‘தல’ என கொண்டாடப்படும் அஜித்குமாரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் ‘Vaali’. தற்போது வில்லன் நடிகராக மாஸ் காட்டும் எஸ்.ஜே.சூர்யாவை இயக்குநராக அடையாளம் காட்டிய முதல் திரைப்படம் வாலி. 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் ஏப்ரல் 30,1999 அன்று வாலி திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக மாறியது. சில்வர் ஜூப்ளி கொண்டாடாடும் ‘வாலி’ திரைப்படம் பற்றி 25 தகவல்கள் இங்கே!

1. வசந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிவந்த எஸ்.ஜே.சூர்யா ‘ஆசை’ படப்பிடிப்பின்போது அஜித்துக்கு நண்பரானார். இந்த நட்புதான் ‘வாலி’ படத்துக்கான பிள்ளையார் சுழி!
2. புராணக் கதையான ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு ‘வாலி’ படத்தின் கதையை எஸ்.ஜே.சூர்யா சொல்ல, அஜித்துக்கு அது மிகவும் பிடித்துப்போய் அன்று இரவே ”நீதான் என் அடுத்தப்படத்துக்கான இயக்குநர்” என அறிவித்திருக்கிறார் அஜித்.
3. தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியிடம் அழைத்துச்சென்று எஸ்.ஜே.சூர்யாவை அஜித் அறிமுகப்படுத்த, அவருக்கும் கதை பிடித்துப்போக ‘வாலி’ படத்துக்கான வேலைகள் தொடங்கின.
4. அஜித்தின் கேரியரில் ‘வாலி’ அவரது 22-வது படம்.
5. 20 படங்களுக்கு மேல் அதுவரை நடித்திருந்தும் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை. அஜித்குமார் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்தப்படம் ‘வாலி’தான்.
6. டபுள் ஆக்ஷன் என்பது மட்டுமல்ல ஒரு கேரெக்டர் ஹீரோ, இன்னொரு கேரெக்டர் வில்லன் என தேவா, சிவா என அண்ணன் தம்பியாக, ஹீரோவும், வில்லனும் நானே என இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜித்.
7. தேவா இசையமைக்க, இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ஜீவா ஒளிப்பதிவு செய்ய 1998-ல் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.
8. முதலில் படத்தில் சிம்ரனுக்கு பதில் கீர்த்தி ரெட்டி என்னும் தெலுங்கு ஹீரோயின்தான் நடிப்பதாக இருந்தது. ஷூட்டிங் நெருக்கத்தில்தான் சிம்ரன் ஹீரோயினாக மாற்றப்பட்டார்.
9. ‘வாலி’ படத்துக்கு முன்பாக ‘அவள் வருவாளா’ படத்தில் சிம்ரன் அஜித்துடன் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த நட்பின் மூலம்தான் வாலிக்கு சிம்ரனைப் பரிந்துரைத்திருக்கிறார் அஜித்.
10. ‘வாலி’ படத்தின் ஆரம்ப பட்ஜெட் என்ன தெரியுமா? 2 கோடி
11. டபுள் ஆக்ஷன் என்பதால் படத்துக்கான பட்ஜெட் கைமீறிப்போக அடிக்கடி ஷூட்டிங் நிற்பதும் நடப்பதுமாக இருந்திருக்கிறது.
12. சென்னை ஸ்பிக் வளாகத்தில் ஒரு நாள் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டு எல்லோரும் வந்துவிட பணம் தராததால் கேமெரா யூனிட் வரவில்லை. இதனால் ஷூட்டிங் அப்படியே நின்றிருக்கிறது.செம அப்செட் ஆன அஜித் யாருக்கும் சொல்லாமல் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே போயிருக்கிறார். தன்னிடம் இருந்த அந்த பைக்கை விற்று 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து அன்றைய ஷூட்டிங்கை நடத்தியிருக்கிறார் அஜித்.
13. 50 நாட்களுக்குள் ‘வாலி’ படத்தின் ஷுட்டிங்கை முடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
14. ‘அவள்’ வருவாளா படத்துக்குப்பிறகு அஜித் நடித்த ‘உயிரோடு உயிராக’, ‘தொடரும்’, ‘உன்னைத்தேடி’ என வரிசையாக மூன்று படங்கள் ஃப்ளாப் ஆனதால் மிகப்பெரிய ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் அஜித்.
15. படத்தின் ஷூட்டிங் முடிந்து டபுள் பாசிட்டிவ் பார்த்த அஜித் ‘வாலி’ படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்பதை கணித்திருக்கிறார்.
16. ‘வாலி’ திரைப்படம் தன் பிறந்தநாளுக்கு வெளியாக வேண்டும் என அஜித் விரும்ப, அஜித்தின் ஆசையை நிறைவேற்ற தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி மே 30-ம் தேதி, 1999-ம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.
17. ‘ஆசை’ நாயகனாக அதுவரை அடையாளப்படுத்தப்பட்ட அஜித்குமாரின் சினிமா வாழ்வில் மிக முக்கியமான திரைப்படமாக மாறியயது.
18. ஹீரோ வில்லனாக நடித்தால் படம் ஓடாது என்கிற மூடநம்பிக்கையைத் தகர்த்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது வாலி.
19. வாலி திரைப்படம் தமிழ்நாடு முழுக்க 270 நாட்கள் ஓடி ஹிட் அடித்ததோடு கேரளாவிலும் 100 நாட்கள் ஓடியது.
20. காது கேளாத, வாய் பேச முடியாத தேவா கதாபாத்திரம் அஜித்துக்கு நடிப்பு ரீதியாக மிகப்பெரிய பாராட்டுகளையும், விருதுகளையும் வாங்கித்தந்து.
21. ‘வாலி’ படம் ஹிட்டாக இன்னொரு மிக முக்கிய காரணம் படத்தின் பாடல்கள். தேவா இசையமைத்த இந்தப்படத்தில் ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘ஓ சோனா’, ‘நிலவைக்கொண்டு வா’ பாடல்கள் இப்போதும் ஒன்ஸ்மோர் கேட்கவைக்கும்.
22. ‘வாலி’ படத்தில் அஜித்தின் முன்னாள் காதலியாக கேமியோ ரோலில் நடித்திருந்தார் ஜோதிகா. இந்த கேமியோ ரோல் புகழ்தான் ஜோதிகாவை ஹீரோயினாக கோலிவுட்டில் கால்பதிக்கவைத்தது.
23. ‘வாலி’ மிகப்பெரிய ஹிட் அடித்ததும் அஜித்தும், எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ‘நியூ’ படத்தை எடுக்க திட்டமிட்டனர். ஆனால், இதன் கதை விவாதத்தின்போது அஜித்துக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட இருவரும் பிரிந்தனர்.
24. ‘வாலி’ திரைப்படம் கன்னடத்திலும் ரீ-மேக் செய்யப்பட்டு ஹிட் அடித்தது. ‘வாலி’ படத்தின் ரீ-மேக் உரிமையை இந்தி தயாரிப்பாளரான போனி கபூருக்கு எஸ்.எஸ்.சக்ரவர்த்தி விற்க, கதையை விற்கத் தனக்குதான் உரிமையிருக்கிறது என எஸ்.ஜே.சூர்யா வழக்கைத்தொடுக்க இறுதியில் உச்சநீதிமன்றம் தயாரிப்பாளருக்குத்தான் எல்லா உரிமையும் உண்டு என தீர்ப்பளித்தது.
25. ‘வாலி’ படத்துக்குப்பிறகு அஜித்தும் எஸ்.ஜே. சூர்யாவும் ஒன்றுசேரவில்லை. எஸ்.ஜே.சூர்யாவும் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியும் ஒன்றுசேரவில்லை என்பதே ‘வாலி’ வரலாறு
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]