தமிழ் படங்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டு அல்லது அதன் வெற்றியை பிரதிபலிக்க ஹிந்தியில் அந்த படங்களை remake செய்வது வழக்கமான ஒன்றுதான். அப்படி remake ஆன படங்கள் பல வெற்றிகரமாக ஓடினாலும் பல படங்கள் original மொழி படங்கள் அளவிற்கு வெற்றியடைய முடியவில்லை. அப்படியான சில படங்களும் அதன் தோல்விக்கான காரணங்கள் பெரிதாக பேசப்படாமல் உள்ளது.
காக்க காக்க – ஃபோர்ஸ்

நடிகர் சூரியா- கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் காக்க காக்க. ஸ்டைலான போலிஸ் கதையை காதலுடன் கலந்து 2003ல் வெளியான படம். இதில் சூரியா, ஜோதிகாவின் காதல் காட்சிகள் மட்டுமல்லாமல் சண்டை காட்சிகளும் தீவிரமான திரைக்கதையும் இன்றும் ரசிக்கப்படுகிறது. ஹிந்தியில் 2011ல் ஜான் ஆப்ரகாம் மற்றும் ஜெனிலியா நடிக்க ‘ஃபோர்ஸ்’ என்ற பெயரில் வெளியானது. கவுதம் மேனனின் துடிப்பான இயக்கமும் துணை நடிகர்கள் முதல் கதையின் நாயகன் நாயகி வரை அனைவரின் இயல்பான நடிப்பும் ஹிந்தியில் வெளியான படத்தில் பெரிய குறை. கதையின் நாயகன் ஜான் ஆப்ரகாமை விதவிதமாக ஸ்டைலாக காட்டி படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்துவிட்டதும் படத்தின் தோல்விக்கு காரணம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் பின்னர் வெளியாகி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
மௌன குரு – அகீரா

அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் வசூலில் பெரிய லாபம் இல்லை. படத்தில் இளம் கல்லூரி மாணவனின் கோபம், அவன் கண் முன் நடக்கும் அநீதிக்கு அவனின் உணர்வுகளும் ஹிந்தியில் துளியும் தென்படவில்லை. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சொனாக்ஷி சின்ஹாவை வைத்து எடுத்தது புதிய முயற்சியாக இருந்தாலும் கதையில் ஒரு எளிமையும் ஒருவித தவிப்பும் இருப்பதை மறக்கடித்ததாக மட்டுமே ‘அகீரா’ படம் தெரிந்தது. சோனாக்ஷி சின்ஹாவிற் ஸ்டண்ட் காட்சிகள் பாராட்டத்தக்கது, ஆனால் படத்தில் நாயகியின் முன் கோபத்தை மட்டுமே வைத்து நகர்த்தி, அனுராக் கஷ்யப் மாதிரியான எதார்த்த இயக்குனரின் நடிப்பு ஆற்றலையும் ஒழுங்காக பயன்படுத்தாமல் விட்டனர்.
வேட்டை – பாகி 3

நடிகர்கள் ஆர்யா மற்றும் மாதவன் நடிப்பில் 2012 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வசூல் சாதனை ஈட்டிய படம் ‘வேட்டை’. அண்ணன் ஒரு துருவம் தம்பி மற்றொரு துருவம் என நகைச்சுவை கலந்த அக்மார்க் கமர்ஷியல் படமாக வெளியானது. படத்தின் கதைக்கும் ஏற்ற நடிகர்கள், கதையில் சற்றே சோர்வு இருந்தாலும் மறுபடியும் பார்த்து மகிழ கூடிய படம். ஹிந்தியில் 2020ல் ஆக்ஷன் ஹீரோ டைகர் ஷ்ராஃப் வைத்து மாபெரும் பட்ஜெட்டில் எடுத்த remake படம் ‘பாகி 3’. தமிழில் சின்ன டவுனில் நடக்கும் கதையை கோடிக்கணக்கில் செலவிட்டு சிரியா வரைக்கும் படம்பிடித்தும் படம் தோல்வி அடைந்தது. ஆக்ஷன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் அதிரடி காட்டுவார் என்பதால் படம் முழுவதும் கதைக்கு முக்கியத்துவம் இல்லாமல் சண்டை காட்சிகளை மட்டுமே நம்பி படத்தை வெளியிட்டனர். அதுவே படத்தை தியேட்டர் ஆடியன்சுக்கு பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தது.
ஜிகர்தண்டா – பச்சன் பாண்டே

தமிழ் சினிமாவில் எதிர்பார்க்காத கதையில் எதிர்பார்க்காத வெற்றியாக அமைந்த படம் ஜிகர்தண்டா. கார்த்திக் சுப்புராஜின் கல்ட் படமாக கருதப்படும் படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்திருப்பார்கள். ஒவ்வொரு காட்சியிலும் துணை நடிகர்கள் கூட நகைச்சுவை, வசனம், என அனைத்திலும் அசத்தியிருப்பார்கள். ஹிந்தியில் ப்ளாக் பஸ்டர் நாயகனான அக்ஷய் குமார் நடிப்பில் மொத்த பாலிவுட்டிலும் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு இருந்த போது ஹிட் பாதையை தொடங்க எடுத்த முயற்சி தான் ‘பச்சன் பாண்டே’. தோல்வி பாதையை எப்போதும் மாற்றும் அக்ஷய் குமார் இந்த remake படத்தால் அந்த பட்டியலில் சேர்ந்தார். சித்தார்த் நடித்த வேடத்தில் க்ரீத்தி சானோன் நடித்ததும் முக்கிய இரண்டு பாத்திரங்களின் முக்கிய கதைக்களம் மாற்றப்பட்டது முதல் பலவீனம். தேவையில்லாத காதல் கதை, திணிக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகள் என பாபி சிம்ஹா நடித்த க்ளாசிக் பாத்திரமான அசால்ட் சேது ஹிந்தியில் மறைந்துவிட்டார். மற்றொரு பெரிய பாராட்டு, தமிழில் சேதுவின் பாத்திரத்துக்கு மக்களால் கொடுத்த அங்கீகாரம் ஹிந்தியில் படத்தின் தொடக்கத்தில் இருந்து எதிர்ப்பார்க்கப்பட்டது பின்னடைவு.
ஓ கே கண்மணி’ – ஓ கே ஜானு

மணிரத்னம் இயக்கத்தில் புதிய கண்ணோட்டத்தில் அழகான காதல் கதையாக அமைந்தது ‘ஓ கே கண்மணி’. தமிழில் துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் லிவ் இன் ரிலேசன்ஷிப் என்ற சர்ச்சையான கதைக்களத்தை இளம் ரசிகர்கள் ஏற்கும்படி எடுத்துள்ளார். பிரகாஷ் ராஜ் மற்றும் லீலா சாம்சனின் உணர்ச்சிகரமான கதையும் ஹிந்தியில் நசீருதின் ஷா போன்ற திறமை இருந்தும் செல்லுபடியாகாதது படத்துக்கு பலவீனம். 2017ல் ஹிந்தியில் ‘ஓ கே ஜானு’ என ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளிவந்தது. கதையின் நாயகன் நாயகிக்கு இடையே இருந்த கெமிஸ்ட்ரியும் ஏ. ஆர். ரஹ்மானின் ஹிட் பாடல்களால் படம் பெரிதாக பேசப்பட்டது. தமிழில் கிடைத்த வரவேற்பை ஹிந்தி ரசிகர்கள் தரவில்லை.
வீரம்- கிஸ்ஸி கா பாய் கிஸ்ஸி கி ஜான்

தமிழில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2014ல் வெளியான வெற்றி படம் ‘வீரம்’. தன்னுடைய தம்பிகளுடன் தொழில் நடத்தி வரும் நபர், அவரின் காதல், கடந்த கால சவால்கள் பற்றிய கமர்ஷியல் படம். இதை ஹிந்தியில் 2023ல் சல்மான் கான் நடிப்பில் வெளியிட்டனர். மாஸ் ஆடியன்ஸை மனதில் வைத்து கதையை மறந்து எடுத்த remake படம். சல்மான் கானின் வேடம் முதல் படத்தில் புரியாத தேவையில்லாத சண்டை காட்சிகள் வரை, ‘கிஸ்ஸி கா பாய் கிஸ்ஸி கி ஜான்’ ஒரு பெரும் தோல்வியை நோக்கி எடுத்த படமாக தெரிகிறது.
விக்ரம் வேதா

தமிழில் புஷ்கர்- காயத்ரி கூட்டணியில் சற்றும் எதிர்பாராத வெற்றிப்படமாக அமைந்தது ‘விக்ரம் வேதா’. மாதவனின் தேர்ந்த நடிப்பும் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பும் தமிழ் மக்களுக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. வசூல் ரீதியாகவும் வெற்றி படமாக மாறிய படத்தை 2022ல் ஹிந்தியில் எடுத்தனர். சைஃப் அலி கான், மாதவன் வேடத்தில் பொருந்தாமல் இருந்ததும், படத்தின் கதையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் பயம் ஹிட்டாகவில்லை. ஹ்ரித்திக் ரோஷன் தன்னுடைய ஸ்டைலில் வேதா பாத்திரத்தை மாற்றியது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாலும் படத்தை வெற்றியடைய போதுமானதாக இல்லை.

இதுபோல் பல வெற்றி படங்களை ஹிந்தியில் remake செய்து அந்த ரசிகர்களுக்கு என்ன மாற்றம் செய்தாலும் தோல்வியடைந்துள்ளது. ‘கைதி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ போன்ற மாபெரும் வெற்றி படங்களை நினைத்தாலும் இன்னொரு முறை வெற்றியாக்க முடியவில்லை. இதற்கு இன்னொரு பெரிய காரணம் ஏற்கனவே தமிழில் வந்த ஒரிஜினல் படத்துக்கு பெரிய ரசிகர்கள் கிடைத்ததும், தமிழ் படத்தையே டப் செய்தோ, OTT தளங்களில் சப்டைட்டில் உடன் பார்ப்பதும் காரணமாக அமைகிறது. சமீபத்தில் ‘சூரரை போற்று’ படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிக்க ‘சார்ஃபிரா’ என எடுத்து டிரெய்லரை வெளியிட்டனர். சூரரை போற்று படமே இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பு பெற்று ‘உடான்’ என ஹிந்தியில் டப் செய்யப்பட்டது. இதற்கு கிடைத்த வெற்ளியை தற்போது வெளியாகும் remake படம் நிகராக்குவது கேள்விக்குறி தான். என்னதான் கதையில் ஹிந்தி ரசிகர்களுக்காக மாற்றம் செய்தாலும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளும் கதைகளை தான் விரும்புகிறார்கள். பணம் ஈட்டும் எண்ணத்திலும் ஒரு இடத்தில் கிடைத்த பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை மற்றொரு இடத்தில் நீட்சியாக்க முயல்வதும் அவ்வளவு எளிதல்ல, அதற்கு தகுந்த படக்குழு, எழுத்தாளர்கள், நடிகர் நடிகைகள் என பலரின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே எட்டமுடியும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com