படம் என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் சமுத்திரக்கனியின் வாரிசாக உருவெடுத்திருக்கும் ஹிப் ஹாப் ஆதியின் புதிய அவதாரமே ‘PT SIR’.
ஆர்டிஃபிஷியல் இன்ட்டலிஜென்ஸ் காலத்தில் கொஞ்சம் மெனக்கெட்டால் கம்ப்யூட்டரேகூட நல்ல கதை, திரைக்கதை எழுதும். ஆனால், அதற்குகூட மெனக்கெடாமல் ஒரு கதை, திரைக்கதை எழுதி, அதை படமாக எடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில், இசையில், கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் பிடி சார். கார்த்திக் வேணுகோபாலன் பிளாக்ஷீப் ப்ராடக்ட். ஏற்கெனவே இவர் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என்கிற படத்தை இயக்கியிருந்தார்.
இரவில் தனியாக உச்சா போகவே பயப்படும் பயந்தாங்கொள்ளி ஹீரோ எப்படி அநியாயத்தைக்கண்டு வெகுண்டெழுந்து ஒரு பெரிய சமூகப்போராட்டத்தையே முன்னெடுக்கிறான் என்பதுதான் ‘பிடி சார்’ படத்தின் ஒன்லைன்.
ஹீரோ கனகவேலாக ஹிப் ஹாப் ஆதி. டைட்டிலை நியாயப்படுத்த பள்ளி ஒன்றில் பிடி சாராக பணியாற்றுகிறார். பிடி சார் என்றாலே காதல் மலரும்தானே. இங்கிலீஷ் டீச்சர் வானதியாக நடித்திருக்கும் காஷ்மீராவை லவ்வி திருமணம் முடிக்கத் தயாராகிறார் ஆதி. ஜாதகப்படி திருமணம் முடியும் வரை உயிருக்கு ஆபத்து இருப்பதால் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கும் ஆதியை பிரச்சனைக்கு இழுக்கிறது ஒரு பாலியல் சம்பவம். அதுவும் அவர் பணியாற்றும் பள்ளியில் ஒரு பெண்ணுக்கு பாலியல் பிரச்சனை. பள்ளியின் தாளாளரையே எதிர்க்கும் ஆதி அந்தப்பெண்ணுக்கு சரியான நீதியைப் பெற்றுத்தந்தாரா இல்லையா என்பதுதான் கதை.
பாலியல் அத்துமீறலைப் பேசுகிறது என்பதைத்தாண்டி படத்தில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. பாலியல் அத்துமீறலையும், அதற்கான தீர்வையும்கூட முழுமையாகச் சொல்லவில்லை.
ஹிப் ஹாப் ஆதிக்கு இது 25-வது படமாம். இன்னும் நல்லா நடிக்க கத்துக்கலையே பிடி சாரே! அனிகா சுரேந்திரனின் நடிப்பும், இளவரசுவின் நடிப்பும் மட்டுமே படத்தில் கவனிக்கவைக்கிறது. ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்களுமே சுமார் ரகம்தான். நர்சரி பள்ளியில் பாடும் ரைம்ஸ் பாடல்கள் போல இருக்கின்றன. ஆதியின் கவனச்சிதறல் இசையில் தெரிகிறது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் குறைவொன்றும் இல்லை.
சினிமா என்பது காட்சி ஊடகம். காட்சியின் வழியேதான் சொல்லவந்த கருத்தை சொல்லவேண்டும் என்கிற அடிப்படையையே விட்டுவிட்டு எல்லாவற்றையும் பொதுக்கூட்டத்தில் மைக் பிடித்துபேசுவதுபோல வசனம் மூலம் சொல்லி அலுப்படைய வைக்கிறாறார்கள் ஆதியும், இயக்குநரும். வசனம் மூலம்தான் சொல்லப்போகிறோம் என முடிவெடுத்தவர்கள் அந்த வசனத்தையாவது கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாம்.
முக்கியமான பிரச்சனையை மிகவும் மொக்கையான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பதால் ‘பிடி சார்’ ரசிகர்களை சாரி சார் என சொல்லவைக்கிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]