விஜய்சேதுபதிக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கே ஒரு கம்பேக் படம் கொடுத்திருக்கிறார் நித்திலன் சாமிநாதன். தமிழில் இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என சொல்லக்கூடிய படமாக வெளியாகியிருக்கிறது ‘Maharaja’

குப்பைத்தொட்டி என்கிற லட்சுமியைக் குறியீடாக வைத்து, பார்வையாளன் எதிர்பார்க்கும் ட்விஸ்ட்டை எல்லாம் உடைத்து, நான் லீனியர் பாணியில் கதை சொல்லி, இறுதியில் எல்லா புள்ளிகளையும் ஒன்றிணைத்து அசத்தியிருக்கிறார் இயக்குநர். க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் ‘இவன் வேற மாதிரி’ இயக்குநர் என்பதைச் சொல்கிறது.
கே.கே.நகரில் சலூன், பள்ளிக்கரணையில் வீடு என கடையை விட்டால் வீடு, வீட்டைவிட்டால் கடை என சராசரி வாழ்க்கை வாழும் ஒரு சாமானியன் விஜய் சேதுபதி. மனைவி விபத்தில் இறந்துவிட மகள் மட்டும் இரும்பு குப்பைத்தொட்டியால் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைக்கிறாள். அதனால் அப்பாவும், மகளும் குப்பைத்தொட்டியை லட்சுமி என தெய்வமாக வழிபடுகிறார்கள். குப்பைத்தொட்டி ஒருநாள் காணாமல் போகிறது. குப்பைத்தொட்டி எனும் லட்சுமிக்கு என்ன ஆனது, விஜய் சேதுபதி லட்சுமிக்காக என்ன செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.
சலூன்கடை மகாராஜாவாக அசத்தியிருக்கிறார் விஜய் சேதுபதி. பார்த்து பார்த்து சலித்த அவரது வழக்கமான உடல்மொழியும், நடிப்பும்தான் என்றாலும் இந்த கேரெக்டருக்கு மிகச்சிறப்பாக பொருந்தியிருக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நட்டி, அனுராக் காஷ்யப்பின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, வில்லனாக நடித்திருக்கும் ‘பாய்ஸ்’ மணிகண்டன், போலீஸ் உளவாளியாக நடித்திருக்கும் சிங்கம்புலி, குணால் கண்ணாடியைத்தேடும் கவுன்சிலர் என காஸ்ட்டிங் தேர்வும், அவர்களிடம் நடிப்பை வாங்கியவிதமும் இயக்குநரைப் பாராட்டவைக்கிறது.
அடுத்து இதுதான் நடக்கப்போகிறது என பார்வையாளர்களை யூகிக்கவிடாமல் கதையைக் கொண்டுபோனதில் படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜுக்கு பெரும்பங்கு இருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் பிரச்சனையாகக்கூடிய கதையை மிகச்சரியாக எடிட் செய்துகொடுத்திருக்கிறார். தினேஷ்குமாரின் ஒளிப்பதிவு ஒரு எமோஷனல் த்ரில்லருக்கான நேர்த்தியுடன் படமாக்கப்பட்டிருக்கிறது. சண்டைக்காட்சிகள் இயல்பாகவும், அடி ஒவ்வொன்றும் நம்மேல் விழுவதுபோன்ற தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. படத்தில் தனியாகப் பாடல்கள் இல்லை. பின்னணி இசையின் மூலம் காட்சிகளில் எமோஷனையும், டென்ஷனையும் கூட்டியிருக்கிறார் அஜனீஷ்.
சிங்கம்புலி மாட்டிக்கொள்ளும் இடமும், திரும்ப திரும்ப வரும் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் பரபரப்பான திரைக்கதைக்கு நடுவே ஸ்பீட் பிரேக்கர்களாக இருக்கின்றன. வன்முறை காட்சிகளும் தேவையில்லாமல் ஓவர்டோஸாக இருக்கிறது. க்ளைமேக்ஸ் வசனங்கள் இன்னும் அழுத்தமானதாக இருந்திருக்கலாம். அதேசமயம் க்ளைமேக்ஸில் மெசேஜ் சொல்கிறேன் என கிரிஞ்சுத்தனம் பண்ணாமல் இருந்ததற்காகவே இயக்குநருக்கு நன்றிகள்.
இரண்டு அப்பாக்களின் கதையை, மிகவும் சென்சிட்டிவான சம்பவத்தை சரியாகக் கையாளவில்லையென்றாலும் சொதப்பாமல் கையாண்டதற்காகவே ‘மகாராஜா’வை நிச்சயம் ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]