தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த சூர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக இறங்குமுகம்தான். சுதா கோங்கரா இயக்கத்தில் நடித்த ‘சூரரைப்போற்று’ படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டாலும் இது கொரோனா லாக்டெளன் காரணமாக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் பெரிய வசூலை இந்தப்படம் பார்க்கவில்லை. அதன்பிறகு சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படம்தான் அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக தியேட்டரில் ரிலீஸ் ஆனப்படம். இது திரைக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்தநிலையில் சூர்யாவின் அடுத்தடுத்தப்படங்கள் போஸ்ட் ப்ரொடக்ஷனிலும், ப்ரீ- ப்ரொடஷனிலும் மட்டுமே இருக்கின்றன. ஆனால், திரைக்கு வரும் சுவடுகள் தெரியவில்லை எனக் கவலைகொள்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘கங்குவா’ படத்துக்கான வேலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்துவருகிறது. படத்துக்கான முழுமையான ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் முடிந்துவிட்டநிலையில் அதிகப்படியான கிராஃபிக்ஸ், அனிமேஷன் வேலைகள் இருப்பதால் இந்த ஆண்டு இறுதியில்தான் ‘கங்குவா’ படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.
இந்தப்படத்துக்கு அடுத்தடியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக அறிவிக்கப்பட்ட ‘வாடிவாசல்’ படத்துக்கான ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. வெற்றிமாறன் இயக்க, கலைப்புலி தாணு தயாரிக்கும் படம்தான் ‘வாடிவாசல்’. இது 1970-களில் நடக்கும் கதை என்பதால் இதற்கான ப்ரீப்ரொடக்ஷன் பணிகளுமே இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. அத்தோடு ஜல்லிக்கட்டு காட்சிகள்தான் படத்தின் பிரதானமாக இருப்பதால் அனிமேட்ரானிக்ஸ் பணிகளும் இப்போதே தொடங்கி நடந்துவருகிறது. ஆனால், படத்துக்கான முழுமையான ஷூட்டிங் இன்னும் தொடங்கவேயில்லை.
‘வாடிவாசல்’ நிலுவையில் இருக்க, சூர்யா சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மதுரையைப் பின்னணியாக கொண்ட இந்தப்படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் தொடங்கவில்லை. இந்தப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, மாதவன் ஆகியோர் சூர்யாவுடன் நடிக்க இருக்கிறார்கள். சுதா கொங்கரா தற்போது ‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீ-மேக்கை இயக்கிவருவதால் ‘புறநானூறு’ படத்தின் ஷூட்டிங் தள்ளிபோய்க்கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
சூர்யாவின் அடுத்தடுத்த படங்களான ‘வாடிவாசல்’, ‘புறநானூறு’ படங்களின் ஷூட்டிங்கே இன்னும் தொடங்காத நிலையில், சூர்யா 44 என வொர்க்கிங் டைட்டிலாக வைக்கப்பட்டு அடுத்தப்படத்துக்கான வேலைகள் தற்போது தொடங்கிவிட்டன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கயிருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனத்தோடு சேர்ந்து, கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கும் நிலையில் இந்தப்படத்துக்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் இப்போது முழுவீச்சில் தொடங்கியிருக்கிறது. ஆனால், எப்போது ஷூட்டிங் தொடங்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை.
#CastingCall pic.twitter.com/d8gVndXjoc
— karthik subbaraj (@karthiksubbaraj) April 22, 2024
சூர்யா தரப்பில் விசாரிக்கும்போது சூர்யாவுக்குப் பிரச்சனையாக இருப்பதே ‘வாடிவாசல்’ படம்தான் என்கிறார்கள். சூர்யா முழுமையாக டேட்ஸ் கொடுத்தபோதும் வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தில் பிசியாக இருந்ததால் ஷூட்டிங் செல்லமுடியவில்லை. இப்போது சூர்யா அடுத்தடுத்தப்படங்களுக்குத் தயாராகும்போது ‘வாடிவாசல்’ படத்துக்கான லுக் பாதிக்கப்படும் என வெற்றிமாறன் தரப்பில் சொல்லப்படுவதாகச் சொல்கிறார்கள்.
‘வாடிவாசல்’ குறித்து சூர்யா தெளிவான முடிவெடுத்தால்தான் அடுத்தடுத்தப்படங்கள் ஷூட்டிங் போகும் எனக் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]