கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய், ராஜீவ் ரவிந்திரநாதன் நடித்துள்ள படம் ‘ரகு தாத்தா‘. நகைச்சுவையான கதைக்களத்தில் முற்போக்கு கருத்துக்களை பேசும் படமாக அமைந்துள்ளது.

ரகு தாத்தா கதைக்களம்
வள்ளுவன்பேட்டை என்ற கிராமத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தன் தாத்தாவுடன் குரல் கொடுக்கும் கயல்விழி, அங்குள்ள இந்தி மொழி சபாவை போராட்டம் நடத்தி மூடச் செய்கிறார். சிறுவயது முதலே தன் தாத்தாவின் பாசத்துடன் முற்போக்கு சிந்தனைகளையும் பெரியார் மொழிந்த தத்துவங்களையும் தன் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறார்.

தான் ஒரு ஆண் என்று சொன்னால் தான் அவரின் கதைகளை பதிப்பித்து வெளியிடுவார்கள் என்பதால் க. பாண்டி என்ற பெயரில் கதைகளை எழுதுபவர். தன் வேலையில் கூட உயர்பதவிக்காக இந்தி வழி தேர்வு எழுதாமல் வைராக்கியம் கொண்ட பெண் கயல்விழி.
திருமணத்தில் சற்றும் விருப்பம் இல்லாத கயல்விழி, தன் தாத்தாவிற்கு புற்றுநோய் என தெரிந்ததும் அவருக்காக 3 ஆசைகளை நிறைவேற்ற முடிவெடுக்கிறார். அதில் ஒன்று கயல்விழியின் திருமணத்தை பார்க்க வேண்டும் என்பது.
ரகு தாத்தா பேசும் கருத்துக்கள்
பெண்ணியம் :
பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள் மட்டுமல்லாமல் சதந்திரத்திற்கு பின்னும் ஆண்களுக்கு ஒரு சட்டம் பெண்களை மய்யப்படுத்திய தண்டனை சட்டங்களையும் அலசி, எளிமையாக தனது வாதத்தை க. பாண்டி வழியாக வைத்துள்ளார் இயக்குனர் சுமன் குமார்.
இந்தி திணிப்பும் ஒழிப்பும்:
சுதந்திர இந்தியாவிற்கு வயது 78 ஆனாலும் இன்றும் மொழிகளை வைத்து செய்யப்படும் அரசியல் நடந்து வருவதை வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த மொழி அரசியலை பற்றி தொடங்கிய படத்தில் ஒரு மொழியை எதிர்பதற்கும் அதன் திணிப்பை எதிர்பதற்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவு படுத்தியுள்ளார்கள்.
‘நாங்க எப்போ இந்தி மொழியை எதிர்த்தோம்?! இந்தி திணிப்பை தானே எதிர்த்தோம்’

கலாச்சாரமும் அறியாமையும்:
க்ளைமாக்ஸ் காட்சி வரை தமிழ்செல்வன் என்ற பாத்திரம் செய்வதை பிற்போக்குத்தனம் என்றும், அந்த பாத்திரத்தை பற்றிய கெட்ட கண்ணோட்டத்தை மக்களிடம் வளர்த்துவிட்டு, பின்னர் மாற்றத்தை ஒரே வசனத்தில் வைத்துள்ளனர்.
‘திடீர்னு வந்தா திணிப்பு, காலம் காலமா இருந்தா கலாச்சாரம்’
என ஆண் பிள்ளைகளின் வளர்ப்பை பற்றியும் எப்படி சமுதாயம் ஒரு ஆணின் பிழைகளை கண்டுக் கொள்ளாமல் விடுகிறது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
படத்தின் பலம்
இந்தி மொழி திணிப்பு, பெண்ணியம், சரிசமமான உரிமைகள் ஆகிய கருத்துக்களை நகைச்சுவையான கிராமத்து கதையாக சொல்லியிருப்பது புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் உள்ளது.
கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் கயல்விழி பாண்டியன் பாத்திரத்தை அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் நடித்துள்ளார். சேட்டைகள் செய்யும்போதும் தன்னுடைய உரிமைக்காக குரல்கொடுப்பதும் என தனக்கான பாத்திரத்தை ரசிக்க வைத்துள்ளார்.

பிரபல குணச்சித்திர நடிகர் எம். எஸ். பாஸ்கர், நடிகை தேவதர்ஷினி, புது முகங்கள் பலரும் இணைந்து இந்த படத்தின் காமெடி காட்சிகளை இனிமையாக்கியுள்ளனர். கதைக்கு ஏற்ற மாதிரியான நகைச்சுவை அமைந்துள்ளது படத்தின் பெரிய பலம்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ராஜாவின் பாணியில் Retro பாணியில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை தந்து படத்துக்கு மெருகேற்றி உள்ளார்.
படத்தின் பலவீனம்
படத்தின் தொடக்கம் முதல் வள்ளுவன்பேட்டை ‘ஏக்தா சபா’ தலைவர் அதை மீட்க கடுமையாக போராடுவதும், அவ்வப்போது அவரின் காட்சிகளை சீரியஸாக காட்டி ஒரு பெரிய திருப்பத்துக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் கடைசியில் விரைவாக அவரின் கதையை முடித்து விட்டனர்.
இரண்டாம் பாதியில் திருமணத்தை வைத்து சற்றே திரைக்கதையை ஒப்பேற்றியதாக தெரிகிறது. முக்கியமாக திருமணத்தை தவிர்க்க அவர்கள் போடும் திட்டங்களும் உரையாடல்களும் சில இடங்களில் சிரிப்பை வரவழைத்தாலும் சோர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘ரகு தாத்தா‘, ஆகஸ்டு மாதம் வெளியான மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு அக்மார்க் நகைச்சுவையான, முற்போக்கு சிந்தனைகளை அலசும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாக அதிக வாய்ப்புள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]