Kamal Haasan மற்றும் K.Balachander கூட்டணியில் கிட்டத்தட்ட 18 படங்கள் ஹீரோவாக கமல் நடித்துள்ளார்.
இயக்குனர் சிகரம் என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட கைலாசம் பாலச்சந்தர் அவர்கள் 1965-ல் வெளியான நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ரசிக்கும்படியான படங்களை தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்து வந்தார். கமல் ஹாசனை அரங்கேற்றம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்த K.Balachander அதன் பின்னர் தமிழில் 18 படங்களில் ஹீரோவாக கமலை வைத்து இயக்கியுள்ளார்.

இவர்களது கூட்டணியில் வெளியாகும் படங்கள் என்றாலே தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. Kamal Haasan திரை துறையில் செய்த சாதனைகளுக்கு தொடக்க காலத்தில் பாலச்சந்தர் உந்துகோலாக இருந்து வந்தார்.
1973-ல் பாலச்சந்தர் இயக்கத்தில் பிரமீலா, சிவகுமார், எஸ்.வி. சுப்பையா, கமல் ஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் “அரங்கேற்றம்”. கமலை ஹீரோவாக அறிமுகம் செய்த பாலச்சந்தர் அதே ஆண்டு மீண்டும் கமலை வைத்து “சொல்லத்தான் நினைக்கிறேன்” என்ற படத்தை இயக்குகிறார். இதில் சிவகுமார், எஸ்.வி. சுப்பையா, ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அதை தொடர்ந்து நான் அவனில்லை, அவள் ஒரு தொடர் கதை, அபூர்வ ராகங்கள், மன்மத லீலை, மூன்று முடிச்சு என வெற்றிப்படங்களை கமல் பாலச்சந்தர் கூட்டணி கொடுத்து வந்தது. 1974-ல் வெளியான “நான் அவனில்லை” மற்றும் “அவள் ஒரு தொடர் கதை” படங்கள் சூப்பர் ஹிட்டாகிறது. 1975-ல் வெளியான அபூர்வ ராகங்கள் கமல், ரஜினி மற்றும் பாலச்சந்தர் கூட்டணியில் வெளியான முதல் படம். அறிமுக படத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கலக்கியிருப்பார்.
1976-ல் மன்மத லீலை, மூன்று முடிச்சு ஆகிய படங்கள் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது. பின்னர் 1977- ல் “அவர்கள்” படம் கமல், ரஜினி, சுஜாதா ஆகியோர் நடிப்பில் வெளியானது. 1978-ல் “நிழல் நிஜமாகிறது” மற்றும் “தப்பு தாளங்கள்” படம் வெளியானது. 1979-ல் கமல், ரஜினி, ஜெயா பிரதா, கீதா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “நினைத்தாலே இனிக்கும்”. இதில் இடம்பெற்ற “எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்” பாடல் இன்றளவும் ரசிக்கும் படியாக இருந்து வருகிறது.
1980-ல் கமல், ஸ்ரீதேவி, பிரதாப், எஸ்.வி. சேகர், திலிப் ஆகியோர் நடிப்பில் வெளியான “வறுமையின் நிறம் சிவப்பு” படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு அரசு விருது, பிலிம்ஃபேர் விருது என இந்த படத்திற்கு வழங்கப்பட்டது.
1986-ல் கமல், ரேவதி, ஸ்ரீவித்யா, ரேகா, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் “புன்னகை மன்னன்”. கமல் ஹாசன் சேது மற்றும் சார்லி சாப்ளின் என இரு வேடத்தில் கலக்கியிருப்பார். சார்லி சாப்ளின் வேடத்தில் ஒரு காட்சியில் மட்டும் குள்ளமான தோற்றத்தில் இருப்பது போல நடித்திருப்பார். இது பின்னாளில் “அபூர்வ சகோதரர்கள்” படத்தில் வரும் அப்பு கேரக்டர் எடுக்க உதவியது என கூறியிருப்பார்.
1988-ல் கமல், சீதா, மனோரமா, ஜெமினி கணேஷ், நாசர், டெல்லி கணேஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் “உன்னால் முடியும் தம்பி”. கிராமத்தில் இருந்து சமூக சேவை செய்து சிறந்த குடிமகன் விருதை வாங்கும் உதயமூர்த்தி கதாபாத்திரத்தில் கமல் நடித்திருப்பார்.

தற்போது தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக இருக்கும் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் திரை பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் பாலசந்தர் ஆசானாக இருந்து அவர்களை வழிநடத்திவந்தார். கமல், ரஜினி ஆகியோரின் ஒவ்வொரு வெற்றியிலும் பாலசந்தர் அவர்களின் பங்கு கட்டாயம் இருந்தது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]