசிக்கும் படியாக எடுத்திருப்பார். கவுண்டமணி, செந்தில் கூட்டணியில் காமெடியில் கலக்கியிருப்பார். தமிழ் நாடு அரசின் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது.
நாட்டாமை:

90′ காலகட்டத்தில் வெளியாகி அனைவரின் மனதை கவர்ந்த படமான நாட்டாமை இன்றும் ALL TIME FAVOURITE படமாக இருந்து வருகிறது. சரத் குமார், குஷ்பு, விஜயகுமார், மனோரமா, மீனா, பொன்னம்பலம், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருப்பார்கள். அண்ணன் தங்கையாக விஜய் குமார் மற்றும் மனோரமா நடித்திருப்பார்கள். வழக்கம் போல கவுண்டமணி காமெடியில் கலக்கியிருப்பார். தவறான தீர்ப்பு வழங்கியதால் உயிர் விடும் சரத் குமார், அண்ணன் சரத்குமார் சொல்லுக்கு கட்டுப்பட்டு வீட்டை விட்டு வெளியேறும் தம்பி சரத்குமார், பொன்னம்பலத்தின் “தாய்க்கிழவி” டயலாக், “நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு” என வில்லன் பேசும் டயலாக் போன்றவை இப்போது பார்த்தாலும் ரசிக்கும் படியாக இருக்கும். தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குனர் மற்றும் படத்திற்கான விருது இந்த படத்திற்கு வழங்கப்பட்டது.
முத்து:

கவிதாலயா தயாரிப்பில் K.S.Ravikumar இயக்கி, ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, ராதா ரவி, வடிவேலு, செந்தில், பொன்னம்பலம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் முத்து. ரஜினிகாந்த் அவர்களின் திரை வாழ்வில் முக்கியமான படங்களில் ஒன்று. இந்த படம் 1998-ல் ஜப்பான் மொழியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தனது எஜமானுக்கு விசுவாசமாக இருக்கும் ரஜினி, மீனாவை விரும்பும் சரத் பாபு, எஜமான் என தெரியாமல் இருந்து வரும் ரஜினி என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசிக்கும் படி செய்திருப்பார் இயக்குனர். சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது.
அவ்வை சண்முகி:

தமிழ் சினிமாவில் புது முயற்சியாக கமல், K.S.Ravikumar கூட்டணியில் முழு நேரம் lady getup போட்டு நடித்திருந்தார் கமல். அமெரிக்க படமான Doubtfire படத்தின் கதையை சார்ந்து எடுக்கப்பட்டது அவ்வை சண்முகி. கமல், மீனா, ஜெமினி கணேசன், நாசர், மணிவண்ணன் ஆகியோர் நடித்து சூப்பர் ஹிட் ஆனது. மனைவி மீனாவை பிரிந்திருக்கும் கமல், வயதான பெண் போல getup போட்டு மீனாவின் வீட்டிற்குள் செல்லும் கமல் அங்கு நடக்கும் நிகழ்வை காமெடியாக எடுத்திருப்பார். மணிவண்ணன், டெல்லி கணேஷ் காமெடியில் கலக்கியிருப்பார்கள்.
பிஸ்தா:

கார்த்திக், நக்மா, மணிவண்ணன், மௌலி ஆகியோர் நடிப்பில் 1997-ல் வெளிவந்த படம் பிஸ்தா. படத்தின் முதல் பாதியில் மாலை போட்டுக்கொண்டு சாதுவான கார்த்தியாகவும், இரண்டாவது பாதியில் குற்றவாளி என்ற அவரது உண்மை முகம் தெரிந்த பின் அவரின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றம் என நடிப்பில் அசத்தியிருப்பார். அன்றைய தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பாக்காத வகையில் இடைவேளை வைத்திருந்தார் ரவிக்குமார்.
நட்புக்காக:

நட்பை உதாரணமாக கொண்டு இன்றைய காலகட்டத்தில் எத்தைனையோ படங்கள் வந்தாலும் அனைத்திற்கும் தொடக்க புள்ளியாக இருந்தது நட்புக்காக படம். நண்பனுக்காக உயிர் விடும் நண்பன் என நட்பை சிறப்பாக காட்டியிருப்பார் K.S.Ravikumar. விஜயகுமார், சரத்குமார் நண்பர்களாக அழகாக நடித்திருப்பார்கள். சிம்ரன், மனோரமா, செந்தில், மன்சூர் அலி கான், ரஞ்சித், ஆர். சுந்தர்ராஜன் என அனைவரும் நடிப்பில் கலக்கியிருப்பார்கள். “மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம் டா” என நட்பை கொண்டாடியிருப்பார். பிலிம்பேர், தமிழ்நாடு அரசு விருது சிறந்த படம் மற்றும் நடிகருக்காக வழங்கப்பட்டது.
படையப்பா:

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று படையப்பா. ரஜினிகாந்த் நடிப்பு மற்றும் ஸ்டைல், சிவாஜிகணேசன் நடிப்பு, லட்சுமியின் எதார்த்தமான பேச்சு, ரம்யா கிருஷ்ணன் பார்வை, திமிரான நடிப்பு, சௌந்தர்யாவின் சாதுவான நடிப்பு என ஒவ்வொருவரும் நடிப்பில் ரசிக்க வைத்திருப்பார்கள். ரம்யா கிருஷ்ணன் கூறும் “வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் மாறலா” என்ற வசனம் ரஜினிகாந்திற்க்கு இன்றும் பொருத்தமாக உள்ளது. அதிக தியேட்டரில் ரிலீஸ் ஆனா தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் வேறு யாரும் ஈடுகொடுக்க முடியாத வகையில் நடித்து அசத்தியிருப்பார். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு இணையாக இந்த கேரக்டர் இருந்தது.
தெனாலி:

அமெரிக்க படமான what is Bob என்ற படத்தின் கதையை கொண்டு K.S.Ravikumar ,தமிழில் எடுக்கப்பட்ட படம் தெனாலி. கமல் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடிப்பில் அசத்தியிருப்பார். ஜெயராம், ஜோதிகா,தேவயாணி, டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, சார்லி, மதன் பாப் ஆகியோர் நடித்திருந்தனர். கமலின் எதார்த்தமான பேச்சு, கமலிடமிருந்து தப்பிக்க ஜெயராம் செய்யும் செயல் என ஒவ்வொன்றும் ரசிக்கும்படியாக இருந்தது.
பஞ்சதந்திரம்:

ஐந்து நண்பர்களான கமல், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யோகி சேது, ஸ்ரீமான் ஆகியோரது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை காமெடியாக எடுத்திருப்பார். கமல் மற்றும் சிம்ரன் பிரிந்திருப்பது, நண்பர்கள் 4 பேரும் அவர்களை சேர்த்து வைக்க செய்யும் சில சம்பவங்கள் ரசிக்கும்படி இருக்கும்.
வரலாறு:

அஜித் திரை வாழ்வில் பேர் சொல்லும் படமாக இருந்தது வரலாறு. அப்பா, மகன்கள் என மூன்று வேடங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார். அப்பா மகன் இடையேயான பிரச்சனையை சஸ்பென்ஸ் நிறைந்து காட்டியிருப்பார். பிளஸ்பேக்கில் வரும் அஜித் நடிப்பில் மிரட்டியிருப்பார். 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி சூப்பர் ஹிட் ஆனது.
தசாவதாரம்:

கமல் ஹாசன் அவர்களின் நடிப்பு திறமைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டான படம் தசாவதாரம். தமிழ் சினிமாவில் சிவாஜி கணேஷ் அவர்களுக்கு அடுத்து 10 கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி கண்டார். ஒரு கிருமி பரவினால் வைரஸ் தொற்று ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும். அந்த வைரஸை மையமாக கொண்டு படம் முழுவதும் கமலின் 10 கதாப்பாத்திரதை காட்டியிருப்பார். 2004- ல் ஏற்பட்டு சுனாமி அலையை படத்தின் கிளைமேக்ஸில் வைத்திருப்பார். “கடவுள் இருந்தால் நல்ல இருக்கும்” என கமல் கூறும் வசனம் ரசிக்கும் படியாக இருக்கும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]