இந்திய ராணுவ படையினரின் ஒப்பிலல்லா வீரத்துக்கும், அவர்களின் குடும்பத்தினரின் அலாதியான தைரியத்தையும் தியாகத்தையும் மிக தெளிவாக பேசியுள்ள படம் ‘அமரன்’. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை திரையில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றி இதுவரை பல படங்கள் வந்திருந்தாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள ‘அமரன்’ படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த எதிர்பார்ப்புக்களை படக்குழுவினர் பூர்த்தி செய்தார்களா? ‘அமரன்’ என்ற பெயருக்கு ஏற்ப, இந்த படத்தின் கதையும் முடிவும் மனதிற்கு உருக்கமாக அமைந்து, கலக்கத்தை ஏற்படுத்தியது. நிஜத்தில் நாம் அனைவருக்கு தெரிந்த ஒரு கதையில் நமக்கு தெரியாத பலவற்றை சேர்த்து ஒரு உணர்வுபூர்வமான படமாக இயக்கியுள்ளனர்.
‘அமரன்’ படத்தின் கதைக்களம்
முகுந்த் வரதராஜன் அவரின் இளம் வயது, காதல் கதை, ராணுவ பயணம் என மூன்று பிரிவாக படத்தின் கதை அமைந்துள்ளது. அவர் சென்னையில் கல்லூரி இளைஞனாக படித்த காலம், அங்கு அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸை பார்த்தது, இருவரின் காதல் கதை, உணர்ச்சிகரமான திருமண போராட்டம் என நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பில் காதல் காட்சிகள் ஒரு பக்கம் இருக்க, ராணுவத்தில் சேர்ந்த பின்னர் முற்றிலும் மாறுபட்ட வெளிச்சத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.
‘அமரன்’ படத்தின் திரைக்கதை
சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜில் கல்லூரி மாணவராக சேரும் முகுந்த் வரதராஜன், அங்கு தன்னுடன் படிக்கும் மாணவி இந்து ரெபேக்கா வர்கீஸை சந்திக்கிறார். இருவரும் காதலில் விழுவது, அவர்களின் புரிதல் மற்றும் இளம் காதல் என படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பில் இந்த காதல் காட்சிகள் பொருந்தியுள்ளது.
இவர்களின் காதல் திருமணமாக மாற குறுக்கே மதம், மொழி என பல தடைகள் இருப்பதால், முதலில் இருவரின் வீட்டார் ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் காட்சிகளில் நடிகை சாய் பல்லவியின் எதார்த்தமான நடிப்பு பிரம்மாதம். ராணுவத்தில் முகுந்த் வரதராஜனுக்கு உள்ள ஈர்ப்பும் ஒரு ராணுவ அதிகாரியாக பயிற்சி எடுப்பது என அவரின் தனிப்பட்ட விருப்பமும் இவர்களின் திருமணத்துக்கு தடையாக இருக்க, ஒருவழியாக இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
கடுமையான ராணுவ பயிற்சி முடிந்து ராணுவ முகாமிற்கு செல்லும் முகுந்த் வரதராஜன், முதலில் ஒரு லெப்டினன்ட் ஆக தொடங்கி, பின்னர் தன்னுடைய பட்டாலியனுக்கு கேப்டன் என அவரின் ராணுவ பயணம் தீவிரமான ஒன்றாக அமைகிறது. சிவகார்த்திகேயன் மட்டுமல்லாமல் ராணுவ அதிகாரியாக நடிக்கும் அனைவரும் இந்திய ராணுவப்படையினரின் வலிமையையும் வீரத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
‘அமரன்’ படத்தின் ஒரு முக்கிய புள்ளியாக, இந்து ரெபேக்கா வர்கீஸ் அவர்களின் கண்ணோட்டத்தில் தான் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முகுந்த் வரதராஜனின் கதையில் அவரின் மனைவி இந்து ரெபேக்கா எப்படி அவரின் குடும்பத்தையும், அவருக்காக காத்திருக்கிறார் என்ற காட்சிகளில் மிக எளிமையாக மக்களின் மனதை கவருகிறார் நடிகை சாய் பல்லவி. ராணுவ எல்லையில் முகுந்த் போராடிட, தன்னுடைய குடும்பத்துக்காகவும், கணவருக்காகவும் தனிப்பட்ட போராட்டத்தை அற்புதமாக வெளிப்படுத்துகிறார் சாய் பல்லவி.
இதற்கிடையில் மேஜர் என்ற பொறுப்பில் உயர்த்தப்பட்டு, 44வது ராஷ்ட்ரிய ரைபில்ஸ் பொறுப்பில் செக்கிறார் முகுந்த். மேஜர் முகுந்த் வரதராஜனாக, காஷ்மீருக்கு செல்லும் அவர், தன்னுடைய குழுவுடன் தீவிரவாதிகளை எதிர்த்து ஒரு பெரிய திட்டத்துடன் களமிறங்குகிறார். இதில் பல அரசியல் சிந்தனைகளும் கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள தீவிரவாத தலைமையை எதிர்த்து அவர்களை வேரோடு அளிக்கும் திட்டத்திற்கு தலைமை தாங்குகிறார் மேஜர் முகுந்த் வரதராஜன். படத்தின் முதல் பாதியில் ஒரு அழகான காதல் கதையுடன் நாம் அனைவருக்கும் முகுந்த் வரதராஜன் அவர்களின் உணர்ச்சிகரமான ஒரு முகத்தை எவ்வித தளர்வுமில்லாமல் காட்டிய இயக்குனர், இரண்டாம் பாதியில் ராணுவ வீரராக அவரின் கடமையை முதன்மையாக காட்டியுட்டுள்ளார்.
படத்தின் போக்கு கடைசியில் எங்கு சென்று முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததால், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் காதல் காட்சிகளை சற்றே கசப்பான மெல்லுணர்வுடன் தான் பார்க்க முடிந்தது. படத்தின் கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என்று மற்ற படங்கள் நகர்ந்தாலும், இந்த படத்தின் முடிவு மேஜர் முகுந்த் வரதராஜனின் இழப்பு என்பதால் மற்ற காட்சிகளில் திரைக்கதையை நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் எழுதியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
அமரன் படத்தின் கதாபாத்திரங்கள்
அமரன் படத்தின் கதாநாயகனாக ‘மேஜர் முகுந்த வரதராஜன்’ அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று அதை அர்ப்பணிப்புடன் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். கல்லூரி மாணவராக, காதலராக, ராணுவ பயிற்சி பெரும் இளைஞனாக, மேஜராக என கெட்டப்பில் மட்டுமன்றி நடிப்பிலும் வித்தியாசம் காட்டியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி, ‘இந்து ரெபேக்கா வர்கீஸ்’ அவர்களின் பாத்திரத்தை ஏற்று படத்தின் ஒரு முக்கிய புள்ளியாக கதைக்கு மிகவும் தேவையான உணர்ச்சிகளை எளிமையாக கடத்தியுள்ளார். காதலியாக முகுந்த் வரதராஜனின் கனவுகளுக்கு ஆதரவு கொடுப்பதும் துணைவியாக அதே கனவுகளால் உண்டாகும் குழப்பங்கள் மற்றும் விரக்தியை திரையில் நுணுக்கமான நடிப்பால் வெளிப்படுத்தி படத்தில் தன்னுடைய முக்கியத்துவத்தை நிலை நிறுத்தியுள்ளார்.
ராணுவத்திற்கு செல்லும் வீரர்களை விடவும் அவர்களை போராட்டக்களத்துக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் அவருக்காக வேண்டி காத்திருக்கும் ஒரு தவிப்பான அம்மாவாக ‘கீதா’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை கீதா கைலாசம்.
புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ் ஆகியோரின் நடிப்பும் பார்ப்பதற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. இருவரின் நடிப்பும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. சிப்பாய் ‘விக்ரம் சிங்’ மற்றும் கர்னல் ‘அமித் சிங் தப்பாஸ்’ என்ற கதாபாத்திரங்களை சிறப்பாக காட்டியுள்ளார் இயக்குனர்.
அமரனின் பலம்
படத்தின் முதல் பாதியில் முகுந்த் வரதராஜன் மற்றும் சிந்தித்து ரெபேக்கா வர்கீஸ் இடையே உள்ள காதல் காட்சிகள் ரசிகர்களிடம் ‘அமரன்’ படத்துக்கான அடிக்கல்லாக அமைகிறது. இருவரின் நடிப்பில் அவர்களின் காதல் மலர்ந்து தெளிவான புரிதலுடன் உள்ள திருமணம் வரை மிக அருமையாக எழுதியுள்ளார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
நடிகை சாய் பல்லவியின் தத்ரூபமான நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கும் போர் காட்சிகளுக்கு இணையாக இவர் திரையில் தோன்றும் காட்சிகளில் உணர்ச்சிகளை தூண்டி ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்துகிறார். இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற பாத்திரத்தை முழுமையாக தனதாக்கியுள்ளார் சாய் பல்லவி.
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷின் பின்னணி இசையில் படத்தின் காதல், போராட்டம், ராணுவ வீரர்களின் கடுமையான உழைப்பு ஆகிய உணர்ச்சிகள் மெருகேற்றப்பட்டு படத்துக்கு மிகவும் முக்கியமான பலமாக அமைகிறது.
ராணுவ போர் காட்சிகளில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் நேர்த்தி தெளிவாக திரையில் தெரிகிறது. மக்களை முழுமையாக இந்த காட்சிகளால் கவர்ந்துள்ளார்.
அமரனின் பலவீனம்
படத்தின் முதல் பாதிக்கு மாறாக இரண்டாம் பாதியில் ‘நாம் ஏற்கனவே இது போன்ற காட்சிகளை பார்த்துள்ளோம்’ என்ற உணர்வை கொடுக்கிறது பல காட்சிகள். அப்படி சேர்க்கப்பட்டுள்ள சில காட்சிகள் சற்றே தளர்வை ஏற்படுத்துகிறது.
#Amaran is an ode to this son of the soil #MajorMukundVaradarajan and each soldier of the indian Army!
— Rajkumar Periasamy (@Rajkumar_KP) October 31, 2024
I thank each and everyone who has been a part of this journey! Hope Amaran is appealing to one and all!
I humbly surrender the film to the beloved audience!
Thank you… pic.twitter.com/tSVbKK1JBs
‘அமரன்’ இந்திய ராணுவ வீரர்களின் ஈடில்லா துணிச்சலையும், அவர்களின் அர்ப்பணிப்பை மட்டும் படமாக இல்லாமல், அதே ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கடந்து செல்லும் உணர்வுகளையும், எந்த கணத்திலும் அவர்களின் சகோதரர், மகன், கணவன் பற்றிய வருந்தத்தக்க செய்தி கிடைத்துவிடுமோ என்று அவர்களின் விரக்தியான உணர்வையும் பேசும் படம். உணர்ச்சிகளின் மிகுதியுடன், அழகிய காதல் கதையாக வெளியாகியுள்ள ‘அமரன்’ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் ராணுவ வீரர்களுக்கும் ஒரு அழகிய சமர்ப்பணம்.