தமிழில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் தானே இயக்கி நடித்த ‘Love Today’ படத்திலும் வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன் மீண்டும் கதாநாயகனாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘Dragon’ என்ற படத்தில் நடித்துள்ளார். படிப்பு, வாழ்க்கை, நமக்கு சாதகமாக எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் சிக்கல்களை பற்றிய படமாக இளம் நடிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு அமர்க்களமான திரைப்படமாக வெளியாகியுள்ளது ‘டிராகன்’.
‘Dragon’ படத்தின் கதை
பள்ளியில் ஆர்வமாக படித்து 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்ற D. ராகவன், தன்னுடைய காதலை உடன் படிக்கும் மாணவியிடம் பரிமாற, அவள் இக்கால பெண்களுக்கு நன்றாக படிக்கும் பசங்களை பிடிக்காது என குறி மனமுடைய செய்கிறார். இதனால் கல்லூரியிலாவது படிப்பதில் கவனம் செலுத்தாமல் இருக்க சபதம் எடுத்துக்கொண்டு பொறியியல் கல்லூரியில் எதற்கும் அஞ்சாத, தன்னுடைய வாழ்க்கையின் போக்கை புரிந்துகொள்ளாத மாணவனாக மாறுகிறார். மொத்தத்தில் 48 அறியர்களுடன் பட்டம் வாங்கமுடியாமல் வேலைக்கும் செல்லாமல் தன்னுடைய பெற்றோரை ஏமாற்றும் ராகவன், கல்லூரியிலிருந்து காதலித்துவந்த பெண் விட்டு சென்றதும் பணம் சம்பாதிக்க போககூடாத வழிகளை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வேலைக்கு செல்கிறார். எல்லாம் நன்றாக நடக்கும் வேளையில், தன்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கும் நிர்பந்தம் அவருக்கு அமைகிறது. நேர்வழியில் எவ்வித கலப்படமும் இல்லாமல் பட்டம் வாங்க நினைக்கும் ராகவன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? அவரின் தவறான முடிவுகளால் பாதிக்கப்படுவது யார்? என்பது தான் Dragon படத்தின் கதை.
Dragon is all yours from now ♥️ pic.twitter.com/kquRGDhS64
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) February 21, 2025
தனித்துவமான நடிகர்கள்
நடிகர் பிரதீப் ரங்கநாதன், ரகவானாக அல்லது ட்ராகனாக தன்னுடைய உடல்மொழியால் மட்டுமல்லாமல் மிக தெளிவான புரிதலுடன் தேவையான உணர்ச்சிகளை இணைத்து சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாதியில் எவ்வித கவலையுமின்றி வாழ்க்கையின் கோணத்தை வேண்டுமென்றே மாற்றி ஏமாற்றும் பாத்திரத்திலிருந்து இரண்டாம் பாதியில் அவருடைய முடிவுகளால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்கும் பாத்திரம் என தனித்துவம் காட்டியுள்ளார்.
நடிகர்கள் மிஸ்கின், ஜார்ஜ் மரியான், VJ சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் தங்களின் கதாபாத்திரங்களை கதையின் போக்கிற்கு ஏற்ப இயக்குனர் சித்தரிக்க நினைக்கும் விதத்தில் அருமையாக, ரசிக்கும்படியாக நடித்துள்ளனர். திரையரங்குகளில் அதிரடியான சிரிப்பலைகள், இறுதிக்கட்டத்தை நெருங்கும் தருவாயில் நெகிழ்வு என இக்கதாபாத்திரங்களை எழுதியது அருமை.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு அசத்தலான, உருக்கமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் நடிகை கயாடு லோஹர் தன்னுடைய முதல் படத்தில் நிச்சயம் தன்னுடைய திறமையால் கவனம் ஈர்த்துள்ளார்.
படத்தின் பலம்
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஒரு நேர்காணலில் தான் தெளிவாக கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே எழுதி படமாக்குவேன் எனக் கூறியிருப்பதும், ‘Dragon’ படத்தின் கட்டுக்கோப்பான நேர்த்தியான திரைக்கதையும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது. சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கான தேவையும், அணைத்து பாத்திரங்களும் ஒன்றுசேர பயணித்து கதையை நகர்த்திச் செல்வத்தையும் படத்தின் தொடக்க முதல் முடிவு வரை கடைப்பைடித்துள்ளார்.
இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், ரசிகர்ளின் விசில் சத்தத்தை தன்னுடைய அதிரடியான பின்னணி இசையால் துவக்கி வைத்து பின்னர் ஒரு காதல் முறிவு பாடல், அதன் பின் மீண்டும் அசத்தலான துள்ளலான இசையால் கதையோடு பார்வையாளர்களை பிணைத்துள்ளார்.
படத்தின் பலவீனம்
பிரதீப் ரங்கநாதனின் கதாபாத்திரம் ஒருவழியாக திருந்தி தன்னுடைய தவறுகளை முக்கியமாக காதலிக்கும் பெண்ணின் கண்ணோட்டத்தில் உணர்வதற்கு பாத்திரமாக இருந்த கதாபாத்திரம் பல்லவி. நிச்சயமாகி கல்யாணம் செய்துக்கொள்ளப்போகும் இவர்களின் காதல் கதையும், இரு நபர்களின் உணர்வு பெரிமாற்றமும் படத்தின் முக்கிய அம்சமாக இருந்தாலும் கதையின் முக்கியப் புள்ளியில் எவ்வித முடிவும் தெரியாமல் விட்டிருப்பது சற்றே முடிவற்று தெரிகிறது.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ‘Dragon’ படத்தின் அறிவிப்பு முதல் வெளியீடு வரை சொல்லி வைத்து வெற்றிக்கனியை அடித்துள்ளார். தனக்காக யோசித்து, தன்னுடைய வாழ்க்கையை நிர்கதியாக நிறுத்தி எவ்வித நெருடல் இல்லாமல் வாழும் ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்டு பின்னர் அவரின் கண்ணோட்டத்தில் இன்றைய இளைஞர்களுக்கான முக்கியமான கருத்தை அவர்களுக்கு போய் சேரும் வகையில் தெளிவாக எடுத்துள்ளார் இயக்குனர். நிச்சயமாக பார்த்து மகிழ்ந்து, கதையுடன் கலந்து அழ வைத்து சிரிக்க வைக்கும் படம் தான் டிராகன்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]