பல தலைமுறைகளாக பிறந்து வளர்ந்த உரையும், வீட்டையும் பிரியும் சூழ்நிலையில் கதை தொடங்குகிறது. ‘மொழி’ என்ற பாத்திரத்தில் இளம் வயது அர்விந்த் சுவாமியாக நடிகர் சரண், முதல் காட்சியிலேயே படத்தின் உணர்வுகள் எப்படி அமையும் என சிறப்பாக தெரிவித்துள்ளார். ஒரு இரவில் தொடக்கி, அந்த இரவில் நடக்கும் பெரிய வாழ்க்கை மாற்றம், அதனால் நகரும் கதை என மிக எளிமையான கதை சுருக்கத்தில் ‘மெய்யழகன்’ படம் தொடங்குகிறது.
மெய்யழகன் கதைக்களம்
தஞ்சாவூரில் உறவுகளுடன் பிறந்து, வளர்ந்து நாளடைவில் அந்த உறவுகளால் ஏற்படும் விரிசல் ஒன்றால் தன்னுடைய வீட்டை இழக்கும் ஒரு குடும்பம். அவர்களின் வேதனையும், துக்கமும் முதல் காட்சி முதல் மிக வெளிப்படையாகவும், சில இடங்களில் மிக உணர்வுபூர்வமாகவும் அமைகிறது.

ஒரு நாள் இரவில் அந்த மொழி மற்றும் அவரின் குடும்பம் எடுக்கும் முடிவுகள், அந்த முடிவுகளில் அவர்கள் விட்டு செல்லும் நினைவுகளும் உடைமைகளும் எப்படி மொழி என்ற மனிதரிடம் தக்க சமையத்தில் மீதும் சென்றடைகிறது என்பது கதைக்களம். இதில் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் தாக்கம் சொல்லும் கதை தான் ‘மெய்யழகன்‘.
மெய்யழகன் திரைக்கதை
அருள்மொழி என்ற இளைஞன் தனக்கு நெருக்கமான உறையும் விடையும் விட்டு இரவோடு இரவாக சென்னைக்கு செல்லும் காட்சிகளை கதையின் அடிப்படையாக மட்டும் காட்டாமல், அதை முதல் பத்து நிமிடங்கள் உணர்ச்சிகளின் பரிமாற்றமாக எழுதி ஒருவிதமான வலியை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திவிடுகிறார் இயக்குனர்.
தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து சொந்தங்கள் மற்றும் சுற்றத்தாரின் மத்தியில் வாழும் மற்றொரு மாறுதலான கதையை முதல் பாதியில் நமக்கு அறிமுகம் செய்து, அந்த பாத்திரங்கள் மற்றும் வழிமுறையுடன் காதலில் விழ வைத்து கதைக்கு ஒரு உயிரோட்டத்தை தருகிறார்கள்.
முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியாக படம் பிரிக்கப்பட்டாலும், கதையின் ஓட்டம், கதையில் சொல்லப்படும் உணர்வுகளும் தொடக்கம் முதல் முடிவு வரை மாறாமல் இருந்தது. கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி இடையே நடக்கும் உரையாடல்கள் வழியே நம்மை நினைவுகளில் அலைகளால் அடுத்து செல்கிறார் இயக்குனர்.
மெய்யழகன் கதாபாத்திரங்கள்
நடிகர் கார்த்தி உடைய பாத்திரம், படத்தின் முன்னோட்டத்தில் காட்டப்பட்ட அதே வெகுளித்தனத்துடன் படம் முழுவதும் பார்வையாளர்களை தளர்வடைய செய்யாமல் தூக்கி பிடிக்கிறது. அத்தான்! அத்தான்! என மனதார படம் முழுவதும் அவர் கூப்பிட அந்த பாத்திரத்தின் உண்மையான பெயரை மறக்க செய்யும். வெள்ளந்தியான அளப்பறியாத பாசத்தை, எவ்வித வஞ்சகமும் இல்லாமல் அருமையாக காட்டியுள்ளார் நடிகர் கார்த்தி.

முதல் பாதியில் தன்னுடைய வாய் சவடால் முழியமாக, வெகுளியான சுபாவத்தை காட்டுவது, அதில் சிறிதே கண்ணியமான வாழ்க்கை நெறிகளையும், தான் கடந்து வந்த அநீதிகளை சற்றும் மறக்காத திடமான கதாபாத்திரமாக சில காட்சிகளில் நடிகர் கார்த்தி, இந்த பாத்திரத்தை தன்னுடையதாக மாற்றியுள்ளார்.
படத்தின் கிளைமாக்ஸ் வரை இவரால் நடக்கும் நக்கலான நகைச்சுவையும், இவரை வைத்து செய்யப்படும் காமெடியும் படத்தில் அங்கங்கே சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது. எந்த இடத்திலும் சலிப்பளிக்காமல், வசனம் இல்லாத நேரத்திலும் தன்னுடைய நடிப்பால் ஈர்க்கிறார் கார்த்தி.

‘அருள்மொழி’ என்ற பாத்திரத்தில் நடிகர் அர்விந்த் சுவாமியை இதுவரையில் பார்க்காத பரிணாமத்தில் பார்க்கலாம். அவருக்கு மிகவும் நெருக்கமான ஒரு விஷயம் கைமீறி செல்வத்தையும், அதை தாங்கமுடியாமல் தத்தளிக்கும் ஒரு உணர்ச்சியை வெறும் கண்களால் பார்ப்பவர்களுக்கு கடத்துகிறார்.
சொந்த ஊருக்கு சென்று அவரின் நினைவுகளில் பல நேரங்கள் வாழ்ந்தாலும், கண் முன் இருக்கும் நிகழ்கால மனிதர்களுடன் உரையாடும் காட்சிகளில் அவருக்கு ஏற்படும் குழப்பங்களை துல்லியமாக வெளிப்படுத்துகிறார்.
சொந்த பந்தங்களால் ஏற்பட்ட காயத்துக்கு மருந்தாக பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு உறவு கிடைக்கிறது. ஆனால் அதை மனதார ஏற்கும் பக்குவமும், வெளிப்படையான உணர்ச்சி பரிமாற்றமும் நடக்காமல் அவர் மனச்சிறையில் தவிக்கும் காட்சிகள் அற்புதம்.
ராஜ் கிரண் அவர்கள் சொக்கலிங்கம் மாமா என்ற பாத்திரத்தில் தோன்றும் காட்சிகளில் எல்லாம் சோகம், நகைச்சுவை, கோபம், தவிப்பு என பல உணர்வுகளை தனக்கு பழக்கமான விதத்தில் அருமையாக நடித்துளார்.
நடிகை தேவதர்ஷினி மற்றும் நடிகை ஸ்ரீ திவ்யா இருவரும் சில காட்சிகள் மட்டுமே தோன்றினாலும், அவர்களின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். புரிதல் என்பது ஒரு திருமணத்தில் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த இரண்டு பாத்திரங்களும் சுட்டிக்காட்டுகிறது.
நடிகர் ஜெயப்ரகாஷ் இப்படத்தில் அர்விந்த் சுவாமியின் அப்பாவாக, தன்னுடைய பூர்விகத்தின் பெரும்பங்கை இழந்து வாடும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மெய்யழகன் படத்தின் பலம்
’96’ படத்தை போலவே இந்த படத்திலும் பெரும்பாலான மக்களுக்கு சம்பந்தப்படுத்திகொள்ளும் படியான ஒரு கதைக்களத்தை எடுத்து, அதில் எதிர்பார்க்காத ஆழமான உணர்ச்சிகளை அளவில்லாமல் சேர்த்து, ஒரு உணர்ச்சிகரமான படத்தை தந்துள்ளார் பிரேம்குமார்.

நடிகர் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி இடையியேயான புரிதலும் நட்பும் இந்த படத்தின் பெரும்பகுதியாக அமைந்துள்ளது. இருவரும் தங்களின் இயல்பான நடிப்பால் நகைச்சுவை, சோகம், ஏக்கம் போன்ற பலதரப்பட்ட உணர்வுகளை எளிதாக கடத்தியுள்ளனர்.
இந்த படம் வெளியாவதற்கு முன்னரே ‘யாரோ இவன் யாரோ’ பாடலும் ‘டெல்டா கல்யாணம்’ பாடலும் பலருக்கும் பிடித்தமானதாக அமைந்தது. இந்த படத்தில் பாடல்களையும் தாண்டி இசையில் டெல்டா பகுதியிலுள்ள கிராமங்களின் அழகையும், மனிதர்களின் வைக்கப்பட்டுள்ள ஏக்கத்தையும் எளிதாக வெளியில் கொண்டுவந்துள்ளார் இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா.
மெய்யழகன் படத்தின் பலவீனம்
முதல் பாதியில் கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள், சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் என அனைத்தையும் காட்டியதால், இரண்டாம் பாதியில் கதையில் எதிர்பார்க்க முடியாத திருப்பமோ, புதிய நகைச்சுவையோ எதுவும் அமையவில்லை.
நடிகர் கார்த்தியின் கதாபாத்திரங்கள் கதை சொல்லும் காட்சி அவரின் எல்லா படங்களிலும் வருவது இப்போது வழக்கமாக உள்ளது. இந்த படத்தில் அதிகம் பேசும் பாத்திரமாக அவர் இருந்தாலும், இரண்டாம் பாதியில் எழுதப்பட்டுள்ள நீண்ட Monologue, சொல்லவரும் கருத்து முக்கியமானதாக இருந்தாலும் சற்று தளர்வை ஏற்படுத்தியது.
இன்றும் சிறுநகரங்களில் இருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு பல காரணங்களால் சென்று, தங்களின் வாழ்வியலை மாற்றி வாழும் பலரின் பேசப்படாத உணர்வுகளை எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் இந்த படத்தில் பேசியுள்ளார்.
நாம் அனைவருக்கும் பிறந்த ஊரும், அந்த ஊரில் வளர்ந்த நினைவுகளும் அடிக்கடி நினைவுக்கு வந்தாலும், அதை ஒரு ஆழமான, உணர்வுபூர்வமான திரைப்படமாக பார்க்கும் வாய்ப்பை தந்துள்ளார் இயக்குனர் C. பிரேம்குமார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]