ப்ரேமலு படத்தில் நாயகனின் நண்பனாக நடித்த சங்கீத் பிரதாப் “ப்ரொமேன்ஸ்” படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மலையாள மொழியில் வெளியாகி தமிழ் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படம் ப்ரேமலு. அதில் நஸ்லன் கே. கஃபூர், மமிதா பைஜூ, ஹீரோவின் நண்பராக நடித்த சங்கீத் பிரதாப்(அமல் டேவிஸ்) என அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர்.

தற்போது அருண் ஜோஷ் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப் ஆகியோர் நடித்து வரும் மலையாள படமான “ப்ரொமேன்ஸ்” படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை அதிகாலையில் கொச்சியின் எம்.ஜி.சாலையில் கார் சேஸிங் காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. ஒரு பைக்கை கார் வேகமாக முந்திச் செல்வது போல காட்சி எடுக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த கார் வேறொரு உணவு டெலிவரி செய்யும் நபரின் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அர்ஜுன் அசோகன், சங்கீத் பிரதாப், மேத்யூ தாமஸ் என 5 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போதே விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் கார் உள்ளிட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி, எந்தவித பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக கூறியும், காரை வேகமாக ஓட்டிய படக்குழுவினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. விபத்தின் காரணமாக படப்பிடிப்பை தள்ளிவைத்துள்ளது படக்குழு.
விபத்து குறித்து சங்கீத் பிரதாப் இன்ஸ்டாவில் பதிவிட்டது.

மருத்துவனையில் இருந்தபடி ஞாயிற்றுக்கிழமை தான் நலமுடன் இருப்பதாகவும், சிறு காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் சங்கீத் பிரதாப் கூறியிருந்தார். சிகிச்சை பெற்று நாளை வீடு திரும்பவுள்ளதாகவும், சிறிது நாட்கள் ஓய்விற்கு பிறகு காயத்திலிருந்து மீண்டு படப்பிடிப்பில் பங்கு கொள்வேன் எனவும் கூறினார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]