ஒரு ஊர்ல ஒரு ரவுடி இருந்தானாம்… வெளியூர்காரனுங்க மூணு பேர் அந்த ரவுடியை ஒரு குடிகார காமெடி பீஸ்னு நினைச்சாங்களாம்… கடைசியிலதான் அந்த வெளியூர்காரனுங்களுக்குத் தெரிஞ்சதாம் அவன் காமெடி பீஸ் இல்ல… வயலன்ட்டு மாஸ் பீஸ்னு… உண்மை தெரிஞ்சதும் அந்த ரவுடியும், அந்த வெளியூர்காரனுங்களும் என்ன சம்பவம் பண்ணாங்க தெரியுமா?!
ஃபகத் பாசில் நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘ஆவேசம்’ நிச்சயமாக தியேட்டர்களில் காணவேண்டிய திரைப்படம். ‘ஆவேசம்’ என்றால் ஆக்ரோஷம், ஆங்காரம், ரெளத்ரம், சினம், சீற்றம் என எந்த அர்த்தம் கொண்டாலும் அதில் ஒரு ஆக்ஷன், ஒரு எனர்ஜி இருக்கிறது. அந்த ஆக்ஷனும், எனர்ஜியும் இந்த ஆவேசத்தில் மிஸ் ஆகாமல் டபுள் செஞ்சுரி அடித்திருப்பதுதான் ‘ஆவேசம்’ படத்தின் வெற்றிக்கு காரணம்.

இயக்குநர் ஜித்து மாதவனுக்கு ‘ரோமாஞ்சம்’ படத்துக்கு அடுத்த படம் இந்த ‘ஆவேசம்’. சமீபத்திய மலையாளப் படங்களின் கதை சொல்லலில் புதிய அணுகுமுறையான ஒரு கேரெக்டரின் பயணத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு, அந்த கேரெக்டரின் அடுத்தடுத்த நகர்வுகளை சுவாரஸ்யமாகவும், துள்ளலாகவும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் ‘ஆவேசம்’ படத்தில் கதை என்று சொல்ல எதுவும் இல்லை.
பெங்களூருவில் வாழும் ஒரு மலையாளி தாதா ரங்கா என்கிற ரங்கண்ணன். இந்த ரங்காவின் கதையை கேரளாவில் இருந்து பெங்களூருவுக்குப் படிக்க வரும் மூன்று இளைஞர்களின் வழியே சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜித்து. கல்லூரியில் சீனியர்களின் ரேகிங்கை, கிண்டலை பொறுக்கமுடியாத கேரளாவைச் சேர்ந்த மூன்று கல்லூரி மாணவர்கள் லோக்கல் ரவுடியாக இருக்கும் ரங்காவுடன் நட்பாகி, சீனியர்களை சம்பவம் செய்ய திட்டமிட, இந்த திட்டம் எதுவும் தெரியாத ரங்கா அவர்களுடன் ஜாலியாகப் பழக, இந்த பழக்கவழக்கம் இந்த நால்வரின் வாழ்க்கையிலும் எவ்விதமான மாற்றத்தை உண்டாக்குகிறது என்பதை ஜாலியாகச் சொல்கிறது ‘ஆவேசம்’.

ஃபகத் ஃபாசிலின் இன்ட்ரோவோ இது வேற மாதிரி படம் என்பதை சொல்லிவிடுகிறது. ரங்காவாக ஃபஹத் ஃபாசிலின் நடிப்பு கதாபாத்திரத்தின் ஆழத்தையும் கணிக்க முடியாத தன்மையையும் திரைக்குள் கொண்டுவந்திருக்கிறது. கல்லூரி மாணவர்களில் ஒருவரான பீபி, உள்ளூர் பாரில் ஆண்கள் கழிவறையில் ரங்காவை முதன்முதலில் சந்திக்கும் காட்சி மலையாள சினிமா இதுவரைக் கண்டிராத ஹீரோ இன்ட்ரோக்களில் ஒன்று. முதலில் தினமும் பாருக்கு வந்து குடிக்கும், ஒரு ஜாலி குடிகாரன் என ஃபகத்தை நினைவுக்கும் மாணவர்களுக்குப் பின்னர்தான், அவன் ஒரு தாதா என்பது தெரிகிறது. ரங்காவின் கூட்டாளியாக அம்பன் கேரெக்டரில் நடித்திருக்கும் சதின் கோபி, படத்துக்கான பெரிய பலம். இவர்களின் நட்பு சிரிப்பையும் அதேசமயம் சென்ட்டிமென்ட்டையும் ஒருசேரக் கொடுக்கிறது. ரங்கா – அம்பன் கூட்டணி காட்சிகளுக்கு தியேட்டர்களில் விசில் போடலாம்.
ரங்காவாக ஃபகத் படத்தில் அதகளம் செய்திருக்கிறார். ஜாலியாக, கேலியாக, கோமாளியாக, அதேசமயம் ஆக்ரோஷமானவான, ஆவேசமானவனாக. அதிரடியானவாக வாழ்ந்திருக்கிறார் ஃபகத். ஒரு ரவுடியின் தனிமையைக்கூட அவ்வளவு இயல்பாக நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். முக்கியமான விஷயம் இதில் ஃபகத்துக்கு ரொமான்ஸே வரவில்லை. காரணம் ஹீரோயினே படத்தில் இல்லை.
சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு திரையில் அற்புதங்களைச் செய்கிறது. சுஷின் ஷ்யாமின் இசை படத்தின் எமோஷன்ஸை கூட்டுகிறது.பின்னணி இசையின் மூலம் ரங்கா கதாபாத்திரத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் ஷ்யாம்.

கதையில், திரைக்கதையில் பெரிதாக மெனக்கெடாமல் ஒற்றை கேரெக்டர் ஸ்கெட்ச்சில் மட்டுமே கவனம் செலுத்தி அந்தக் கேரெக்டரை மட்டுமே மையமாக கொண்டு படம் நகர்வதும், அதுவும் அந்த கேரெக்டராக ஃபகத் ஃபாசில் போன்ற நடிப்பு ராட்சசனே இருப்பதும் ‘ஆவேசம்’ படத்தை சூப்பர் ஹிட் படமாக மாற்றியிருக்கிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]