மருந்தைக்கூட சர்க்கரையோடு கலந்துகொடுத்தால்தான் இந்தியர்கள் சாப்பிடுவார்கள் என்பார்கள். அதுப்போல் கசப்பான உண்மைகளை புன்னகையின் வழியே கடத்தி சமூக அவலத்தை செவிட்டில் அறைந்தாற் போல் பார்வையாளர்களுக்குச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிரண் ராவ்.

அமீர்கானின் முன்னாள் மனைவியான கிரண் ராவ் இயக்கியிருக்கும் படம்தான் லாபதா லேடீஸ். தொலைந்து போன இரண்டு பெண்களின் கதையாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த ‘ Laapataa Ladies ‘-க்கு தற்போது பாராட்டுகள் குவிகிறது.
இந்தி ஹார்ட்லேண்ட் என சொல்லப்பட்டும் உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் இன்னமும் பெண்களுக்கான சம உரிமை என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது என்கிற உண்மையை போட்டுடைக்கிறது ‘லாபதா லேடீஸ்’.
வட இந்தியாவில் பெண்ணுக்கு முக்காடு போட்டு முகம் யாருக்கும் தெரியாமலேயே திருமணம் முடிக்கும்பழக்கம்தான் இன்றுவரை இருந்துவருகிறது. அதன்படி மணம்முடிக்கும் வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் ரயிலில் ஏறி ஊருக்குவரும்போது தங்கள் மனைவிகளை அடையாளம் தெரியாமல் மாற்றிக்கூட்டி வந்துவிடுகிறார்கள். வீட்டுக்கு வந்தப்பிறகுதான் உண்மைதெரிகிறது மனைவி மாறிவிட்டாள் என்பது.
தீபக்குமார் தன் மனைவி பூல்குமாரிக்கு பதிலாக ஜெயா என்கிற இன்னொரு பெண்ணை வீட்டுக்கு கூட்டு வந்துடுகிறான். அதேப்போல் மற்றொரு கிராமத்துக்குப் போய் இறங்கும் ஜெயாவின் கணவன் பூல்குமாரியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாலும ”மனைவி மாறினால் என்ன இவளையும் வளைத்துப்போடலாம்” என நினைக்கிறான்.
முதன்முறையாக அப்போதுதான் வெளி உலகத்தையேப் பார்க்கும் பூல்குமாரி தன்னிடம் தவறாக நடந்துகொள்ளும் அவனிடம் இருந்து தப்பிக்கிறாள். வேறொரு கிராமத்தில் ஒரு டீக்கடையில் தஞ்சம் புகுகிறாள். அங்கே தன் அம்மா கற்றுக்கொடுத்த ஸ்வீட்டை செய்து புகழ்பெறும் பூல்குமாரி தீபக் குமார் நிச்சயம் வந்து தன்னை மீண்டும் அழைத்துச்செல்வான் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்.
தீபக்குமாரோடு போன ஜெயா தன்னுடைய உண்மையான பெயரை எல்லாம் மாற்றிச்சொல்லி அங்கே வாழ ஆரம்பிக்க, தீபக் குமார் தன் உண்மையான மனைவியான பூல்குமாரியைத் தேடிப்போனானா, இருவரும் இணைந்தார்களா, இல்லையா என்பதுதான் கதை.
”மூஞ்சை மூச்சு அடைக்கிற மாதிரி முக்காடு போட்டு மூடிட்டீங்க… தலையை நிமிந்து பார்க்கக்கூடாது, கால் கட்டை விரலை மட்டும்தான் பார்த்துட்டு உட்காரணும்னு சொல்லிட்டீங்க… நிமிந்து பார்த்திருந்தாத்தானே கூட்டிட்டுப்போறது புருஷனா இல்லையான்னு தெரியும்” என ஜெயா கதாபாத்திரம் கேட்கும் கேள்வி உண்மையிலேயெ முகத்தில் அறைகிறது.
Star Movie Review: 5 Star வாங்கினாரா Kavin… ‘Star’ சினிமா எப்படியிருக்கிறது?!
பெண்களின் பிரச்சனைகளை பிரச்சாரமாகச் சொல்லாமல் நகைச்சுவையின் வழியே வலியைக் கடத்தியிருக்கிறார் கிரண் ராவ். எந்த செய்தியையும் மிகைப்படுத்தவோ, வலிந்து திணிக்கவோ இல்லை. போகிற போக்கில் பெண்களுக்கு இப்போதும் நடக்கும் கொடுமைகளைச் சொல்லியிருப்பதற்காக கிரண் ராவுக்கு பெரிய சல்யூட் அடிக்கலாம். இரண்டு பெண்களின் கதையை உண்மையாகவும், இதயப்பூர்வமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
வலிமையான பெண்ணாக இருப்பதற்கு ஆடம்பரமான பட்டங்கள் அல்லது அதிக சம்பளம் தரும் வேலைகள் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் மஞ்சு மாய் ஒரு தனித்துவமான பாத்திரம். இந்த கதாபாத்திரம் சுதந்திரமாக இருப்பதற்கும் சமத்துவத்தைத் தேடுவதற்குமான உள் வலிமையைச் சொல்கிறது. அவரது பயணம் ஊக்கமளிக்கிறது மற்றும் படத்துக்கு ஆழம் சேர்க்கிறது.
விகாஷ் நவ்லகாவின் ஒளிப்பதிவு 2000-களின் முற்பகுதியிலான வட இந்திய கிராமத்தை உயிர்ப்பித்து தந்திருக்கிறது. ராம் சம்பத்தின் இசை கதையின் தன்மையோடு நன்றாகப் பொருந்தி, அதன் அழகைக் கூட்டுகிறது.
வலுவான நடிப்பு, சிந்தனைமிக்க இயக்கம் மற்றும் அவல நகைச்சுவை என எல்லாவற்றையும் கலந்து சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது லாபதா லேடீஸ்! மிஸ் பண்ணாம பாருங்க!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]