இசை என்பதை தனது மூச்சாக கொண்டு 40 வருடத்திற்கும் மேலாக மக்கள் ரசிக்கும் படியான படைப்புகளை தந்து இன்றளவும் அவரது பாடல்கள் மூலம் நம்மை விட்டு மறையாமல் வாழ்ந்து வரும் சகாப்தம் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 40,000 -க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தென்னிந்தியா சினிமாவை தனது மென்மையான குரலால் பல ஆண்டுகளாக மயக்கிவைத்திருந்தார். இவருடன் ஜானகியம்மா பாடிய பாடல்கள் காலம் கடந்தும் ரசிக்க வைத்துக்கொண்டுள்ளது. பாடகராக மட்டுமல்ல நடிகர், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
பிலிம்பேர் விருது, ஆந்திர அரசின் விருது, கர்நாட அரசின் விருது, தென்னிந்திய திரைப்பட விருது, தமிழ்நாடு அரசின் விருது, நந்தி விருது, தேசிய திரைப்பட விருது என கிட்டத்தட்ட 116 விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் இசைத்துறைக்கு இவர் செய்த சேவைக்கு கலைமாமணி, கௌரவ டாக்டர் பட்டம், கர்நாட அரசின் இரண்டாவது உயரிய விருதான “கர்நாடக ராஜ்யோத்சவா” விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் என இந்திய அரசு, மாநில அரசுகள் இவரை பல்வேறு முறையில் கௌரவித்துள்ளது.
இதுவரை தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தமிழ் என 4 மொழிகளில் 6 தேசிய விருதை வாங்கியுள்ளார். முதன் முதலில் 1979-ல் சங்கராபரணம் என்ற தெலுங்கு படத்தில் “ஓம்கார நாதானு” பாடலுக்கும், பின்னர் 1981-ல் ஏக் துஜே கே லேயே என்ற ஹிந்தி படத்தில் “தேரே மேரே பீச் மே” என்ற பாடலுக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது. 1983-ல் சாகர சங்கமம் படத்தில் “வேதம் அனுவனுவுனா” என்ற பாடலுக்கும், 1988-ல் ருத்ர வீணை படத்தில் “செப்பழனி உண்டி” பாடலுக்கும் தெலுங்கு மொழியில் தேசிய விருதை பெற்றார். 1995-ல் கன்னட படமான சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர காவாய் படத்தில் “உமண்டு குமண்டு கன கர் ஜெ பாதர” பாடலுக்கு 5-வது முறையாக தேசிய விருதை பெற்றார்.

இதுவரை மற்ற தென்னிந்த மொழிகளில் தேசிய விருதை பெற்றுவந்த நிலையில் முதன் முதலாக தமிழில் 1997-ல் மின்சார கனவு படத்தில் “தங்க தாமரை மகளே” பாடலுக்கு 6-வது முறை வழங்கப்பட்டது. ராஜீவ் மேனன் இயக்கத்தில் மின்சார கனவு படத்தில் அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல், நாசர், வி.கே. ராமசாமி, எஸ்.பி. பாலசுப்ரமணியம், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். அரவிந்த் சாமி தந்தையாக இந்தப்படத்தில் எஸ்.பி.பி நடித்திருப்பார். ஏ.ஆர். ரகுமான் இசையில், வைரமுத்து வரியில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருப்பார்.
காலத்தால் அழியாத படைப்பாக எஸ்.பி.பி பாடல்கள் இருந்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பாடல்கள் இன்றளவும் மனதை வருடி ரசிக்கும்படியாக இருந்து வருகிறது. இத்தகைய கலைஞருக்கு விருதுகள் தந்து கௌரவிப்பதை விட மக்கள் மனதில் என்றும் அவரது பாடல்கள் நீங்காமல் ஒலித்துக்கொண்டே இருப்பது தான் மிகப்பெரிய கௌரவம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]