Home Cinema News பாலு மகேந்திரா- ஒளியை கவிதையாக்கிய கலைஞன்! 

பாலு மகேந்திரா- ஒளியை கவிதையாக்கிய கலைஞன்! 

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக சில முன்னோடிகளில் இயக்குனர் பாலு மகேந்திரா தவிர்க்க முடியாதவர். ஒளியை கருவியாய் உபயோகித்த வித்தகனின் பயணம் இது. 

by Vinodhini Kumar

மே மாதம் 20ம் தேதி, ஸ்ரீ லங்காவில் பிறந்த பலநாதன் பென்ஜமின் மகேந்திரன், சிறு வயதில் பள்ளியில் உள்ள ஃபாதர் ஒருவரால் படங்கள் பார்ப்பதற்கு அறிமுகமானார். அதிலும் ஒரு‌ பள்ளி சுற்றுலாவில் ஆங்கில படமான ‘தி பிரிட்ஜ் ஆஃப் தி ரிவர் க்வாய்’ (The bridge of the river Kwai) படத்தின் படப்பிடிப்பை நேரில் பார்த்துள்ளார். அந்த படத்தின் இயக்குனர் டேவிட் லீன், காட்சி ஒன்றில் ‘ரெடி 1..2..3’ என‌ சொல்ல அந்த இடம் முழுதும் மழை பெய்ததாம். சிறுவனாக இருந்த பாலு மகேந்திராவுக்கு காட்சிக்காக செயற்கை மழையை பயன்படுத்தியது அறியாமல், திகைப்பில் பிரம்மிப்புடன் அதை பார்த்து, தானும் இயக்குனராக வேண்டும் என்று எண்ணினாராம்‌. 

பிறகு வளர்ந்து சினிமா மீது ஏற்பட்ட காதலால் பூனே திரைப்பட கல்லூரியில் சேர்ந்தார். மலையாளத்தில் ‘நெல்லு’ படத்தில் ஒளிப்பதிவாளராக சினிமா பயணத்தை தொடங்கினார். இந்த படம் சிறந்த ஒளிப்பதிவிறக்கான கேரளா மாநில விருது பெற்றார். பூனே கல்லூரியில் படிக்கும்போது உலக சினிமாவிற்கு அறிமுகமாகி ஃபிராண்ச்வா ட்ருஃபா, ஜான் லூக் கோடார்ட, சத்யஜித் ரே ஆகியோருடைய படங்களால் ஏற்பட்ட தாக்கத்தால் இயக்குனராக புதிய பரிமாணம் எடுத்தார்‌. முதல் படம் கன்னடத்தில் எடுத்த ‘கோகிலா’, நல்ல வெற்றி படமாக அமைந்தது. ‘முக்கோண காதல்’ கதையை ‘கோகிலா’ மூலமாக தொடங்கி, இந்த படம் சிறந்த திரைக்கதைக்கான கர்நாடகா விருதையும், சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதையும் பெற்றார். 

Mullum Malarum poster

தமிழ் சினிமாவில் 1978ல் ‘முள்ளும் மலரும்’ படத்தை இயக்குனர் மகேந்திரன் உடன் இணைந்து இயக்கி,  எழுதி,ஒளிபதிவு செய்து எடிட்டிங்கும் செய்தார். கதையை காட்சிகள் வழியாக புதுமையாக வெளிக்காட்டிய படம். மூன்று தமிழ்நாடு மாநில விருதுகளை அள்ளிய படம். ரஜினிகாந்தின் உண்ணதமான நடிப்பும், ஷோபா, சரத் பாபுவின் இயல்பான நடிப்பையும் வெறிகொண்டு வந்தவர்கள் இயக்குனர் மகேந்திரன் மற்றும் பாலு மகேந்திரா. 

பாலு மகேந்திராவின் சர்ச்சைக்குறிய கதைகள் 

Shoba and Balu Mahendra

‘கோகிலா’, ‘சதிலீலாவதி’, ‘ரெட்டை வால் குருவி’, ‘மூடுபனி’, ‘ஓலங்கள்’ ஆகிய படங்களில் முக்கோண காதல், அதிர்ச்சியான எதார்த்த கதைகள், கோரமான நிகழ்வுகள் என சர்ச்சைக்குறிய கதைகளை எழுதி, படமாக்கி அதில் வெற்றியும் கண்டவர் பாலு மகேந்திரா. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சர்ச்சைக்கு ஆளாகி, பொதுவாக தாக்கப்பட்டார். அவரின் நிஜவாழ்க்கை சம்பவங்களால் பாதிக்கப்பட்டு அதன் பின் சினிமா கதைகளில் அதன் தாக்கம் தெரியவும் தொடங்கியது. 

பாலு மகேந்திராவின் பெண் பாத்திரங்கள்

Actress Shoba

முதல் படமான ‘கோகிலா’வில் நடிகை ஷோபா மற்றும் ரோஜா ரமணியின் நடிப்பும் அவர்கள் ஏற்ற பாத்திரமும் மொழிகள் தாண்டி பாராட்டப்பட்டதன் காரணம் பாலு மகேந்திராவின் சித்தரிப்பு தான். விருப்பத்தையும் விதியையும் இந்த இரு பாத்திரங்களும் பிரதிபலித்ததும் சினிமாவில் அதுவரை பேசப்படாத ஒன்று. 

Mullum Malarum Jayalakshmi

முள்ளும் மலரும்’ படத்தில் அண்ணனின் வாக்கும், தனது வாழ்க்கையின் எதிர்காலத்துக்கும் நடுவில் மாட்டி தவிக்கும் பெண்ணாக நடிகை ஷோபா. ஜெயலட்சுமி கணவனின் கண்மூடித்தனமான நம்பிக்கையை எதிர்த்த பாத்திரமாக எழுதியிருந்தார் Balu Mahendra. 

மூடுபனி’ படத்திலும் நடிகை ஷோபா தனித்துவமான த்ரில்லர் பாத்திரத்தில் காட்டியிருப்பார்‌‌. ஒரு பெண்ணுக்கு அவளின் காதலை தேர்வு செய்யும் உரிமையும், வாழ்க்கையில் சிக்கல்கள் வந்தாலும் அதில் இருந்து மீண்டு வரும் வண்ணம் கதைகளை எழுதியிருப்பார்‌. 

Sri Devi in Moondram Pirai

‘மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பும், பாலு மகேந்திரா அதை படம் முழுவதும் எழுதியிருக்கும் விதமும் இன்றளவும் பேசப்படுகிறது. மூன்றாம் பிறை படம், பாலு மகேந்திராவின் மற்ற‌ படங்களை விட தனித்து நிற்பதும் குறிப்பிடத்தக்கது. 

‘ரெட்டை வால் குருவி’ படத்தில் அர்ச்சனா மற்றும் ராதிகாவின் பாத்திரங்களில் ஒரு உண்மைத்தன்மை இருக்கும். என்னதான் படம் ஒரு காமெடி படமாக அமைந்தாலும், அவ்விருவரின் நடிப்பும் கதாப்பாத்திரமும் மறக்கமுடியாதது. 

Revathi in Marupadiyum

மறுபடியும்’ படத்தில் நடிகை ரேவதியின் கதாப்பாத்திரம் கேட்பதற்கு எளிதாக இருந்தாலும், அவள் அந்த படத்தில் அனுபவிக்கும் சோகமும், வெளிப்படுத்தும் தெளிவும் இன்றைய பட நாயகிகளிடம் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு கலே உள்ளது. 

பாலு மகேந்திராவின் படங்களில் வித்தியாசம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. கதாப்பாத்திரத்தில், கதையில், கதையை கூறும் வகை என பல இருக்கிறது. அவர் எதார்த்தத்தை தனது கேமரா லென்ஸ்களில் ஒழித்து வைத்திருந்தார். 

‘மூன்றாம் பிறை’ படத்தின் தனித்துவம்

Moondram Pirai stills

பாலுமகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ படம் ஏன் தனித்துவமாக இன்றளவும் பேசப்படும் காரணங்கள் நிறைய‌. இதே போல சில கதையை எழுதி இயக்கியுள்ளார் பாலு மகேந்திரா அவர்கள். பிரபலமான, ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் ஒரு நபர் விபத்தில் சிக்கி அதனால் ஏற்படும் மாற்றங்கள் என இரண்டு மூன்று படங்கள் உண்டு. ஆனால் இப்போதும் ‘மூன்றாம் பிறை’ மட்டும் காலத்தால் அழியாமல் இருப்பதற்கு, கதை, நடிப்பு மற்றும் இயக்கம். கதையில் மையமான பாத்திரங்கள் கமல் மற்றும் ஸ்ரீ தேவி தான். ஆனாலும் எந்த இடத்திலும் சலிக்காமல் கொண்டு செல்வார். அதிலும் ஸ்ரீ தேவியின் நுணுக்கமான  நடிப்பால் பார்ப்பவர்களை உடனடியாக கவர்ந்து, படத்தின் முடிவில் கவர்ந்த இதயங்களை சுக்குநூறாக உடைத்திருப்பார் பாலு மகேந்திரா. பல பெண்கள் இந்த படத்தின் முடிவை மாற்றச் சொல்லி பாலு மகேந்திராவுக்கு கடிதம் எழுதியதாக கூட பேசப்படுகிறது. 

Moondram Pirai cast

இயக்குனர் என்றால் கதையை மக்களிடம் சேர்ப்பது மட்டுமின்றி அதில் தன்னுடைய புதுமையை இயல்பாக கலந்தவர் பாலு மகேந்திரா. நிஜ சம்பவங்களை அல்லது பாத்திரங்களை பயன்படுத்தும் போது செயற்க்கை மேக்கப் அல்லது டிராமாட்டாக காட்சிகள் இல்லாமல் இயங்கக்கூடியவர் தான் பாலு மகேந்திரா.‌ காட்சிகளை அவர் பார்த்து, உணர்ந்து, ரசித்து, சித்தத்தை மக்களுக்கும் படம்பிடித்து காட்டியவர். 

பாலு மகேந்திரா and Ilayaraja

பாலு மகேந்திராவும் ஷோபாவும் எப்படி பல படங்களில் வேலை செய்தார்களோ அதே போல் இசைஞானி இளையராஜா உடன் 21 படங்களில் இணைத்துள்ளார். சினிமாவில் கலையையும் எதார்த்தத்தையும் கமர்ஷியல் படங்களையும் தன் கையில் அடக்கி விந்தையாக பயன்படுத்தி காட்டிய சினிமா முன்னோடி‌. 

காதலாக இருந்தாலும் ஈர்ப்பாக இருந்தாலும், வன்மமாக இருந்தாலும் அதை கதை வழியாகவும் காட்சி வழியாகவும், மக்களிடம் கடத்தி செல்லும் படங்களை தந்தவர். குறைவான படங்களையே இயக்கியிருந்தாலும் இன்றும் அதில் அவர் காட்டிய வழிகளை பின் தொடர்ந்து, சினிமாவை சிந்தனையின் கூடாரமாக மாற்றும் பல இயக்குனர்கள் உள்ளனர். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.