ஒரு படத்தின் கதைக்கு எத்தனை நடிகர்கள் வேண்டும் என்று எப்படி தீர்மானிக்கிறார்கள்? Multi starrer படங்கள் கமர்சியல் ஹிட்டாக ஒரு குறுக்கு வழியாக பயன்படுகிறது.
Multi starrer படங்களை பொருத்தவரை தமிழ் சினிமாவில் எதார்த்தமான கதைகளில் அன்பு, நட்பு, நகைச்சுவை, காதல் என பல அம்சங்கள் சேர்ந்து வெற்றிகரமாக ஓடிய படங்கள் பல உண்டு. 90களில் தொடங்கி சமீபகால Multi starrer படங்களில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டன, அந்த மாற்றங்கள் அவசியமா, அல்லது திரைப்படங்கள் மக்களின் ஆரவாரமான கைத்தட்டல்களை சம்பாதிக்க அந்த மாற்றம் உதவுகிறதா என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் பல முறை முன்னனி கதாநாயகர்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். ஒரே கூட்டணியில் பல படங்களில் கூட நடித்திருந்து மக்களால் பேசப்பட்டும் இருக்கிறார்கள். நடிகர்கள் Rajinikanth – Prabhu இணைந்து ‘தர்மத்தின் தலைவன்’ , ‘குரு சிஷ்யன்’, ‘சந்திரமுகி’ என வெற்றிகரமாக வசூலித்து சாதனை படைத்தனர். இந்த படங்கள் பெரியளவில் பேசப்பட்ட காரணம், Rajinikanth மற்றும் Prabhu ஒரு அருமையான ஜோடி என்பதுதான். இருவருமே ஹீரோவாக திரைத்துறையில் அசத்தியவர்கள். இருவரும் சேர்ந்து நடித்த காட்சிகளில் அவர்களின் பாத்திரத்தில் எந்த ஒரு ஏற்றத்தாழ்வு இல்லாமல், கதையின் போக்கை மாற்றாமல் இயல்பாக நட்பையும் நகைச்சுவையும் வெளிப்படுத்தினர்.

இதை போலவே 2000ம் ஆண்டுக்கு பின் இரண்டாவது ஹீரோ என்ற புது மாற்றம் ஏற்பட்டது. ‘ஷாஜகான்’, ‘மின்சார கனவு’, ‘காதல் தேசம்’ என இரண்டு கதாநாயகர்கள் கொண்ட படங்கள் வர தொடங்கியது. இந்த படங்களும் Multi starrer என்று ஒப்புக்கொள்ள முடியும். ஆனால் இந்த படங்களில் கதைக்கு ஏற்ப, இரண்டு அல்லது மூன்று நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படங்களில் மற்றுமொரு ஒற்றுமை- முக்கோண காதல். இருவர் ஒரே பெண்ணை தெரியாமல் காதலிப்பதும், அந்த கதையை தெளிவாக மக்களிடம் கடத்தி செல்லவே இரண்டு நாயகர்கள் இருந்தார்கள்.

90கள் முதல் 2000த்தின் தொடக்கத்தில் வந்த படங்கள் பல நாயகர்கள் நாயகிகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் பெரிய முன்னனி நடிகர்களை நடிக்க வைக்க வேண்டும் என்று எழுதப்படவில்லை. 1991ல் ‘தளபதி’ வெளிவந்து, மலையாள நடிகர் மம்முட்டி, தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹிந்தி நடிகர் அம்ரிஷ் பூரி, முன்னணி நடிகை ஸ்ரீவித்யா, பானுப்ரியா, ஷோபனா, இளம் நடிகர் அரவிந்த் ஸ்வாமி என பெரிய பட்டாளம் நடித்திருப்பார்கள். Multi starrer படங்களின் மீது புதிய வெளிச்சம் போட்டு காட்டி, மணிரத்னம் மிக எளிமையான, எதார்த்தமான கதாப்பாத்திரங்களை எழுதி இயக்கி இருப்பார். இவ்வளவு நடிகர்கள் ‘தளபதி’ படத்தில் இருந்தும் எந்த இடத்திலும் அவர்களின் காட்சிகள் திணிக்கப்படவில்லை. போட்டி போட்டு ஒரு நடிகருக்கு அதிக காட்சிகளோ பெரிய ஆர்ப்பாட்டமோ இல்லை.

ஒவ்வொரு இயக்குனரின் விருப்பத்தை பொருத்தது என்ற வாதம் வைக்கப்படும். ஆனால் பல இயக்குனர்கள் ஒன்று கூடி, உலக சாதனை படைத்த படமான ‘சுயம்வரம்’ multi starrer படங்களின் மணி மகுடம் ஆகும். 30 பிரபல நடிகர்கள், 14 இயக்குனர்கள், 4 இசை அமைப்பாளர்கள் கொண்டு ஒரே நாளில் எடுக்கப்பட்ட படம். 1999ல் கமர்ஷியல் ட்ராமா படமாக எழுதி, எந்த இடத்திலும் பார்ப்பவர்களுக்கு சலிக்காமல் எடுக்கப்பட்ட படம். உலக சாதனையை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டாலும் பல நடிகர்கள் நடித்து அதில் நகைச்சுவை, காதல், ட்ராமா என அத்தனையும் ஒன்றாக வேலை செய்வது சாத்தியம் இல்லாத எண்ணம்.

2000த்தில் வெளியான ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’, முன்னனி நடிகர்கள் தபு, ஜஸ்வர்யா ராய், மம்முட்டி, அஜித் குமார், அப்பாஸ், ஸ்ரீவித்யா நடித்திருப்பார்கள். பிரபல ஆங்கில நாவலின் கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப எடுத்திருப்பார் ராஜிவ் மேனன். இந்த படத்திலும் எந்த பாத்திரமும் அதை நடிக்கும் நடிகர்களின் புகழை வைத்து எடுக்கப்படவில்லை. படத்தில் இயல்பாக அனைவரும் நடித்து தற்போதைய multi starrer படங்களை போல் இல்லாமல் கதையை விட்டு விலகாமல் அசத்தலாக நடித்திருப்பார்கள். 2001ல் வந்த ‘பிரண்ட்ஸ்’ மற்றும் 2002ல் வெளியான ‘பஞ்சதந்திரம்’ படங்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கமர்ஷியல் வெற்றி படங்கள். இரண்டு படங்களும் பெரிய நடிகர்கள் நடித்து, அதிரடியாக கலக்கியிருப்பார்கள். இரண்டு படங்களும் தரமான திரைக்கதைக்கு சான்றாகும், நகைச்சுவையை தாண்டி திரையில் வரும் நடிகர்களின் பொருத்தம் அற்புதமாக அமைந்திருக்கும். பிரபல நடிகர்கள் மட்டும் இணைந்து நடிக்காமல் வளர்ந்து வரும் நடிகர்கள், இளம் நடிகர்கள் படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்தை பார்ப்பவர்களும் எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்த்து ரசித்தனர். இந்த மாதிரி மணிரத்னம் இயக்கி 2004ல் வந்த ‘ஆயுத எழுத்து’ படமும் மூன்று கதைகளை கொண்ட படம். Parallel கதையில் மூன்று கதையிலும் பிரபல நடிகர்களை நடிக்க வைப்பதை தாண்டி, கதைக்கு தேவையான நடிகர்களை கமர்ஷியல் வெற்றிக்காக இல்லாமல் படமாக்கி இருப்பார்.
இதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் 2018ல் வந்த ‘செக்க சிவந்த வானம்’ படமும் multi starrer படமானாலும் முன்னால் இருந்து போல் இதில் நடிகர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவரினர். பல திரமையான நடிகர்கள் இருந்தும் படத்தின் கதைதான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சில பாத்திரங்களின் பங்கு குறைந்து, சிலரின் பங்கு அதிகமாக தெரிந்தது ஒரு மாற்றமாக மணிரத்னத்தின் படங்களில் அமைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஆக்ஷன் படத்தை மணிரத்னம் கையில் எடுத்து கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

சமீபத்தில் இயக்குனர்களால் வெற்றிகரமாக கையில் எடுக்கப்படும் யுக்தி தங்களுக்கென பட யுனிவர்ஸ் ஒன்றை எடுப்பது. வெஸ்டர்ன் படங்களின் தாக்கம் ஆகவும் இதை எண்ணலாம் அல்லது கமர்ஷியல் படத்தை உருவாக்க பிரபல நடிகர்களை படத்தில் சேர்ப்பது என்றும் எண்ணலாம். கதையின் கவனம் சற்றே விலகி அதில் வரப்போகும் நடிகர், அவரின் மாஸ் பில்டப் காட்சிகள், அதில் அவர்களின் தோற்றம் பற்றியதாக மாறி வருகிறது சமீபத்தில் உருவாகும் multi starrer படங்கள். படத்தில் கதையின் முன்னேற்றத்திற்கு கதாபாத்திரத்திரங்களை எழுதாமல் படத்தின் மற்றுமொரு மாஸ் பாத்திரமாகவோ அல்லது திரையில் தோன்றும் நடிகரின் ரசிகர்களை கணக்கில் கொண்டு இன்றைய கதைகள் எழுதப்படுகிறது.

எல்லா சமகால multi starrer படங்களும் இந்த கண்ணோட்டத்தில் பார்த்துவிட முடியாது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் எல்லா படங்களும் பல நடிகர்கள் கொண்டு எடுக்கப்படுவது தான். கதையில் வரும் பாத்திரங்கள் இளம் நடிகர்களை வைத்து, எதார்த்தமான முறையில் படமாக்கி இருப்பார். Multi starrer படங்களில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் படங்களுக்கு தனி இடம் உண்டு. கமர்ஷியல் ஹிட் படமாக மட்டுமில்லாமல் படத்தை பார்க்கும் மக்களும் அந்த நடிகர்களின் பங்கு கதைக்கு முக்கியமா என அளவிட முடியும். எந்த ஆரவாரமும் இல்லாமல் வந்த ‘சென்னை 600 028’ படங்கள், ‘சரோஜா’, ‘மங்காத்தா’, ‘கோவா’ ஆகிய படங்களில் இதை பார்க்க முடியும். இப்போதும் கதையின் போக்கை மாற்றாமல் multi starrer படங்கள் எடுக்க முடியுமா என்பது 2024ல் வெளியாகும் ‘தக் லைஃப்’, ‘கங்குவா’ போன்ற பெரிய பேனர் படங்களின் வழியாக தெரியவரும். அடுத்தடுத்து போட்டி போட்டு அப்டேட்களை வெளியிடும் படக்குழுவினர் கதையில் அந்த நடிகர்கள் தெளிவாக பயன்படுத்தினால் பார்க்கும் ரசிகர்களுக்கும் சலிக்காமல் இருக்கும். மாஸ் என்ற பெயரில் சில நிமிட கைத்தட்டலுக்காக பிரபல நடிகர்களை கதையில் சேர்க்காமல் கதையில் முழுமையை கருத்தில் கொண்டு படம் இயக்கினால் தமிழ் சினிமாவில் multi starrer படங்களை மீண்டும் புது பொலிவுடன் காணலாம்!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]