சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியானது. படத்துக்கு ‘கூலி’ எனப்பெயரிடப்பட்டிருக்கிறது.
1983-ல் வெளியாகி இந்தியா முழுக்க சூப்பர் ஹிட் அடித்த அமிதாப் பச்சன் படத்தின் பெயர்தான் ‘கூலி’. இந்த டைட்டில் ரைட்ஸை வாங்கி 1995-ல் பி.வாசு இயக்கி சரத்குமார் ‘கூலி’ என்கிற டைட்டிலில் தமிழில் நடித்தார். இப்போது மீண்டும் தமிழில் ‘கூலி’ டைட்டில் ரைட்ஸ் வாங்கி ரஜினி படத்துக்கு வைத்திருக்கிறார் லோகேஷ்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினி நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக இருந்தக் கதைதான் இது. 2020-ல் கொரோனாவுக்கு முன்பாக ரஜினி, கமல் இருவரிடமும் கதையைச் சொல்லி ஓகே வாங்கி ஷூட்டிங் போகத் தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் லாக்டவுன் சூழல் உருவாகி ஷூட்டிங் தள்ளிப்போனது. கொரோனா சூழல் மற்றும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தினருடன் ரஜினிக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் ரஜினி இந்தப்படத்தில் இருந்து ஒதுங்கினார்.
ரஜினி விலகியதால் லோகேஷிடம் கமல்ஹாசன் தான் நடிப்பதாகச் சொல்ல, ரஜினிக்கு சொன்ன கதையை கமலுக்கு எடுக்கவிரும்பவில்லை லோகேஷ். கமலுக்காக லோகேஷ் கனகராஜ் உடனடியாக உருவாக்கிய கதைதான் ‘விக்ரம்’. இந்தப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் லோகேஷை விட விரும்பாத ரஜினி தனக்கு சொன்னக் கதையை மீண்டும் இயக்கச்சொல்லி, சன் டிவி கலாநிதி மாறனிடமும் பேச அப்படி உருவானதுதான் ‘கூலி’.
3 நிமிடம் 16 விநாடிகளுக்கு வெளியாகியிருக்கும் ரஜினியின் ‘கூலி’ டீசர் வழக்கம்போல லோகேஷ் கனகராஜுக்கே உரிய ரத்தமும் சதையும் கலந்த ஃபார்மேட்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘விக்ரம்’ பட டீசருக்கு தலைவாழை விருந்தோடு துப்பாக்கியை இணைத்தவர், ‘லியோ’ டீசரில் ‘Bloodysweet’ சாக்லேட்டுகளோடு ரத்தத்தைக் கலந்திருந்தார். இப்போது ரஜினியின் ‘கூலி’க்கு பிளாக் அண்ட் ஒயிட்டில் ரஜினியையும் மற்ற கதாபாத்திரங்களையும் வைத்திருக்கும் லோகேஷ், தங்க கட்டிகள், சிலைகள், வாட்ச்சுகளுக்கு மட்டும் மஞ்சள் வண்ணம் பூசியிருக்கிறார்.
டீசரின் முக்கிய அம்சமாக ரஜினி ஏற்கெனவே நடித்து ஹிட்டான ‘ரங்கா’ படத்தின் “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்… தப்பெண்ண சரியென்ன எப்போதும் விளையாடு… அடப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே… எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே” என்ற வசனம் இடம்பெற்றிருக்கிறது. இதேப்போல் ”சோறுண்டு, சுகமுண்டு, மது உண்டு, மாது உண்டு, மனம் உண்டு என்றாக, சொர்க்கத்தில் இடம் உண்டு… போடா” என்கிற வசனமும் இடம்பிடித்திருக்கிறது. ”முடிச்சிடலாம்மா” என்கிற ரஜினியின் வழக்கமான வசன சிரிப்போடு முடிந்திருக்கிறது டீசர்.
தேனியில் வாழ்ந்த ஒரு அரசியல் தாதாவின் கதையை மையமாகக் கொண்டுதான் ‘கூலி’ படத்தின் கதையை எழுதியிருக்கிறார் லோகேஷ். படத்தில் லோகேஷ் யூனிவர்ஸின் துப்பாக்கிகள், கத்திகளுக்கு ஃபுல் டைம் வேலை உண்டு என்கிறார்கள். ‘கூலி’ திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]