தனுஷ் ஒரு நடிகராக தன்னை மெருகேற்றி ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை கவர்ந்தவர். இயக்குனராக தன்னுடைய 50வது படத்தை துணிச்சலாக இயக்கி, ‘ராயன்’ படத்தில் மிரட்டியுள்ளார். பா. பாண்டி படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக அமைந்துள்ளது ‘Raayan’.

ராயன் கதைக்களம்
சிறு வயதிலேயே அனாதையாக்கபட்ட ராயன் சகோதரர்கள், அவர்களின் தங்கை துர்காவுடன் செல்வராகவனின் உதவியுடன் சென்னைக்கு பிழைக்க வருகிறார்கள். வடசென்னைக்குள் இரண்டு ரவுடி கும்பலுக்குள் நடக்கும் பழிவாங்கல் சண்டைக்குள் அவர்கள் மாட்டிக்கொள்ளும்போது என்னாகும் என்பதே ‘Raayan’.

மூத்த அண்ணன் காத்தவராயன் (தனுஷ்) அவர்களை வளர்க்கிறார். இரண்டாவது அண்ணன் முத்துவேல் ராயன் (சந்தீப் கிஷன்) ஒரு குடிகார கதாப்பாத்திரமாக முதல் பாதியில் தோன்றுகிறார். மூன்றாவது அண்ணன் மாணிக்கவேல் ராயன் (காளிதாஸ் ஜெயராம்) காலேஜில் படிக்கும் பொறுப்பானவர். தங்கை துர்கா (துஷாரா விஜயன்) இந்த மூவருடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார். அங்கு நடக்கும் சூழல் சார்ந்த பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறது இந்த ராயன் குடும்பம்.
ஊரில் தங்கையைக் காப்பதற்காக கத்தியைக் கையில் எடுக்கும் ராயனுக்கு சென்னை வந்தப்பிறகும் தம்பி, தங்கையைக் காக்க கத்தி தேவைப்படுகிறது. காப்பதற்காக கத்தியை எடுக்கும் ராயனின் போராட்டம் கடைசியில் என்ன ஆகிறது என்பதே க்ளைமேக்ஸ்.
ராயன் திரைக்கதை
இயக்குனராக தனுஷின் பலமாக Raayan படத்தில் அமைந்தது படத்தின் திரைக்கதை தான். நம்மால் கணிக்க முடிந்த குடும்ப சென்டிமென்ட் கதையை சுவாரசியமான திரைக்கதையாக எழுதியுள்ளார். Raayan யார், அவனின் பின்னணி என்ன என்பதை பற்றிய காட்சிகளில் படம் தொடங்கி அதை பெரிதுபடுத்தி காட்டாமல் கதை நகர்வது சலிப்பாக அமையவில்லை.
முதல் பாதியில் பெரிய சண்டை காட்சி இல்லாமல், இன்டர்வெலுக்கு முன் அதிரடியான வசனங்களுடன் திரையில் மிரட்டலான சண்டை காட்சியை வைத்தது இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இரண்டாம் பாதியில் பெரிய திருப்பத்தை எழுதிய விதமும், அதை மக்கள் நம்பும் வகையில் காட்சிப்படுத்தியதும் தனுஷின் தெளிவு.
அப்படியே அந்த பெரிய திருப்பத்திறுகு பிறகு திரைக்கதை வேகம் இழந்து, Montage காட்சிகளால் சற்றே சலிப்படைய வைத்தது. இருப்பினும் க்ளைமாக்ஸ் காட்சியில் கதைக்கு பொருத்தமான முடிவை அமைத்து ‘Raayan’ படத்தை வெற்றியடைய வைத்துள்ளார்கள்.
ராயன் கதாப்பாத்திரங்கள்

காத்தவராயன் ‘ராயா’ வாக நடிகர் தனுஷ், பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனுஷ் இந்த படத்தை இயக்கியிருந்தாலும், தனக்கென அதிக வசனங்கள் கொடுக்காமல், கதாபாத்திரத்துக்கு தகுந்த மாதிரி கம்மியான வசனங்களுடன், அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய ரசிகர்களுக்கு ஏற்றவாறு அங்கங்கே மாஸான slow motion காட்சிகளையும் வைத்துள்ளார்.
சண்டை காட்சிகளில் நடிகர் தனுஷ் எப்போதும் போல எளிமையாக ரசிகர்களிடம் கைதட்டல்களை வாங்கிவிடுகிறார். அதிலும் இண்டர்வெல் காட்சியில் விசில் பறக்கும் நுணுக்கமான ஒளிப்பதிவுடன் வரும் சண்டை காட்சிகள் அமைந்துள்ளது.
முத்துவேல் ராயனாக சந்தீப் கிஷன் மற்றும் மாணிக்கவேல் ராயனாக காளிதாஸ் ஜெயராமும் படம் முழுவதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார்கள். சந்தீப் கிஷன் ஒரு குடிகார வாலிபனாக, முதல் பாதியில் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் பாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். சற்றே புரிதலுடன், பொறுப்பான பாத்திரத்தில் வரும் காளிதாஸ் ஜெயராமின் பாத்திரம், இரண்டாம் பாதியில் ஒரு பெரிய மாற்றம் பெற்றது ஏற்கமுடியாததாக இருக்கிறது.
துஷாரா விஜயன் துர்காவாக தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில், கச்சிதமாக பொருந்தியுள்ளார். முதல் பாதியில் அவரின் முக்கியத்துவம் சொல்லப்பட்ட விதமும், இரண்டாம் பாதியில் அதன் தேவை தெரியவருகிறது. நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் துஷாரா விஜயன். அபர்ணா பலமுரளியின் கதாபாத்திரம், சந்தீப் கிஷனின் ஜோடியாக ஒரு பாடலுக்கு மட்டும் வந்து, அதன் பின் மறக்கடிக்கபட்டர்.
எஸ் ஜெ சூரியா சமீத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களை போல, நகைச்சுவை கலந்த ஒரு வில்லனாக, பெரிதும் சண்டை காட்சிகளில் ஈடுபடாமல் பிளான் பண்ணிகொண்டே வில்லத்தனம் செய்யும் வேடத்தில் வருகிறார். தனுஷ் மற்றும் எஸ் ஜெ சூரியா வரும் காட்சியில் இருவரின் நடிப்பும் பரிமாற்றமும் ரசிக்க வைக்கிறது.
செல்வராகவன், சேகரன் என்ற பாத்திரத்தில் இயல்பாக, அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார். இதற்கு முன் இவரை இதே போன்ற ஒரு துணை வேடத்தில் பார்த்த ஒரு உணர்வை தருகிறார். இரண்டாம் பாதியில் இவருக்கு சில முக்கியமான வசனங்கள் அமைந்தும், அவரின் பாத்திரமும் முழுமையில்லாமல் இருக்கிறது. .
பிரகாஷ் ராஜ் காவல் அதிகாரியாக வருகிறார். வடசென்னையில் புதிதாக பதவியேற்கும் அவர், அங்கு இருக்கும் குப்பையை அகற்றுவேன் என்றெல்லாம் பேசி, படத்தில் பெரிதாக பயன்படாமல் இருந்துள்ளார்.
ராயன் படத்தின் பலம்
ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசையில், படத்தின் பல மாஸ் காட்சிகளும், சண்டை காட்சிகள் திகைப்பாக இருக்கிறது. அடங்காத அசுரன் தான் பாடலில் அனைவர் மனதையும் கவர்ந்த ‘உசுரே நீ தானே’ வரிகள் கிளைமாக்ஸ் காட்சியில் கச்சிதமாக பொருந்தியுள்ளது.
திரைக்கதையில் அதிக கவனம் செலுத்திய இயக்குனர் தனுஷ், சண்டை காட்சிகளில் அதிகம் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. தனித்துவமான ஆயுதத்துடன், தனுஷ் சண்டையிடும் காட்சிகள் படத்தை விறுவிறுப்பாக வைத்துள்ளது. பீட்டர் ஹெய்னின் சண்டைப்பயிற்சியும், ஓம் பிரகாஷின் கேமராவும் ‘ராயன்‘ படத்துக்கு பாஸ் மார்க் போடவைக்கிறது.
ராயன் படத்தின் பலவீனம்
கதையில் நிறைய குழப்பங்களும், பதிலில்லாதா திருப்பங்களும் அந்தந்த காட்சி முடியும்போதே நம்மை கேள்விகேட்க வைக்கிறது. ஏன் காளிதாஸ் ஜெயராமின் கதாப்பாத்திரம் ஒரு பெரிய மாற்றம் பெற்றது? செல்வராகவனின் பாத்திரம் திடீரென முடிந்தது ஏன்? என பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் அப்படியே கதை நகர்ந்தது பெரிய பலவீனம்.
வடசென்னையை மையப்படுத்தும் படங்களில் எப்போதுமே ஒரு அழகிய வாழ்வியல் இருக்கும். நகைச்சுவை இருக்கும், நட்பு இருக்கும். ஆனால், ‘ராயன்’ படத்தில் வெறுமனே வன்முறை மட்டுமே இருப்பதுதான் பலவீனம்.

என்னதான் அதிரடியான சண்டை காட்சிகளும், மாஸ் வசனங்களும் இருந்தாலும், இரண்டாம் பாதியில் பழி வாங்கும் கதையை நகர்த்த உணர்ச்சிவசமான கதை தேவை. அப்படி நம்மை உணர்ச்சிகரமாக பார்க்க வைக்க தவறியுளார் தனுஷ். இதுவே 2 மணி நேரத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகிறது.
ராமாயணக் கதையை எடுத்துக்கொண்டு அதில் ராவணனாக தன்னை நிறுத்தி படம் எடுத்திருக்கிறார் தனுஷ். நடிப்பிலும் சரி, தோற்றத்திலும் சரி தனுஷிடம் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், இயக்குநர் தனுஷ்தான் சறுக்கியிருக்கிறார்.
ரத்தபாசத்தால் உருவாது குடும்பமில்லை, வாழ்க்கையில் வரும் இக்கட்டான சூழ்நிலைகளில் நம்முடன் இருப்பவர்கள் தான் குடும்பம் என்ற கருத்துடன் படம் முடிகிறது. நடிகர் தனுஷ் இதுவரை 50 படங்களில் வேல்வேறு இயக்குனர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை ராயன் படத்தில் பொறுப்பாக பயன்படுத்தியுள்ளார். அனால் கதையை திரைக்கதையாக மாற்ற இன்னும் அனுபவம் தேவை என்பது ‘ராயன்’ படத்தின் மூலம் தெளிவாகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]