இலங்கைத்தமிழரான சுபாஷ்கரனின் நிறுவனம் லைகா. மொபைல் சேவை நிறுவனமான லைகா யுனைடெட் கிங்டமில் கொடிகட்டிப்பறக்கும் நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனம் முதன்முதலாக ‘கத்தி’ படம் மூலமாக தமிழ் சினிமா தயாரிப்பில் நேரடியாக இறங்கியது. இதுவரை ரஜினியின் ‘தர்பார்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது லைகா.
இந்நிலையில் தற்போது லைகாவின் தயாரிப்பில் ஷங்கர் – கமல்ஹாசனின் ‘இந்தியன் – 2’, ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்’, அஜித்தின் ‘Vidaa Muyarchi’ என மூன்று பெரிய பட்ஜெட் படங்கள் இந்த ஆண்டு ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. ‘இந்தியன் -2’ படத்தின் ஷூட்டிங் 2019-ம் ஆண்டு தொடங்கியது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப்பிறகு வரும் ஜூன் மாதம் ‘இந்தியன் 2’ ரிலீஸாகயிருக்கும் நிலையில், ரஜினியின் ‘வேட்டையன்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத் தயாரிப்பு பணிகளில் லைகா நிறுவனம் கறார் காட்டுவதாகத் தெரிகிறது.

லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனத்தால் லைகாவுக்குப் பெரிய நஷ்டமாம். அதனால் இனிமேலும் நஷ்டத்துக்குப் படங்களை தயாரித்து வெளியிடக்கூடாது என சுபாஷ்கரன் சொல்லியிருப்பதால் சிக்கன நடவடிக்கைகளில் லைகா நிறுவனம் இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் ‘வேட்டையன்’ இயக்குநர் த.செ.ஞானவேல், ‘விடாமுயற்சி’ இயக்குநர் மகிழ் திருமேனி என இருவருக்குமே தயாரிப்பு நிறுவனத்துடன் பஞ்சாயத்து என்கிறார்கள்.
லைகா நிறுவனமோ ஞானவேல், மகிழ் திருமேனி இருவருமே குறித்த நேரத்துக்குள், குறித்த பட்ஜெட்டுக்குள் படம் எடுக்கவில்லை. இதுதான் தாமதத்துக்கு காரணம் என்கிறது. இதற்கிடையே ‘விடாமுயற்சி’ படத்தின் பட்ஜெட் கைமீறிப்போனதால் அஜித்திடம் சம்பளத்தைக் குறைக்கச்சொல்லி லைகா பேச, கடுப்பான அஜித் ‘Good Bad Ugly’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்து அந்தப்படத்தின் ஷூட்டிங்கிற்கு கிளம்பிப்போய்விட்டார். இந்தப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்போவதாக அறிவித்துவிட்டது இதன் தயாரிப்பு நிறுவனம். ஏற்கெனவே பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த ‘விடாமுயற்சி’ பொங்கலையும் தாண்டிப்போகுமோ என அதிர்ச்சியில் இருக்கிறார்கள் தல ரசிகர்கள்.
இதற்கிடையே பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த ‘வேட்டையன்’ பட ஷூட்டை அவசர அவசரமாக முடித்திருக்கிறது லைகா. அடுத்த சில நாட்களில் சென்னை திருவேற்காட்டில் செட் போடப்பட்டு ரஜினியை வைத்து ஓப்பனிங் பாடல் ஷூட் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், இப்போது ரஜினி இல்லாமலே அந்தப்பாடலை ஷூட் செய்யமுடிவெடுத்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங்கை ரஜினி தொடங்கவேண்டும் என்பதற்காகத்தான் சீக்கிரம் முடிக்கிறோம் என்கிறார்கள் லைகா தரப்பில். ஆனால், படக்குழுவினரோ லைகா நிறுவனம் பட்ஜெட்டைக் காட்டி நெருக்கடி கொடுத்ததே படத்தை அவசர அவசரமாக முடிக்க காரணம் என்கிறார்கள்.
உண்மை என்ன என்பது ‘லைகா’வுக்கே தெரியும்!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]