சமுதாயத்தில் நடைமுறையில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது தான். அதை படத்தின் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தான் ‘பாட்டில் ராதா’. பா. ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், மாறன், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.
பாட்டில் ராதா திரைக்கதை
காட்டிட மேஸ்திரி வேலை பார்க்கும் ராதா, தினமும் மது அருந்திவிட்டு வெளியிலும் நாட்டமில்லாமல், குடும்பத்திலும் இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குடிபோதைக்கு அடிமையாகி தன்னுடைய குழந்தைகள் பற்றி கூட கவலைப்படாமல் வருமானம் அனைத்தையும் நண்பர்களுடன் குடிக்க செலவழிக்க, இன்று பெரும்பாலான குடும்பங்களை போல வீட்டிலும் நிம்மதி இல்லாமல் காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியை சந்தேகப்படும் போக்கில் ராதா மாறிவிடுகிறார்.
கணவரின் குடிப்பழக்கத்தை விட்டு விலக்க, அவரின் மனைவி அஞ்சலை அவருக்கே தெறியாமல் அவரை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்கிறார். குடித்து வீட்டிற்கும் நாட்டிற்கும் கெடுதல் செய்யும் விதமாக இருக்கும் நபர்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க ஒரு மறுவாழ்வு மையத்தை நடத்தும் அசோகன் என்பவரின் உதவியுடன் ராதாவை அங்கு சேர்க்கிறார் அஞ்சலை. இவரைப்போலவே குடும்பத்தினரால் சேர்க்கப்பட்ட மற்ற நோயாளிகள் படும் அவஸ்தை மற்றும் குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாமல் தவிப்பதையும் பார்த்து அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தப்பித்து மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். இதனால் அவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும், போதையில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதும் தான் மிதி கதை.
தனித்துவமான கதாபாத்திரங்கள்
ராதாமணி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர், அதன் பிடியில் இருந்து விடுபட போராடும் உணர்வுகளை மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். தத்ரூபமான கதாபாத்திரத்தை அதற்கு ஈர்த்தமாதிரியான பக்குவத்துடன் நடித்து, இயல்பாக நாம் பார்க்கும் கதாபாத்திரங்களை போல மிக எளிமையாக நடித்திருப்பார்.
நடிகை சஞ்சனா நடராஜன் எளிமையான, பாசமான அனுசரணையான மனைவியாக முதல் பாதியில் பெரியளவில் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் இரண்டாம் பாதியில் உருக்கமாக நடித்துள்ளார். கனத்த மனதுடன் தனது குழந்தைகளுக்காக அவர் எடுக்கும் முடிவுகள் அவரின் கதாபாத்திரத்தை தனித்துவமாக்கியுள்ளது.
நடிகர் ஜான் விஜய் வழக்கமான நக்கலான கதாபாத்திரத்தில் இருந்து மாறி, பாட்டில் ராதா படத்தில் அசோகன் என்ற பாத்திரத்தில் வருகிறார். சமூக அக்கறையுடன் உரிமையாக அவரின் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களை சீர்படுத்தும் நெறியாளராக, கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபமாகவும், அன்பாக பேசி வழிநடத்துபவராகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தின் பலம்
இயக்குனர் தினகரன் சிவலிங்கம் மதுபோதைக்கு அடிமையாக இருப்பவர்களின் மனஓட்டத்தை மட்டுமல்லாமல் அவர்களை சுற்றி இருக்கும் உறவினர்களையும், சமூகத்தில் அவர்களை பற்றிய புரிதலையும் ஆழமாக புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப திரைக்கதையை நகைச்சுவையாக ஆரமித்து தத்துவமாக முடித்துள்ளார்.
#BottleRadha is filled with full-on laughter, tears, and life lessons 💙
— Neelam Productions (@officialneelam) January 22, 2025
Bookings Open Now | Releasing in 2 days#BottleRadhaFromJan24 🍻
A film by @Dhinakaranyoji
A @RSeanRoldan Musical@beemji @balloonpicturez #ArunBalaji @generous_tweet @Dhinakaranyoji @gurusoms @sanchana_n… pic.twitter.com/G4dYchUEHb
நடிகர்கள் குரு சோமசுந்தரம், ஜான் விஜய் மற்றும் மாறன் ஆகியோர் தங்களின் அனுபவமிக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கடைசியில் நல்வழிப்படுத்த நடிகர் ஜான் விஜய் பேசும் தருணம் தனித்துவம்.
படத்தின் உணர்வுகள் முதல் பாதியில் நகைச்சுவையாக தொடங்கி பின்னர் மெதுவாக உணர்ச்சிகரமானதாக சூடுபிடிப்பதும்,இரண்டாம் பாதியில் அனைவரும் எதிர்பார்த்த பல காட்சிகளில் மக்களின் கண்ணோட்டத்தில் இருந்து காட்சிப்படுத்தியுள்ளார். கணவரின் குடிப்பழக்கத்தை பொறுத்து வாழாமல் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கவும், தனது குழந்தைகளை தனியாக வளர்க்க அஞ்சலை முன்னெடுக்கும் காட்சிகள் படத்தின் போக்கை மாற்றுகிறது.
படத்தின் பலவீனம்
இரண்டாம் பாதியில் திடீரென வரும் பாடல் படத்தின் போக்கு உணர்ச்சிகரமாக போகும்போது எதிர்பாராத வகையில் வந்தது திசைதிருப்புவதாகவும், மக்களை ஒரு பாடல் வழியாக மகிழ்விக்க வைத்தது போல் இருந்தது. அப்பாடலின் முடிவில் நடக்கும் சம்பவம் கதைக்கு தேவையானது என்றாலும், திடீரென இப்பாடல் இடம்பெற்றது போக்கை சற்று மாற்றியது.
முதல் பாதியில் மறுவாழ்வு மையத்தில் நடக்கும் காட்சிகள் பெரும்பாலான படமாக அமைந்ததும், அங்கு நடக்கும் முரட்டுத்தனமான காட்சிகளும் போதைக்கு அடிமையாவதில் இருந்து தடுக்குமா? அல்லது இப்படியான மறுவாழ்வு மையங்கள் இருப்பதாக பயத்தை மக்களிடையே கொண்டு செல்லும என்ற கேள்வியை ஏற்படுத்துகிறது. இது படத்தின் பலவீனமாக இல்லாமல் ஒரு குறிப்பாக பார்க்கலாம்.
புதுமுக இயக்குனரின் துணிச்சலான தத்துவம் கூறும் படமாக ‘பாட்டில் ராதா‘ அமைந்துள்ளது. நிச்சயமாக சமூகத்திற்கு இன்று தேவைப்படும் படமாக, சிறந்த நடிகர் நடிகைகளை கொண்டு உணர்வுபூர்வமான சித்தரிப்பக இப்படம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகும் பார்த்து ஒன்றிப்போகக்கூடிய கதையாக இப்படம் நிச்சயம் அமையும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]