தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டில் அறிமுகமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். 2017ல் ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக திரைத்துறையில் நுழைந்தாலும், இரண்டு வருடங்கள் சென்று வெளியான ‘கைதி’ படத்தின் வெற்றிக்கு பின்னர் ஒரு நிலையான இயக்குனராக உருவெடுத்தார் லோகேஷ் கனகராஜ்.
இவரின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அவரின் வெவ்வேறு படங்களில் எதாவது ஒரு பகுதியாக அல்லது இந்த படங்களை இணைக்கும் நூலாக இருக்க, அமெரிக்க படங்களின் பாணியில் இவரின் படங்களை LCU அதாவது Lokesh Cinematic Universe என்று ரசிகர்கள் பெயரிட்டனர். இந்த வரிசையில் ‘கைதி’, ‘விக்ரம்’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ ஆகிய படங்களை தொடர்ந்து வெளியாகவுள்ள படம் தான் ‘Benz’.
சமீபத்தில் ‘Benz’ படத்தில் புது இயக்குனர் ஒருவர் அறிமுகமாக போகிறார் என்ற செய்தி பரவ, நவம்பர் 4ம் தேதி, இந்த செய்தியை உறுதிப்படுத்தியது படக்குழு. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் சாய் அபியங்கார் தன்னுடைய முதல் படத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அறிமுகமாகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
யார் இந்த சாய் அபியங்கார்?
சமீபத்தில் சாய் அபியங்கார் இசையை கேட்காதவர்கள் இருக்க முடியாது என்பதை போல் இவரின் இசையிலும் குரலிலும் வெளியான ‘கட்சி சேர’ மற்றும் ‘ஆசை கூட’ ஆகிய பாடல்கள் இணையதளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களையும் கேட்பவர்களை பெற்று மாதக்கணக்கில் ட்ரெண்டாகி வருகிறது. இதை தொடர்ந்து இவருக்கான பட வாய்ப்பு இவ்வளவு விரைவில் கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது.
‘Benz’ படத்தில் இணைவது பற்றி சமீபத்தில் சாய் அபியங்கார் பேசினார், அதில், “LCU வில் மூன்றாவது இசையமைப்பாளராக நான் சேர்ந்திருப்பதால் மகிழ்ச்சி’ என கூறினார். இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் உடன் பணியாற்றியது புது அனுபவமாக இருக்கும் என்றாலும், தற்போது இருவரும் இசையை தாண்டி வாழ்க்கை சம்பத்தப்பட்ட விஷயங்களையும் பேசும் அளவிற்கு நெருக்கமாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நடிங்கர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் ‘Benz’ படம் LCU கதைகளில் சேரும் என்ற செய்தியை அறிந்து பிரம்மித்ததாகவும் தெரிவித்த சாய் அபியங்கார், 21 வயதில் தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளது ஆச்சரியமூட்டும் பேசுபொருளாக உள்ளது. சாய் அபியங்காரின் பெற்றோர்களும் அனைவருக்கும் பரிட்சயமான பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரின் independent பாடல்கள் ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தாலும், படத்துக்கு இவரின் இசை எப்படி அமையும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே ‘Benz’ படத்துக்காக ஒரு பாடலை அமைந்துள்ளதாகவும், அதற்கு தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் பாராட்டு தெரிவித்ததாகவும் சாய் அபியங்கார் கூறினார்.