12 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால், நடிகைகள் அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், நடிகர் சந்தானம் மற்றும் பலர் நடித்த ‘Madha Gaja Raja’ திரைப்படம் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Madha Gaja Raja என்ற ராஜா தன்னுடைய பாலிய கால நண்பர்கள் மூவரை ஒரு திருமண விழாவில் சந்திக்கிறார். அங்கு அனைவரும் மீண்டும் வாழ்க்கையில் இணைந்து தங்கள் நட்பை தொடர, அதில் இரண்டு நண்பர்களுக்கு ஒரு பிரபல மீடியா நிறுவனத்தின் அதிகாரியுடன் இருக்கும் மோதலால் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்னையை தடுக்க கதாநாயகன் ராஜா தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் நகைச்சுவை நிறைந்த ஆக்ஷன் படம் தான் ‘Madha Gaja Raja’.
Madha Gaja Raja திரைக்கதை
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை காமெடிக்கு தேவையான அணைத்து முக்கிய அம்சங்களும் கொண்டு படத்தின் கதாபாத்திரங்கள், வசனங்கள் மற்றும் இசை ஒரு எளிமையான, நகைச்சுவையான கதைக்களத்தை அமைத்துள்ளனர். நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் கதாநாயகன், அந்த பிரச்னையை அழுத்தமாக காட்டாமல் சகஜமாகவும் நகைச்சுவையாகவும் கடக்க முயலும் நண்பர்கள் என 2000ங்களின் தொடக்கத்தில் வெளியான படங்களின் சாயல் நிச்சயமாக தெரிகிறது. இரண்டு நாயகிகளுடன் கதாநாயகன் அடிக்கும் லூட்டி, அதனை தவிர பிற பாத்திரங்கள் செய்யும் நகைச்சுவை என திரைக்கதை கமர்ஷியல் கதைக்கு ஏற்றமாதிரி உள்ளது.
தனித்துவமான கதாபாத்திரங்கள்
நடிகர் விஷால் இன்றும் நாயகனாக தமிழ் சினிமாவில் நடித்துவந்தாலும் ‘ஆம்பள’ படத்தின்போது அவரிடம் இருந்து ஒரு நக்கலான மற்றும் துடிப்பான நடிப்பை Madha Gaja Raja படத்தில் காண்பது புதுமையாக உள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகளிலும், நகைச்சுவை காட்சிகளிலும் ஈடுகொடுத்து நன்றாக நடித்துள்ளார்.
நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக வளம் வந்தபோது வெளிவர வேண்டிய படம், அவர் ஹீரோவாக உருமாறியபின் வெளிவந்தாலும், அவரின் ரசிகர்கள் கேட்டபடியே ஒரு முழுநீள காமெடி படத்தில் ஒருமையில் தனித்து தெரியும் வகையில் டைமிங் நகைச்சுவையில் அசத்தியுள்ளார்.
படத்தின் பலம்
நகைச்சுவை நிறைந்த வசனங்கள், கதாபாத்திரங்கள் என படம் முழுவதும் சிரிப்பலைகளை ஏற்படுத்திய நடிகர்கள் படத்துக்கு பெரிய பலம். நடிகர் சந்தானத்தின் ஏட்டிக்கு போட்டியான வசனங்களும் மறைந்த நடிகர் மனோபாலாவின் வசன வழி நகைச்சுவை என படத்தின் பல நடிகர்கள் தங்களின் நகைச்சுவை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.
கதைக்களத்திற்கு தேவையான பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் ஓட்டத்தை சரியாக பிரதிபலித்துள்ளது. நகைச்சுவையான காட்சிகளில் அதற்கு தகுந்த பின்னணி இசையும் பாடல்களில் விஜய் ஆண்டனியின் தனித்துவமான துள்ளல் என இசையும் இப்படத்துக்கு பலம்.
முழுமையாக ஒரு நகைச்சுவை கதையை எழுதி அதறகு ஏற்ற நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளது இயக்குனர் சுந்தர் சி அவர்களின் திறமை.
படத்தின் பலவீனம்
கதாநாயகிகள் இருவர் இருந்தும் நகைச்சுவையான காட்சிகளில் மட்டுமே அவர்களுக்கான பங்கு இருந்தது இன்றைய ரசிகர்களுக்கு ஏற்கக்கூடியதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் கவர்ச்சியை மையமாக கொண்டு வரும் வசனங்களும் காட்சிகளும் U சான்றிதழ் பெட்ரா படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு எப்படி பிரதிபலிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.
வில்லனாக நடிகர் சோனு சூட் நடித்திருந்தாலும் படத்தின் மைய பிரச்னையை நகைச்சுவையை நகர்த்தியதால் இவருக்கான பங்கு குறைவாகவே உள்ளது. ஹீரோ மற்றும் வில்லனுக்கு இடையே இருக்கும் மோதல் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமையாதது ஆக்ஷன் காட்சிகளை பெரிது படுத்தி காட்ட தவறியுள்ளது.
Madha Gaja Raja ஒரு சிரிப்பலையை ஏற்படுத்தக்கூடிய முழுமையான கமர்ஷியல் கதை. குடும்பத்துடன் சிறிது மகிழவும் நகைச்சுவையான நண்பர்களுடன் விடுமுறையை கழிக்கவும் ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]