ஹிந்தியில் 2018ம் ஆண்டு மாபெரும் வெற்றியடைந்த கிரைம் திரில்லர் படம்தான் ‘அந்தாதுன்’. இந்த படத்தை தமிழில் ‘அந்தகன்‘ என்ற பெயரில் நடிகர் பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்க, அவரது தந்தை பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் தியாகராஜன் அவர்கள் எழுதி இயக்கியுள்ளார்.

அந்தகன் படத்தின் கதைக்களம்
பார்வையற்ற piano வசிக்கும் கலைஞராக பிரஷாந்த் நடித்துள்ள இந்த கதையில், உடன் ஒரு பெரிய நடிகர்குழு நடித்துள்ளார்கள். நடிகை சிம்ரன், ப்ரியா ஆனந்த், நடிகர் கார்த்திக், கே எஸ் ரவிக்குமார், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது ‘அந்தகன்’ திரைப்படம்.

இசை மீது இருக்கும் மிகுதியான ஆர்வத்தை கனவாக கொண்டு இருக்கும் பார்வையற்ற piano கலைஞர் க்ரிஷ் (பிரஷாந்த்), தன்னுடைய திறமையால் பல இடங்களில் piano வாசித்து, லண்டன் செல்ல பணம் சேர்த்து வருகிறார்.
படத்தின் முதல் 20 நிமிடங்களில் அவரின் அன்றாட வாழ்க்கையை காட்டி உடன் அவரின் உண்மை முகத்தை காட்டுகிறார். பார்வையற்றவர் போல நடித்து வரும் க்ரிஷ், ஒரு சந்தர்ப்பத்தில் கதாநாயகி ப்ரியா ஆனந்தை சந்திக்க நேர்ந்து, அவரின் பாரில் piano வாசிக்க தொடங்குகிறார்.

இந்த பாரில் தினசரி அவரின் இசைக்கென பலரும் குவிகிறார்கள். அப்படி அந்த பாரில் இருக்கும் ஒருவர் தான் நடிகர் கார்த்திக். அவரின் சந்திப்புக்கு பிறகு க்ரிஷ் ஒரு பெரிய வலையில் மாட்டிக்கொள்கிறார். நடிகர் கார்த்தியின் இறப்பில் கிரிஷ் என்ற பாத்திரத்தின் பங்கு என்ன? எப்படி இந்த சிக்கலில் இருந்து க்ரிஷ் மீழ்கிறார் என்பதை திரில்லர் கதையாக இயக்கியுள்ளார் தியாகராஜன்.
ஒரு கொலை, சாட்சி ஏதும் இல்லாத இந்த கொலையை மூடி மறைக்கும் கொலையாளிகள், திடீரென தெரியவரும் திருப்பம் என முதல் பாதியில் நிறைய முடிச்சுகள். ‘சிமி’ என்ற கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரனின் நடிப்பு முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் நேர்த்தியாக உள்ளது. நடிகர் பிரஷாந்த் கண் பார்வையற்றவராக முழுமையாக நம்ப வைக்கிறார்.
படத்தின் கதையில் இரண்டாம் பாதியில் ஏற்படும் மாற்றங்களும், அதில் கதாநாயகன் க்ரிஷ் எப்படி ஒவ்வொரு சூழ்நிலையையும் சமாளித்து, தனக்கென ஒரு குழுவை அமைத்து திட்டம் தீட்டுகிறார் என்பதை இழுத்தடிக்காமல், விறுவிறுப்பாக எழுதியிருந்தால் பார்வையாளர்கள் மேலும் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.
அந்தகன் படத்தின் கதாபாத்திரங்கள்
கதாநாயகன் பிரஷாந்த், படத்தின் முதல் காட்சி முதல் கடைசி வரை, ‘க்ரிஷ்’ என்ற தனது பாத்திரத்தை முழுமையாக புரிந்து, ஏற்கனவே நடித்த நடிகரை போல இல்லாமல் தன்னுடைய சாயலை பதிக்கிறார். 90களில் தனக்கு கிடைத்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் ஒரு புது பாத்திரத்தை பரிசாக தந்துள்ளார்.

நடிகை சிம்ரன் ‘சிமி’ என்ற ஒரு Grey கதாபாத்திரத்தில் தொடங்கி பிறகு படத்தின் கதை வளர வளர முழுமையாக ஒரு சைக்கோ பாத்திரமாக மாறுகிறார். இதுவரை அழகான ஹீரோயினாக நடித்து மக்களை மகிழ்வித்த இவர் இந்த படத்தில் முதல் முறையாக ஒரு வில்லியாக அசத்தியுள்ளார்.
சமுத்திரக்கனி ஒரு காவல் துறை அதிகாரியாக, அதற்கு ஏற்ப உடல்கட்டுடன் கம்பிரமாக நடித்துள்ளார். அவருக்கும் வனிதா விஜய்குமாருக்குமான காட்சிகளில் காமெடி கலந்த பயத்துடன் நன்றாகவே நடித்துள்ளார்.
கே எஸ் ரவிக்குமார் அவர்கள் ‘டாக்டர் சாமி’ என்ற பாத்திரத்தில் அவருக்கே உரித்தான ஒரு ஜாலியான வில்லனாக, எந்தவித கவலையுமில்லாத ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் நடிகை ஊர்வசி மற்றும் யோகி பாபு இணைந்து செய்யும் காமெடி ரகளைகள் கதையோடு சரிசமமாக சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகை ஊர்வசியின் தனித்துவமான நகைச்சுவை இந்த படத்தில் அற்புதமாக வேலை செய்துள்ளது.
படத்தில் நடிகர் பிரசாந்தை துரத்தி காதலிக்கும் நாயகியாக ‘ஜூலி’ என்ற பாத்திரத்தில் வருகிறார் நடிகை பிரியா ஆனந்த். முதல் பாதியில் பாடல்களில் வந்து, படம் முழுவதும் அழகான ஒரு ஹீரோயினாக நடித்துள்ளார்.
அந்தகன் படத்தின் பலம்
ஹிந்தியில் ‘அந்தாதுன்‘ படத்துக்கு இணையான நடிகர்களை அந்தந்த பாத்திரத்துக்கு கச்சிதமாக தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் தியாகராஜன். அதிலும் குறிப்பாக நடிகை சிம்ரன் இந்த படத்தில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் பிரசாந்தை காதல் நாயகனாக அதிகம் பார்த்துள்ளோம். அனால் இப்படியான ஒரு திரில்லர் படத்தில் பார்வையற்றவராக மிக இயல்பாக நடித்துள்ளார். பல இடங்களில் நுணுக்கமான முக பாவனைகளால் உணர்வுகளை வெளிப்படுத்தி இந்த படத்தில் ஸ்கோர் செய்துள்ளார்.
‘அந்தகன்’ படத்தில் முதல் பாதி முழுக்க முழுக்க சீரியஸான கதையாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் யோகி பாபுவின் கூட்டணியில் காமெடி காட்சிகள் நன்றாக பொருந்தியுள்ளது. நடிகை ஊர்வசியின் அசால்டான நடிப்பும் யோகி பாபுவின் டைமிங் நகைச்சுவையும் படத்தில் காமெடி காட்சிகளை பூர்த்திசெய்துள்ளது.
அந்தகன் படத்தின் பலவீனம்
ஹிந்தி இயக்குனர் ஸ்ரீராம் ராகவன், திரைக்கதையில் எந்தவித சோர்வும் இல்லாமல், ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒரு சுவாரசியமான கதையை இயக்கியிருப்பார். அனால் அதே திரைக்கதையை தமிழ் மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது ‘அந்தகன்’ படத்தின் பலவீனம்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்தின் முதல் பாதியில் உள்ள பாடல்கள் கதையுடன் ஒன்றாமல் உள்ளது. இரண்டாம் பாதியில் கதையின் ஓட்டத்துக்கு ஏற்ப பின்னணி இசை பொருந்தியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]