இன்றைய இளைஞர்களின் குழப்பமின்மை, அவர்களின் தெளிவின்மை, தோல்விகளைத்தாங்கும் வலிமையின்மை எனப் பல இன்மைகள் இருந்தாலும் அவர்கள் வாழ்வு எவ்வளவு கொண்டாட்டமானது என்பதைப்போகிற போக்கில் காமெடியும், காதலும் கலந்துசொல்லியிருக்கிறார் இயக்குர் கிரிஷ் ஏ.டி.
எதிர்காலம் குறித்த எந்த திட்டமிடலும் இல்லாத, தோல்விகளை மட்டுமே சந்திக்கும், வாழ்க்கையை அதன்போக்கில் வாழும் ஒரு மிடில்கிளாஸ் இளைஞனும், எதிர்காலம் குறித்த திட்டம், யாரை மணம் முடிக்க வேண்டும் என்கிற தெளிவு, எப்படி செட்டில் ஆகவேண்டும் என்கிற ரூட்மேப் என ஃபுல் ஸ்கெட்ச்சோடு பயணிக்கும் ஒரு பணக்கார இளைஞியும் நேருக்கு நேர் சந்திக்கும்போது நிகழும் நிகழ்வுகளே இந்த ‘பிரேமலு’.
காதல் உணர்வுகளை உள்ளடக்கி, நகைச்சுவையை அதில் கலக்கி தங்கள் இதயத்துடன் பார்வையாளர்களைப் பேசவைக்கிறது பிரேமலு. ஆரம்பக் காட்சியிலேயே ஒரு மென்மையான இயல்பான கதைக்களத்துக்குள் உங்களை அழைத்துச்செல்கிறேன் எனச்சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர்.

‘பிரேமலு’ கல்லூரியின் கடைசிநாளான ஃபேர்வெல் டே நாளில் இருந்து தொடங்குகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரமான சச்சின் தான் பல ஆண்டுகளாகக் காதலிக்கும் பெண்ணிடம் போய் தன் காதலை கல்லூரியின் இறுதிநாளில் சொல்ல, அவள் ”ரொம்ப லேட்டா சொல்ற சச்சின்… நான் வேற ஒருத்தனைக் காதலிக்கிறேன்” என்கிற நிராகரிப்போடு தொடங்குகிறது முதல் காட்சி. இந்த முதல் காட்சியிலேயே படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை தெளிவுபடுத்திவிடுகிறார் இயக்குநர்.
ஒரு பக்கம் காதல் தோல்வி மறுபக்கம் சிதைந்துபோன குடும்பம் என வாழ்வின் மீதான நம்பிக்கையை இழக்கும் சச்சின், ஒரு சராசரி மல்லு இளைஞனைப்போல வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்யலாம் என முடிவெடுக்கிறான்.
வெளிநாடு செல்வதற்கு முன்பாக தன் நண்பன் அமல் டேவிஸுடன் ஐதராபாத்துக்குச் செல்கிறான் சச்சின். அங்குதான் அவன் வாழ்க்கைக்கான புது நம்பிக்கை ஒளி பிறக்கிறது. சச்சினின் நண்பனாக வரும் அமல் டேவிஸின் கதாபாத்திரம் வழக்கமான காமெடி நண்பன் கதாபாத்திரமாக இல்லாமல், நம் வாழ்க்கையில் நம்முடன் சேர்ந்து பயணிக்கும் இயல்பான ஒரு நண்பனின் கதாபாத்திரமாக இருப்பதுதான் படத்தின் பெரிய பலம்.
சச்சின், ஒரு பக்கம் ஐதராபாத்தில் தன் வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்துக்காக காத்திருக்க அங்கே வந்து சேர்கிறார் ரீனு. ஐடி-யில் வேலைக்காக வரும் பணக்காரப் பெண்ணான ரீனுவைக் கண்டதுமே சச்சினுக்கு காதல் கொப்பளிக்கிறது. இருவரின் லைஃப் ஸ்டைலுமே நேர் எதிரானது என்பதை சில அழுத்தமான காட்சிகள் மூலம் பதிவுசெய்கிறார் இயக்குநர். மிகச்சிறிய அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் சச்சினும், அமலும் சிங்கிள் பெட்டில் யார் படுப்பது என்பதையே டாஸ் போட்டு முடிவெடுக்க, மறுபக்கம் ரீனு மிக வசதியான தனித்தனி அறைகள் கொண்ட அப்பார்ட்மெண்ட்டில் தோழிகளோடு வசிக்கிறாள்.
கிரிஷ் ஏ.டியின் முந்தைய படங்களில் ஆண் கதாபாத்திரங்கள், தாங்கள் விரும்பும் பெண்களைவிட தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தாலும் தங்களின் நேர்மை மற்றும் அன்பின் மூலம் அப்பெண்களை வெல்பவர்களாக இருப்பார்கள். அதே பேட்டன் ‘பிரேமலு’விலும் தொடர்கிறது.
ஐதராபாத்தில் ஒரு திருமணத்தில் சச்சினும், ரீனுவும் முதல்முறையாக சந்தித்துக்கொள்ளும்போது நிகழ்கிறது. ரீனு தன்னைவிட பணத்திலும், அந்தஸ்திலும் வேற லெவல் எனத்தெரிந்தும் சச்சினுக்கு ரீனுவைக் கண்டதுமே காதல் மலர்கிறது. நண்பன் அமலின் உதவியோடு ரீனுவோடு அந்த நீண்ட இரவில் ஐதராபாத் முழுக்க பயணிக்கிறான் சச்சின். ஒரு கட்டத்தில் தன் காதலை ரீனுவிடம் சொல்கிறான். வழக்கம்போல நிராகரிப்புதான் பதிலாகக் கிடைக்கிறது. அதுவும் நண்பன் அமல் முன் ரீனு சச்சினின் காதலை நிராகரிக்க, உடைந்துபோகும் சச்சினை அமல் தேற்றும்போதும் நாமும் சச்சினை ஆறுதல் படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு சச்சினின் மீது நமக்கும் இரக்கம் ஏற்படுகிறது.
ரீனுவின் நிராகரிப்பாள் சச்சின் சென்னைக்கு இடம்பெயர, கொஞ்சம் கொஞ்சமாக குற்ற உணர்ச்சியால் சச்சினின் மீதான காதலை உணர்கிறாள் ரீனு. இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே க்ளைமேக்ஸ்.
படத்தில் சச்சினாக நஸ்லெனும், ரீனுவாக மமிதா பைஜுவும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷியாம் மோகன் காமெடியிலும், உணர்ச்சிகரமான நடிப்பிலும் அசத்தியிருக்கிறார்.
‘பிரேமலு’ மிக அழகாக எழுதப்பட்டிருக்கும் நிகழ்கால காமெடி கலந்த காதல் கதை. கதையாக படத்தை நகர்த்தாமல் கதாபாத்திரங்களின் வளர்ச்சி மாற்றங்கள் வழியே கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இதனால் பார்வையாளர்களான நாம் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளோடு அழமாக இணையமுடிகிறது. இந்த கேரெக்டர்களின் பயணம் வழியே கதை சொல்லும்முறை ‘ஆடு ஜீவிதம்’, ‘ஆவேஷம்’ போன்ற சமீபத்திய மலையாளப்படங்களிலும் பார்க்கமுடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபுவின் கேமரா அசத்தலான காட்சிகளை படம்பிடித்து, இனிமையான சூழலை உருவாக்கியிருக்கிறது. விஷ்ணு விஜய்யின் இசை படத்துக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது.
இன்றைய இளைஞர்களின் உலகத்துக்குள் பயணிக்கவைத்ததோடு, பெரிய அறிவுஜீவித்தனங்கள் எதுவும் இல்லாமல், இயல்பான காட்சிகள், எளிமையான கதாபாத்திரங்கள், சிரிக்கவைக்கும் நகைச்சுவை என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கலந்து சக்சஸ் ஃபார்முலாவில் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கியிருக்கிறது ‘பிரேமலு’.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]