ஆணாதிக்கத்துக்கு எதிராக மெளனப் போராட்டம் நடத்தும் ஒரு பிடிவாதக்காரியின் கதைதான் ‘கொட்டுக்காளி’!
மாமன் மகள் மீனாவை (அன்னா பென்) ஒருதலையாய் காதலிக்கும் பாண்டி (சூரி) அவளை கல்லூரிக்குப் படிக்க அனுப்புகிறார். கல்லூரியில் ஒரு இளைஞனை காதலிக்கிறாள் அன்னா பென். ஒரு பெண்ணின் மனநிலையையே புரிந்துகொள்ளாமல் இந்தக் காதலை அழித்து, ஒழித்து அன்னா பென்னை மாமனுக்கு மணம் முடித்துவைக்க முயற்சிக்கிறது இரு குடும்பமும். இதனால் பித்துப்பிடித்த மனநிலைக்கு, டிப்ரஷனில் போகிறார் அன்னா பென். ஆனால் சூரி உள்பட இரு குடும்பத்தினரும் ‘’மீனாவுக்குப் பேய் பிடித்துவிட்டது’’ எனச்சொல்லி சாமியாரை சந்தித்து பேய் ஓட்ட அழைத்துச்செல்கிறார்கள். இந்தப் பயணமும் இடையே நடக்கும் சம்பவங்களும், உண்மையிலேயே யாருக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிற கேள்வியும்தான் ‘கொட்டுக்காளி’ படத்தின் கிளைமேக்ஸ்.

கதையின் நாயகனாக சூரி ஒரு வித்தியாசமான நடிப்பை கொடுத்திருகிறார். படம் முழுவதுக்கும் ஒரே ஒரு வசனம்தான் அன்னா பென்னுக்கு. மற்றபடி எல்லாவற்றையும் கண்கள் மூலமே பேசி அசத்தியிருக்கிறார். பெற்றோர், உறவினர் எனப் பலர் நடித்திருந்தாலும் சூரியும், அன்னா பென்னும்தான் மொத்தப்படத்திலும் கவனம் ஈர்க்கிறார்கள். ஆட்டோவில் பயணப்படும்போது அன்னாபென் எங்கோ கேட்கும் பாடலைக் கேட்டு முனுமுனுக்க அதைப் பார்த்து ‘’அவனை நினைச்சிப் பாடுறியா’’ எனப் பாய்ந்து வந்து அடிக்கும் காட்சியில் சூரி சிறப்பாக நடித்திருக்கிறார். சூரியை ஒரே ஒரு பார்வையால் ‘’நீயெல்லாம் ஒரு ஆம்பள’’ என்பதுபோல பார்க்கும் அன்னா பென்னின் கண்கள் ஒரு மொத்த ஆண் சமுதாயத்துக்குப் பல செய்திகளைச் சொல்கிறது.
படத்தில் பாடல்களோ, பின்னணி இசையோ எதுவும் இல்லை. ஆனால், அந்தக் குறை தெரியாத அளவுக்கு, நடிப்பின் மூலமும், இயற்கையான சத்தங்கள் மூலமும், சக்திவேலின் சிறந்த ஒளிப்பதிவின் மூலமும் பேலன்ஸ் செய்திருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ். எடிட்டர் கணேஷ் சிவாவும் படத்தை 100 நிமிடங்களுக்குள் கத்தரித்து கொடுத்திருக்கிறார்.
ஒரு சிறு கதையை வைத்துக்கொண்டு ஒரு பெரிய செய்தியை மக்களுக்கு கொண்டுசெல்லவேண்டும் என உழைத்திருக்கிறார் பி.எஸ்.வினோத்ராஜ். நிச்சயம் உலக சினிமா அளவுக்குப் படம் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், இந்தப்படத்தின் உண்மையான நோக்கம் நிறைவேற வேண்டுமானால் அது வெகுஜன மக்களை ஈர்க்கவேண்டும். தியேட்டருக்கு வந்து படம் பார்க்கத் தூண்ட வேண்டும். ஆனால், வெகுஜன மக்களை ஈர்க்கக்கூடிய பல விஷயங்கள் ‘கொட்டுக்காளி’யில் மிஸ்ஸிங். ஆவணப்படம்போல மெதுவாக படம் ஊர்ந்து போகிறது. காட்சிகளும் தேவையில்லாத நீளத்தோடு இருப்பது பொறுமையை சோதிக்கின்றன. இதுதான் படத்தின் கதை என்பது ஒரு கட்டத்துக்கு மேல் புரிந்துவிடுவதால் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சூரியோடு ஆட்டோவில் நாமும் பித்துபிடித்ததுபோல பயணப்பட வேண்டியிருக்கிறது.
‘கொட்டுக்காளி’யை வெறும் விருதுக்கான சினிமாவாக மட்டும் உருவாக்காமல் வெகுஜன மக்களுக்கான சினிமாவாகவும் மாற்றியிருந்தால் கொண்டாடியிருக்கலாம்!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]