அறிவுப்பசிக்கும், உணவுப் பசிக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் பள்ளிச் சிறுவனின் வாழ்க்கைப் போராட்டமே ‘Vaazhai’.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவணைந்தன். பள்ளி ஆசிரியை பூங்கொடி (நிகிலா விமல்) மீது டீனேஜ் பையனுக்கு இனம்புரியாத ஒரு கவர்ச்சி ஏற்படுகிறது. சிவணைந்தனின் திறமையையும், அவனது அன்பையும் புரிந்துகொள்ளும் டீச்சர் நிகிலா விமல் அவனை பரிவோடு அணுகுகிறார். காரணம் சிவணைந்தன் உள்பட அவன் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிச்சிறுவர்கள் பலரும் பள்ளி விடுமுறை நாட்களில் வாழைத்தார் சுமக்கச் செல்லும் குழந்தைத் தொழிலாளர்கள். வாழைத்தார் சுமந்து சுமந்து ஒருகட்டத்தில் தலையே திரும்பிப்போகிறது.

வகுப்பில் நம்பர் 1 மாணவனான சிவனைந்தன் இந்த வேலையையே வெறுக்கிறான். ஆனால், வாங்கிய கடனை அடைக்கவும், வீட்டின் வறுமையைப் போக்கவும் வேறுவழியில்லாமல் அம்மாவின் வற்புறுத்தால் அக்காவோடு சேர்ந்து வாழைத்தார் சுமக்கச் செல்கிறேன்.
இதற்கிடையே பள்ளி ஆண்டுவிழா கலைநிகழ்ச்சியில் டான்ஸ் ஆடும் வாய்ப்பு சிவணைந்தனுக்கு கிடைக்கிறது. பள்ளி விடுமுறை நாளில் டான்ஸ் நிகழ்ச்சிக்கான பிராக்டீஸ் நடக்க, அம்மாவோ அக்காவோடு சேர்ந்து வாழைத்தார் சுமக்கப் போகச்சொல்கிறார். ஆனால், அக்கா(திவ்யா துரைசாமி)வும், அவனது காதலனான கனி(கலையரசன்)யும் லாரியில் இருந்து அவனை இறக்கி பள்ளிக்கு ஓடச்சொல்கிறார்கள். அக்கா வாழைத்தார் சுமக்கப்போகிறாள். இந்த ஒற்றை நாளில் என்ன நடக்கிறது என்பது படத்தின் பகீர் கிளைமேக்ஸ்.

சிறுவன் சிவணைந்தனாக நடித்த பொன்வேல், அம்மா ஜானகி, அக்கா திவ்யா துரைசாமி, டீச்சர் நிகிலா விமல், கிராமத்துக்குள் கம்யூனிசம் பேசி தொழிலாளிகளுக்காகப் போராடும் கலையரசன் என படத்தில் ஐந்தே பிரதானக் கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு ஒரு பயோகிராபியே எடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். சினிமாவுக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், எந்தவிதமான ஹீரோயிசமும் இல்லாமல், எந்தவிதமான திணிப்புகளும் இல்லாமல் ஒரு படத்தை இயக்கமுடியும் என்பதை நிரூபித்திருகிறார் மாரி செல்வராஜ்.
தான் வாழ்ந்த வாழ்க்கையை, தான் அனுபவத்த துயரத்தை, தான் கடந்து வந்த வலிகளை, வேதனையை எந்தவித கூட்டலும், கழித்தலும் இல்லாமல் சொல்லியிருக்கிறார். தமிழ் சினிமாவின் சிறந்த படங்களுக்கான பட்டியலில் நிச்சயம் ‘வாழை’க்கு முக்கிய இடம் கிடைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நாம் எல்லோரும் இனிக்க இனிக்க சாப்பிடும் வாழைப் பழத்தின் பின்னால் இப்படி ஒரு துயரமும், துன்பமும் இருக்கிறது என்பதை இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் யாருமே பதிவு செய்ததில்லை என்பதிலேயே மாரி செல்வராஜின் இருப்பு தமிழ் சினிமாவுக்கு எவ்வளவு முக்கியம் என்பது புரியும்.

தேனி ஈஸ்வரின் கேமரா, சந்தோஷ் நாராயணின் இசை இரண்டும் இப்படத்துக்கு மிகப்பெரிய பலம். சூர்யா பிரதமனின் எடிட்டிங்கும் சிறப்பு. ஆனால், இது ஓடிடி-க்கு எடுக்கப்பட்ட படம் என்பதால் மிகவும் மெதுவாக கதை நகர்வதும், முதல் பாதி ஆவணப்படம் போல இருப்பதும் ‘வாழை’ படத்தை வெகுஜன ரசனையில் இருந்து பிரித்துவைக்கும்.
ஆனாலும் சொல்லவந்த கதையை சினிமாவுக்காக எந்த சமரமும் இல்லாமல் பதிவு செய்ததிலும், வாழ்க்கையில் எப்பேர்பட்ட துன்பம் வந்தாலும் பசி அது அனைத்துக்கும் மேலானது என்பதை சொன்னவிதத்திலும் மாரி செல்வராஜ் சிகரம் தொட்டிருக்கிறார்!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]