தமிழ் சினிமாவில் ஒன்று, இரண்டு இயக்குனர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் ஒரே படத்தில் 10 இயக்குனர்கள் வரை நடித்த ஒரே படம் “மாயாண்டி குடும்பத்தார்” மட்டுமே.
குடும்ப படங்கள் என்றாலே பெரும்பாலும் நினைவுக்கு வருவது விசு, K.S. ரவிக்குமார் படங்கள் தான். 2000 வரை இவர்களது படங்கள் ஒரு குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகளை மையமாக கொண்டு ரசிக்கும் படியான படைப்புகளை தந்து வந்தனர்.
2000-க்கு பிறகு பெரும்பாலும் குடும்ப படங்கள் வராமல் இருந்தது. அப்படிப்பட்ட சமயத்தில் அண்ணன் தம்பி பாசம், அப்பா மகன் பாசம், குடும்பத்தில் உள்ள உறவுகள் முக்கியம் என ரசிக்கும் படியான கதைகளத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட படம் “மாயாண்டி குடும்பத்தார்”.
SK. செல்வகுமார் தயாரிப்பில், இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில், சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் இசையில் 2009-ல் மாயாண்டி குடும்பத்தார் படம் வெளியானது. ராசு மதுரவன் இதற்க்கு முன்பு பூமகள் ஊர்வலம், பாண்டி போன்ற படங்களை இயக்கியிருந்தார். படம் நல்லவரவேற்பை பெற்று பாக்ஸ் ஆஃபீஸில் கலக்கியது.

மணிவண்ணன் மற்றும் GM. குமார் ஆகியோர் அண்ணன் தம்பிகள். மணிவண்ணனுக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் (பொன்வண்ணன், சீமான், KP. ஜெகன்நாத், தருண் கோபி மற்றும் தீபா சங்கர்). அதே போல GM. குமாருக்கு 3 மகன்கள்( ரவி மரியா, நந்தா பெரியசாமி, சிங்கம் புலி).
மணிவண்ணன் மற்றும் GM. குமார் ஆகியோருக்கு ஆரம்பம் முதலே சண்டை இருந்து கொண்டே இருக்கும். மணிவண்ணன் தனது 3 மகன்கள் மற்றும் மக்களுக்கு திருமணம் முடித்து வைத்து விடுவார். கடைசி மகனான தருண் கோபியை படிக்க வைத்து பெரிய வேலையில் அமர்த்த வேண்டும் என்று ஆசைப்படுவார் மணிவண்ணன்.

எதிர்பாராத விதமாக இறந்து விடுவார் மணிவண்ணன். படிப்பை மட்டுமே வைத்து இளைய மகனான தருண் கோபி எப்படி பல அவமானங்களை கடந்து வாழ்வில் வெற்றி பெறுகிறார் என்பது மீதி கதை. இதற்கிடையே GM. குமார் குடும்பத்துடன் ஏற்படும் சண்டைகள், அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடைபெறும் பாச போராட்டம் என படம் முழுவதும் ரசிக்க வைத்திருப்பார்.
படத்தில் மணிவண்ணன் கேரக்டர் பாசமிகு அப்பாவாக 4 பிள்ளைகளையும் வளர்த்து அவர்களை நல்வழிப்படுத்தி நல்ல வாழ்க்கை அமைத்து தரும் பொறுப்பான தந்தையாக நடித்திருப்பார். பொன்வண்ணன் மற்றும் சீமான் தம்பிகள் மீது பாசம் கொண்ட அண்ணனான சிறப்பாக நடித்திருப்பார்கள். தீபாவின் கணவராக ராஜ் கபூர் மாப்பிளைக்கு உண்டான மிடுக்கில் அசத்தியிருப்பார்.
GM. குமார், ரவி மரியா, நந்தா பெரியசாமி ஆகியோர் முரட்டுத்தனம் கொண்ட நடிப்பும், இறுதியில் திருந்தி கண்ணீர் விடும் காட்சிகள் கல்லுக்குள் ஈரம் உண்டு என்பதை உண்மையாக்குவதை போல நடித்திருப்பார்கள். பாசம் காட்டி அழ வைக்கும் போது சிங்கம் புலியின் வெகுளித்தன நடிப்பும், காமெடியும் ஆனந்த கண்ணீரில் சிரிக்க வைக்கிறது.
இளவரசு மற்றும் மயில்சாமி அவ்வப்போது வந்து காட்சிக்கு ஏற்ப காமெடி, சென்டிமென்ட் என தனது சிறப்பாக நடித்திருந்தனர். “முத்துக்கு முத்தாக” பாடல் அண்ணன், தம்பி பாசத்தை காட்டும் பாடலாக இன்றுவரை இருந்து வருகிறது.
குடும்பத்தில் பெண்கள் எத்தனை சண்டையிட்டாலும் அண்ணன், தம்பி பாசம் கொண்டு குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்ந்து வரும் ஆண்கள் நிலையை அழகாக காட்டியிருப்பார்.
குடும்பத்தில் உறவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு சில காட்சிகளிலும் கண்ணீர் வர வைக்கும் அளவிற்கு காட்டியிருப்பார். படத்தில் நடித்த அனைவரும் படத்திற்கு தேவையானதை சிறப்பாக செய்துள்ளனர். உறவு முறை முக்கியம் என்பதை அழகாக காட்டியிருப்பார்.
மணிவண்ணன்* | மாயாண்டி |
பொன்வண்ணன்* | தவசி |
சீமான்* | விருமாண்டி |
KP. ஜெகன்நாத்* | சீனிச்சாமி |
தருண் கோபி* | பரமன் |
தீபா சங்கர்* | மாயக்கா சோனக்கருப்பு |
GM. குமார்* | விருமாண்டி |
ரவி மரியா* | சொக்கன் |
நந்தா பெரியசாமி* | சின்ன விருமாண்டி |
சிங்கம் புலி* | மாயாண்டி |
ராஜ் கபூர்* | சோனக்கருப்பு |
இளவரசு | |
மயில்சாமி |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]