‘காதல் என்பது பொது உடமை’ ஒரு தனித்துவமான கருத்தினை சமுதாயத்திற்கு புரியும் வகையில் எளிமையாக இயக்கி வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் லிஜோமோல், அனுஷா பிரபு, ரோகினி, வினீத், காலேஷ் ராமானந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்றளவும் இந்தியாவில் அதிகளவில் பேசப்படாத வாதங்களுள் ஒன்றான தன்பாலினச் சேர்க்கை பற்றியும் அவர்களின் உள்ளுணர்வை பற்றியும் எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.
காதல் என்பது பொது உடமை திரைக்கதை
தன்னுடைய தாயின் அரவணைப்பிலும் மிகுதியான பாசத்திலும் திண்டாடி வளரும் சாம் (லிஜோமோல்), அவரின் காதல் வாழ்க்கையை பற்றி படத்தின் துவக்கத்திலேயே மனம்விட்டு அவரின் அம்மா லட்சுமியிடம் கூறுகிறார். தன்னுடைய மகள் காதலிப்பதை தெரிந்தும் அவளின் விருப்பத்திற்காகவும் சந்தோஷத்திற்காகவும் அவர் விரும்பும் பையனை நேரில் சந்திக்க வீட்டிற்கு அழைக்கிறார். அன்று தன்னுடைய ஆண் நண்பர் ரவீந்திராவை வீட்டிற்கு அழைக்கிறார் சாம், உடன் நந்தினியையும் அழைத்துவர கூறுகிறார். தன்னுடைய மகளுக்கு பிடித்த ஆணை வரவேற்க ஆர்வமாக பரிசெல்லாம் வாங்கி மகிழ்ச்சியில் திளைக்கும் லட்சுமி, தனது மகள் காதலிப்பது ஒரு பெண் என்றும், அது நந்தினி என்றும் அறிகிறார்.
தன்பாலின காதலை ஏற்கவும் அதை புரிந்துகொள்ள தடுமாறும் லட்சுமி தன்னுடைய முன்னாள் கணவர் தேவராஜை வீட்டிற்கு அழைக்கிறார். இருவரும் அவர்களின் மகளின் வாழ்க்கையையும் அதில் சாம் எடுத்துள்ள அதிர்ச்சியான முடிவையும் எப்படியாவது சரி செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்களிடம் உரையாடுகிறார்கள். இதில் பல உண்மைகள், பல குழப்பங்கள், காதல் என்பதன் புரிதல் ஆகியவை பேசப்படுகிறது. இரு காதலிகள் உள்ளுணர்வை புரிந்துகொள்கிறார்களா? அவர்களின் வாழ்க்கைக்கான தெளிவு தான் என்ன என்பது தான் இப்படத்தின் கதை.
தனித்துவமான கதாப்பாத்திரங்கள்
நடிகர் வினித் மற்றும் நடிகை ரோகிணி ஆகியோர் தேவராஜ் மற்றும் லட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மணமுறிவு ஏற்பட்டு தங்களின் மகள் சேமிற்காக தொடர்பில் மட்டும் இருக்கும் சங்கடமான சூழலில் இருவரின் நடிப்பும் அருமையாக பொருந்தியது. நடிகை ரோகிணி ஒரு அம்மாவாக தனக்கு புரிந்துகொள்ள முடியாத ஒன்றை ஏற்க மறுப்பதும் நடிகர் வினித் தன்னுடைய மகளின் விருப்பத்தை அறவே எதிர்ப்பது என இவர்களின் பாத்திரங்களின் வேறுபாடுகளை புரிந்து நடித்துள்ளனர்.
நடிகை லிஜோமோல் தன்னுடைய தாயின் பாசத்தை விட மனமில்லாமல் காதலிக்கும் பெண்ணையும் பிரியமுடியாமல் தவிக்கும் காட்சிகளும் அதற்கு மாறாக அவர்களின் முதல் சந்திப்பு முதல் காதலில் விழும் காட்சிகள் வரை எவ்வித வசனமும் இல்லாமல் தெளிவாகவும் உணர்ச்சிகரமாகவும் நடித்துள்ளார்.
படத்தின் பலம்
இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன் இப்படியான படத்திற்கு பின்கதைக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அவர்களின் உணர்வுகளை மிகைப்படுத்தாமல் நேர்பட படத்தின் கதைக்களத்தை சுருக்கி இயக்கியிருப்பது காதல் என்பது பொது உடமை படத்தின் மிகப்பெரிய பலம்.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் துணை பாத்திரங்கள் என கதைக்களத்தை சுவாரஸ்யப்படுத்த எவ்வித வேலைப்பாடுகளும் செய்யாமல் உணர்ச்சிகளை மற்றும் இந்த கருத்துக்களை புரியச்செய்யும் கதாபாத்திரங்களை மட்டுமே இப்படத்தில் கருவாக வைத்திருப்பது படத்தை எளிமையாகச் செய்துள்ளது.
Releasing on Valentine’s Day ❤️ pic.twitter.com/03qwtf4w1e
— Rohini Molleti (@Rohinimolleti) December 14, 2024
படத்தின் பலவீனம்
முதல் பாதியில் வீட்டிற்கு அழைத்து வந்து தன்னுடைய காதலை, காதலியை அறிமுகம் செய்யும் தருணத்தை தவிர சாம் மற்றும் நந்தினி கதாபத்திரங்களுக்கான பங்கு குறைவாக இருந்தது. அவர்களின் நண்பர் ரவிந்தரா சாமின் தந்தையிடம் உரையாடும் காட்சிகளில் ஒரு ஆணாக இயக்குனரின் கருத்துக்கள் வெளிப்படுவது சற்றே கதையின் போக்கை மாற்றுகிறது. காதலிக்கும் பெண்களின் மனவுணர்வை முதல் பாதியில் பயன்படுத்தாமல் இறுதியில் பயன்படுத்தியதன் நோக்கம் தென்பட்டாலும், மிகுதியான நேரம் அவர்களின் நண்பர் வாதாடுவது சற்றே முரணாக அமைந்தது.
காதல் என்பது பொது உடமை இன்றைய சமுதாயத்தில் பேசவேண்டிய, உரையாட வேண்டிய கருத்தை எவ்வித முகசுளிவும் இல்லாமல் கசப்பான தருணங்களையும் கடந்து செல்லும் முற்போக்கு சிந்தனையை காட்சிப்படுத்துகிறது. காதல் எவ்விதத்திலும் எப்படியும் பொது உடமை தான் என்ற கருத்தை புரியும் வகையில் காட்டியுள்ளார் இயக்குனர் ஜெயப்ரகாஷ் ராதாகிருஷ்ணன்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]