சிரிப்பு என்பது மருந்து என்பார்கள். பிறரை சிரிக்க வைக்கும் ஆற்றலும் பண்பும் அனைவரிடமும் இல்லை, அப்படி சினிமாவில் Comedy கதாப்பாத்திரங்களில் பிரகாசித்த பெண்கள் இவர்கள்.
Comedy பாத்திரங்கள் திரையில் தோன்றியதும், அவர்களின் ஆடை, தோணி, பேச்சு, நக்கல், என பல விதங்களில் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தி, சினிமாவில் பலர் ஆண்டு ஆண்டுகளாக நிலையாக காமெடியன் என்ற பட்டத்துடன் நிலைத்தனர். இதில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. பெண் comedy கலைஞர்கள் மிக கம்மியான எண்ணிக்கையில் தமிழ் சினிமாவில் இருப்பதற்கு பெரிய காரணம், பெண்கள் பெரியளவில் சினிமாவில் comedy பாத்திரங்களில் நடிக்க முன்வருவதில்லை. மற்றொரு காரணம், சினிமாவில் ஹீரோயின்களையே சிறிய காலத்தில் அம்மா, அக்கா, அன்னி என சப்போர்ட்டிங் பாத்திரங்களில் நடிக்க வைப்பதும், காமெடி செய்ய வரும் சில பெண்களும் இந்த போக்கில் காணாமல் போவது தான். ஆண் நகைச்சுவை நடிகர்கள் பலரும் சினிமாவில் அவர்களுக்கு இருக்கும் போட்டியில் நீண்ட நாட்கள் நிலையாக இருக்க முடிவதில்லை. ஆண்களின் இயலாமை பெண்களுக்கு இலக்கணம் என்பது இங்கு சொல்லவில்லை, ஆனால் பெரும்பாலும் காமெடி என்பது சில முன்னணி நடிகர்களின் உழைப்பிற்கு கிடைத்த பலன்.

Comedy என்பது பெண்களால் முடியும் என்று காட்டி, சினிமாவில் பல படங்களில் நடித்தவர்கள் கலர் படங்களுக்கு முன்னாடியே இருந்தார்கள். T.A.மதுரம் கதாநாயகியாகவும், பாடகியாகவும், காமெடி நடிகையாகவும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் பெரும்பாலான படங்களில் தனது வருங்கால கணவர் N.S.கிருஷ்ணன் உடன் சேர்ந்து நகைச்சுவை கூட்டணியில் அசத்தியுள்ளார். இவரின் துடிப்பான நக்கல் கலந்த நகைச்சுவை N.S. கிருஷ்ணனுடன் நன்றாக வேலை செய்தது. ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’, ‘அம்பிகாபதி’, ‘ஆரியமாலா’ போன்ற படங்களில் இவரை ரசிக்கலாம். இதே போல் M.சரோஜா அவர்களும் தனது வருங்கால கணவரான K.A. தங்கவேலு உடன் நடித்தார். இவர் கதாநாயகியாகவும், நகைச்சுவை தோற்றங்களிலும் நடித்தவர். 300க்கும் மேற்பட்ட படங்களில் தன் கணவருடன் வல்கர் comedy அதாவது அநாகரிகமான நகைச்சுவை என்பதை கையில் எடுக்க கூடாது என தீர்க்கமாக இருந்த ஜோடி. ‘கல்யாண பரிசு’, ‘தெய்வ பிரவி’, ‘அடுத்த வீட்டு பெண்’ போன்ற படங்களில் M.S- K.A.T கூட்டணியில் வயிறார சிரிக்கலாம்.

இவர்களுக்கு பின் சினிமாவில் பல ஆண்டுகளாக பெண் நகைச்சுவை கலைஞராக கோலாச்சியவர் ஆச்சி மனோரமா. நகைச்சுவை மட்டுமல்லாமல் துணை பாத்திரங்கள், குணச்சித்திர வேடம், பாடகி என பண்முகம் கொண்டவர். கண்ணதாசனின் ‘மாலையிட்ட மங்கை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் நடிகர் நாகேஷ் உடன் பல வெற்றி படங்களை தந்தார். கதாநாயகி என்ற அடைமொழியை தலையில் ஏற்றாமல் அவரின் ஆற்றலை வளர்த்துக்கொண்ட மனோரமா அதிக படங்கள் நடித்த ஒரே இந்திய நடிகை என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 1985லேயே 1000 படங்களில் நடித்த ஆச்சி மனோரமா, தனது ஒப்பில்லாத நகைச்சுவை திறனால் இன்றும் திரையில் வாழ்கிகிறார்.

ஆச்சி மனோரமாவை தொடர்ந்து இன்றைக்கும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வரும் நடிகை கோவை சரளா. சிறு வயது முதல் எம் ஜி ஆர் படங்களை பார்த்து நடிக்க வேண்டும் என்ற கனவுடன், பள்ளி படிக்கும்போதே நடிக்க ஆரம்பித்தவர். நகைச்சுவை என்பது தான் நடிக்கும் குணச்சித்திர வேடங்களிலும் ஒரு பங்காக இணைத்து அனைவரையும் சிரிக்க வைத்தவர் கோவை சரளா. ‘சதிலீலாவதி’, ‘விரலுக்கேத்த வீக்கம்’ போன்ற துணை வேடங்களிலும் கூட அவரின் நடிப்பில் எவ்வளவு சிறிய வேடத்தையும் தனதாக்கி கொண்டார். தேசிய விருது, நந்தி விருது என பல விருதுகள் பெற்ற திரமையான நடிகை.

பிற மொழி நடிகைகள் தத்தி தத்தி தமிழ் சினிமாவில் நிலையாக நிற்கவே தடுமாறும் போது, ஊர்வசி மட்டும் கதாநாயகி, நகைச்சுவை பாத்திரம், துணை வேடம், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என இன்றும் தனது அயராத நடிப்பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவரும் சிறு வயது முதலே நடிக்க தொடங்கி குழந்தை நட்சத்திரமாக இருந்தார். பின்னர் பள்ளி படிக்கும்போதே கே பாக்கியராஜின் ‘முந்தானை முடிச்சு’ மூலம் கதாநாயகி ஆனார். இதன் வெற்றியைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் பல ஆண்டுகளாக தனக்கென தனி இடத்தை பிடித்தது, நகைச்சுவை நடிகைகளுள் எதார்த்தமான காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘மகளிர் மட்டும்’, ‘பஞ்சதந்திரம்’ போன்ற பல வெற்றி படங்களை தந்துள்ளார்.

தேவதர்ஷினி சுகுமாரன் தற்போது தமிழில் அதிகளவில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நெறியாளராக தொடங்கி இப்போது தொடர்ந்து சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பவர், ‘பார்த்திபன் கனவு’ படத்தில் நகைச்சுவை நடிகையாக தொடங்கி ‘காஞ்சனா 2’ல் கோவை சரளாவுடன் நகைச்சுவையில் அசத்தி வருபவர். பல தெலுங்கு படங்களிலும் துணை பாத்திரங்கள் நடித்து வருகிறார்.

வித்யூலேகா ராமன் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகை, தமிழ், தெலுங்கில் பல படங்களில் இவரை சமீபத்தில் பார்த்து ரசித்து இருப்போம். தமிழில் ‘நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் அறிமுகமாகி பின்னர் பல நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் தெலுங்கில் நடித்து வருகிறார் வித்யூலேகா.
இன்னும் சில நடிகைகள் தங்களின் நகைச்சுவை மூலம் பிரபலமான கதாப்பாத்திரங்கள் தந்துள்ளனர். குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் அருள், படிக்காதவன் போன்ற படங்கள் வழியாக நகைச்சுவை நடகையாகியவர் ஆர்த்தி கணேஷ். சந்தானத்தின் ஜோடியாக ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா, பின்னர் சில நகைச்சுவை வேடங்களில் நடித்தார். சமீபத்தில் டாக்டர் படத்தில் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகை தீபா சங்கரும் தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகள் வலம் வர வாய்ப்புகள் உண்டு.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]