Home Cinema News தன்னம்பிக்கை நாயகன்… விடாமுயற்சியோடு சினிமாவில் ஜெயித்த தல Ajithkumar

தன்னம்பிக்கை நாயகன்… விடாமுயற்சியோடு சினிமாவில் ஜெயித்த தல Ajithkumar

100 வெற்றிகளை பார்த்தவன் அல்ல, 1000 தோல்விகளை தோளில் சுமந்தவன் என்று என்ன நடந்தாலும், எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு வாழ்வில் வென்றவர் சரித்திர நாயகன் AjithKumar.

by Santhiya Lakshmi

மே 1 என்றால் உழைப்பாளர் தினம் என அனைவரும் அறிந்த ஒன்றே. அதே நாளில் தான் தனது உழைப்பால் உயர்ந்த Ajithkumar என்ற ஒரு மனிதரின் பிறந்த நாளும் கூட. அஜித் குமார் என்றவுடன் அனைவரின் மனதிலும் நினைவுக்கு வருவது தன்னம்பிக்கை. எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையை மட்டுமே வைத்து சினிமாவில் சாதித்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் இருந்து வருகின்றனர். அதில் அஜித் குமாரும் ஒருவர். அஜித் தனது இளமை பருவத்தில் பள்ளி படிப்பை முடிக்கவில்லை. பிடிக்காத எதையும் மனதளவில் கூட செய்ய நினைக்காத அஜித் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார். தனது சகோதரர் ஐ.ஐ.டியில் படித்துக்கொண்டிருக்க பள்ளிப்படிப்பை கூட முழுமையாக முடிக்காமல் இருந்தார் அஜித். கிடைத்த வேலையை செய்து வந்த அஜித்  பைக் மெக்கானிக்காக இருக்கும் போது பைக் மீது கொண்ட ஆர்வம் அஜித்திற்கு இன்னும் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.   

Ajithkumar special Dheena

நடிக்க வருவதற்கு முன்பு பைக் மெக்கானிக், துணிக்கடை என வேலை செய்து வந்தார். ஒரு சில விளம்பரங்களில் கூட நடித்து இருந்தார். அஜித் குமார் வேலை செய்து வந்த இடத்தில் ஒரு சிலர் அஜித்தின் தோற்றத்தை பார்த்து நீ ஏன் நடிப்பில் வாய்ப்பு தேட கூடாது என சொல்வதை கேட்டு சினிமா பட வாய்ப்பை தேட தொடங்கினார். எஸ்.பி. சரண் மற்றும் அஜித் இருவரும் பள்ளி நண்பர்கள். அவரின் மூலம் முதன் முதலில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைக்க பட ஷூட்டிங்கின் போது இயக்குனர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டார். அஜித் குமார் இதுவரை நடித்த தெலுங்கு படம் அதுவே முதலும் கடைசியும்.

இயக்குனர் செல்வா இயக்கிய படம் அமராவதி. எஸ்.பி.பி உதவியுடன் அதில் நடிக்க அஜித்திற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை நன்றாக பயன்படுத்திக்கொண்டார் அஜித். பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட அஜித் ஒரு முறை ரேஸில் படுகாயமடைந்தார். ஒரு வருடத்திற்கு மேல் ஓய்வில் இருந்தார். இதனால் தொடர்ச்சியாக அவரால் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. 

அதற்க்கு பின்னர் நடித்த ஒரு சில படங்கள் ஓரளவு வெற்றியை தந்த நிலையில் 1995-ல் வெளியான ஆசை திரைப்படம் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் பேர்சொல்லும் படமாக அமைந்தது. 1995-ல் அஜித் மற்றும் விஜய் இருவரையும் இணைந்து நடித்த படம் ராஜாவின் பார்வையிலே. பட ஷூட்டிங்கின் போது விஜய்யின் அம்மா விஜய்க்கு மட்டுமல்ல அஜித்திற்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வருவார். அப்போது தெரியவில்லை இந்த இருவரும் தான் தமிழ் சினிமாவின் தல-தளபதி யாக உச்சத்திற்கு செல்வார்கள் என்று. பின்னர் 1998-ல் சரண் இயக்கத்தில் காதல் மன்னன் படத்திற்கு பிறகு தொடந்து நடிக்க ஆரம்பித்தார்.

கார், பைக் ரேஸ்களில் ஆர்வமாக இருந்ததால் சில பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தார். பின்னாளில் அந்த படங்கள் ப்ளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. நடிப்பிற்கு உண்மையாக இருந்தால் நடிப்பு அவர்களை கைவிடாது என்பதற்கு அஜித் குமார் ஒரு உதாரணம். இன்றுவரை ஸ்டண்ட், சண்டை காட்சிகள், பைக் காட்சிகள் என எதற்கும் டூப் போடாமல் பெரிய ரிஸ்க் எடுத்து நடித்து வந்தார். அந்த அளவு நடிப்பின் மீது பற்று கொண்டு நடித்து வரும் அஜித்தை தல என்று தலையில் வைத்து ரசிகர்கள் கொண்டாடுவதில் தவறேதும் இல்லை. அதே போல சினிமா என்பது தியேட்டரில் மட்டுமே ரசிக்க வேண்டிய ஒன்று. அதை தனது சொந்த காரணத்திற்க்காக பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்த அஜித் தனது ரசிகர் மன்றத்தை கூட கலைத்து விட்டார். புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட அஜித் தனது வீட்டிலேயே ஸ்டூடியோ ஒன்றை வைத்து அதில் தான் எடுக்கும் புகைப்படங்கள் வைத்து ரசித்து வருகிறார். இந்திய அளவில் விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ள ஒரே நடிகர் அஜித் குமார் மட்டுமே. 

சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கு பெற்ற ஒரு சில இந்தியர்களில் அஜித் குமாரும் ஒருவர். தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை ரைஃபில்ஸ் கிளப் அணிக்காக பங்கு பெற்று தங்க பதக்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றார். மெட்ராஸ் தொழில்நுட்ப கல்வி மையமான எம்.ஐ.டியில் மெசின் துரோணா என்ற ஹெலிகாப்டர் சோதனையில் தலைமை விமானியாகவும், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தில் பொறியியல் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் யோசனையை அஜித் வழிகாட்டிய ட்ரோன் பயிற்சி மூலமே இது சாத்தியமானதாக கூறப்படுகிறது. அஜித் சமையல் செய்வதிலும் ஆர்வமாக இருந்து வருகிறார். ஷூட்டிங்கின் போது தான் சமைத்த உணவை சக நடிகர்களுக்கு பரிமாறி மகிழ்ச்சியடைந்து வருவார்.

2010-ல் ஒரு முறை தமிழக அரசு விழா ஒன்றில் நடிகர்கள் கட்டாய படுத்தி அரசு விழாக்களில் பங்குபெற வைக்கின்றனர் என கூறியதை ஆதரித்தும் எதிர்த்தும் சில கருத்துக்கள் வந்தன. அரசியலுக்கும் அஜீத்துக்கும் இடைவெளி அதிகம். ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் முன்னதாகவே வந்து வாக்களித்து விடுவார்.      

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.