நடிகர் அஜித் குமார் கதாநாயகனாக திரையில் தோன்றி ஓராண்டிற்கு மேல் ஆகி, அவரின் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம், ‘விடாமுயற்சி’. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘பிரேக்டவுன்’ படத்தின் கதைக்களத்தைக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் அர்ஜுன் சார்ஜா, நடிகை ரெஜினா கசான்ட்ரா, நடிகர் ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். லைகா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி திரைக்கதை
12 ஆண்டுகள் திருமணமான தம்பதியினர் அர்ஜுன் (அஜித் குமார்) மற்றும் கயல் (த்ரிஷா) அஜர்பைஜான் நாட்டில் வசித்துவர, சாலை மார்க்கமாக 9 மணிநேரம் பயணிக்கும்போது அவர்களின் கார் பழுதாகி யாருமில்லாத நெடுஞ்சாலையில் நிர்கதியாக நின்றுவிடுகிறது. இவர்களுக்கு உதவ தமிழ் பேசும் மற்றொரு தம்பதியினர் ரக்ஷித் (அர்ஜுன் சார்ஜா) மற்றும் தீபிகா (ரெஜினா கசான்ட்ரா) முன்வருகிறார்கள். பக்கத்தில் இருக்கும் சிற்றூரில் சென்று தொலைபேசி வாயிலாக உதவி கேட்க கயல் அவர்களுடன் செல்கிறார், அர்ஜுன் காருடன் சாலையில் நிற்கிறார். சிறிது நேரத்தில் கார் தயாராகியதும் அவரின் மனைவியை சந்திக்க அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று பார்க்கும் அர்ஜுன், கயல் அங்கு இல்லை என அறிகிறார். அவரின் மனைவியை கடத்திச் சென்றவர்கள் யார்? மொழி தெரியாத ஊரில் எவ்வித தகவலும் இல்லாமல் அவரை அவர் கண்டுபிடிக்கிறாரா? என்பது தான் விடாமுயற்சி படத்தின் கதை.
தனித்துவமான கதாபாத்திரங்கள்
நடிகர் அஜித் குமார் தன்னுடைய வயதிற்கேற்ப சமீபகாலமாக தந்தையாக, பல வருடங்கள் திருமணமான கதாபாத்திரங்களில் நடிப்பதை இப்படத்திலும் தொடர்ந்துள்ளார். முக்கியமாக இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதராக எவ்வித வன்மம், கோபம் இல்லாமல் இருக்கும் ஒரு நபராக வருகிறார். தன்னிடம் வேண்டுமென்றே சண்டை போட நினைக்கும் வில்லனிடம் மன்னிப்பு கேட்பது என அர்ஜுன் கதாபாத்திரத்தில் ஒரு சாமானியராக அவர் நடித்துள்ளார்.
படத்தின் இரண்டாம் பாதியில் முக்கியமான கதாபாத்திரங்களாக தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியவர்கள் நடிகர் அர்ஜுன் சார்ஜா மற்றும் நடிகை ரெஜினா கசான்ட்ரா. ரக்ஷித் மற்றும் தீபிகா என்ற கத்பாத்திரங்கள் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் மனநல நோயாளிகளாக இருந்து பின்னர் பணத்திற்காக நெடுஞ்சாலைகளில் ஆள்கடத்தல் செய்துவருபவர்கள். இருவரின் கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக நடித்து தேவையான துடிப்பை கொடுத்துள்ளனர்.
படத்தின் பலம்
இயக்குனர் மகிழ் திருமேனி, தன்னுடைய படத்தில் நடிக்கும் நடிகர்களை படத்தின் கதைக்கு ஏற்றவாறு உபயோகித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகராக அஜித் குமார் இருந்தாலும், அவரின் படங்களில் அவருக்கான சண்டை காட்சிகளும் அதிரடியான வசனங்களும் இருப்பதை ரசிகர்கள் எதிர்பார்த்தாலும், கதைக்கான பாத்திரமாக அவரை பயன்படுத்தியுள்ளது படத்தின் பலம்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் அவர்களின் கண்ணோட்டத்தில் அஜர்பைஜான் நாட்டின் அழகிய நிலப்பரப்பும், அதில் தனியாக மாட்டிக்கொண்டவர்களின் தவிப்பையும் தெளிவாக படம்பிடித்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் சண்டை காட்சிகளிலும் ஒளிப்பதிவும் சண்டை கட்டமைப்பும் வியப்பானதாக அமைந்தது.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இசையில் படத்தின் துவக்கத்திலேயே வரும் ‘சாவடிக்கா’ பாடல் திரையரங்கில் கைதட்டல்களை பெற, இரண்டாம் பாதியில் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற பின்னணி இசையும் படத்தின் காட்சிகளுக்கு பெரிதும் பலம் சேர்க்கிறது.
The wait is over! 🤩 VIDAAMUYARCHI storms into cinemas from today. 🔥 Persistence is the path, Victory is the destination. 💪
— Lyca Productions (@LycaProductions) February 5, 2025
VIDAAMUYARCHI In Cinemas From Today 📽️✨#Vidaamuyarchi #Pattudala #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran… pic.twitter.com/Iz5FwJyNRW
படத்தின் பின்னடைவு
1997ல் வெளியான ஆங்கில மொழி படத்தின் கதைக்களத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு சண்டை காட்சிகளையும், பஞ்ச் வசனங்களையும் கொண்டு எடுத்திருந்தாலோ, அல்லது கதைக்களத்தை திரைக்கதையுடன் மாற்றாமல் எடுத்திருந்தாலும் நிச்சயமாக கலக்கலான ஆக்ஷன் படமாக விடாமுயற்சி உருவாகியிருக்கும்.
பொதுவாக ஒரு கிரைம் த்ரில்லர் படம் என்றால் அதில் இருக்கும் மர்மம், ரகசியங்கள் மற்றும் ஆக்ஷன் அல்லது திருப்பங்கள் தான் படத்தை நகர்த்தும். அப்படியான திருப்பங்கள் அனைத்தும் படத்தின் இரண்டாம் பாதியில் வைத்து, அதையும் முழுமையாக தெளிவுபடுத்தாமல், கதாபாத்திரங்களின் பின்கதையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தல் விட்டிருப்பது பின்னடைவு.
இயக்குனர் மகிழ் திருமேனி, நடிகர் அஜித் குமாருக்காக இல்லாமல் அவரை கதாநாயகனாகக் கொண்டு படம் எடுத்துள்ளது சிறப்பு. ‘Road Trip Crime Thriller’ என்பதில் த்ரில்லர் என்ற கூற்றுக்கு ஏற்றவாறு இன்னும் சில காட்சிகள் சேர்த்து அதனோடு முதல் பாதியின் நேரத்தை குறைத்திருந்தால் ‘விடாமுயற்சி’ பெரியளவில் பாராட்டுகளை பெற்றிருக்கும். தொழில்நுட்ப ரீதியாகவும், நடிகர்களின் அர்ப்பணிப்பு ரீதியாகவும் விடாமுயற்சி அசத்தியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]