Home Cinema News அட்டகத்தி முதல் Kalki 2898 AD வரை- சந்தோஷ் நாராயணன் 50 படங்கள். 

அட்டகத்தி முதல் Kalki 2898 AD வரை- சந்தோஷ் நாராயணன் 50 படங்கள். 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவில் 50 படங்களில் இசையமைத்துள்ளார். அவரின் இசைப் பயணம் பற்றி பார்க்கலாம். 

by Vinodhini Kumar

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை 2012ல் தொடங்கினார். ‘அட்டக்கத்தி’ படத்தில் தொடங்கி தற்போது 2024ல் Kalki 2898 AD படம் வரை 50 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த 12 ஆண்டுகளில் அவர் எப்படி இந்தியாவின் மிகப்பெரிய படத்தில் ஒரு பெரும் பங்காக மாறினார்? அவரின் தனித்துவம் என்ன? 

Music Director Santhosh Narayanan

சந்தோஷ் நாராயணன் பிறந்து வளர்ந்தது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில். பெரும்பான்மையான இளைஞர்களைப் போல் இவரும் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து அதற்கு பின் தன்னுடைய கனவை நோக்கி நகர்ந்தார். தொடக்கத்தில் சவுண்ட் ரெகார்டிங் இஞ்சினியராகவும் புரொகாமராகவும் இருந்தார். பின்னர் independent மியூசிக் அமைத்து சின்ன பட்ஜெட் படங்களில் வேலை செய்தார். 

Attakathi movie poster

தமிழில் 2012ல் பா. ரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் சந்தோஷ் நாராயணன். கானா பாலா அவர்கள் பாடிய ‘ஆடி போனா ஆவணி’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக, மறுபடியும் கானா பாடல்களுக்கான ஆடியன்ஸை உருவாக்கினார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் ‘உயிர் மொழி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ என தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை தந்தார். ‘மோகத்திரை’ பாடலின் ஃப்ரெஷ் மெட்டுக்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருந்தது. 2013ல் வந்த ‘சூது கவ்வும்’ படத்தின் பின்னணி இசைக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.  இதே படத்தில் வந்த ‘காசு பணம்’ பாடலும் ஹிட்டாக இளைஞர்களை கவரும் இசையமைப்பாளராக மாறினார். 

Cuckoo movie poster
Source: IMDb

2014ல் நான்கு பெரிய படங்கள், ‘குக்கூ’, ‘ஜிகர்தண்டா’, ‘மெட்ராஸ்’ மற்றும் ‘எனக்குள் ஒருவன்’. முக்கியமான இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வெற்றிநடை போட வைத்த படங்கள் இவை. ‘மனசுல சூர காத்தே’ பாடலின் தாக்கம் மக்களிடம் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் இருக்கும். அதற்கு முற்றிலும் மாறுபட்ட கேங்ஸ்டர் படமான ‘ஜிகர்தண்டா’வில் கதையின் சுவாரசியத்துக்கு ஏற்ப வெஸ்டர்ன் படங்களின் சாயலில் அதிரடியான ரகளையான பாடல்களை வெளியிட்டு தனக்கென இடத்தை பிடித்தார். ‘மெட்ராஸ்’ படத்தின் அத்தனை பாடல்களும் ஹிட்டாக அவரின் புகழும் கூடியது. 

Kabali movie poster

இப்படியே அவரின் பாடல்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் அவரின் கனவுகளை நிச்சயமாக்கி 2016ல் அவரின் பயணத்தின் மிகப்பெரிய படமாக அமைந்தது. ‘கபாலி’ படத்தின் ஓப்பனிங் காட்சியின் பின்னணி இசை, சூப்பர் ஸ்டார் ரசிகர்களை துளியும் பஞ்சமில்லாமல் கொண்டாட வைத்தது. ‘நெருப்புடா நெருங்குடா’ பாடலின் புகழும் இன்றும் அவராலேயே ஈடு செய்ய முடியாத ஒன்று. 

சந்தோஷ் நாராயணன் உடைய தனித்துவம் 

Santhosh Narayanan

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதை தக்கவைத்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. அதிலும் சந்தோஷ் நாராயணன் புதுமையாக மேற்கத்திய இசையான Jazz, Rock மற்றும் electronic வகைகளை இணைத்து ஒரு கலவையாக தந்தார். இதில் அவரின் இயல்பான நையாண்டி தனமான துள்ளலான இசையும் சேர்த்து ரசிகர்களை கொண்டாட வைத்தது. மற்றொரு தனித்துவம் அவர் தோல் கருவிகளை பயன்படுத்தி லைவ் ரெக்கார்டிங் செய்து பல பாடல்களில் உபயோகித்து உர்ச்சாகமான பாடல்களை வழங்குகிறார். 

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் கருத்தான அல்லது experimental படங்கள் என்று கூறப்படும் படங்களில் மட்டுமே சந்தோஷ் நாராயணன் ஹிட் பாடல்கள் கொடுப்பார் என்பதும் அவரை நோக்கி எழுந்த கருத்து. அதை அவர் மறுக்கவில்லை என்றாலும் கமர்ஷியல் படங்களில் அவரின் பாடல்கள் பெரியளவில் பேசப்படவில்லை என்பதும் உண்மை. இவரின் சமகால இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனை போல இவரும் சகஜமாக பிற இசையமைப்பாளர்களின் படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களுக்கும் பல ரசிகர்கள் உண்டு‌. நக்கலான துடிப்பான பாடல்களை இவர் குரலில் பெரும்பாலும் கேட்டிருப்போம். 

Neeye Oli poster

இசையமைப்பாளராக சினிமாவில் பிசியாக இருந்தாலும் independent இசை துறையில் அவர் இளம் திறமைகளோடு இணைந்து வெளியிட்ட பாடல்கள் அவருக்கு உலகளவில் புகழை தேடித்தருகிறது‌. ‘Enjoy Enjami’ , ‘நீயே ஒளி’ பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் வைரலானது. இதனாலேயே இந்தியாவில் அவரின் பெயர் பரவி தற்போது 2024ன் பெரும் ஆவலுடன் வரப்போகும் Kalki 2898 AD படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க செய்தது. கதையில் வரும் சூழ்நிலையை கேட்டு அதன் உணர்வை இசையாக வெளிபடுத்துவதை சந்தோஷ் நாராயணனின் முத்திரையாகவே பார்க்கலாம். 

ஒவ்வொரு இடத்தின் அடிப்படையான பாரம்பரிய மண்ணின் கருவிகளையும் இசை பாணியையும் எப்படியாவது தன்னுடைய பாடல்களில் சேர்ப்பது இவரின் தனித்துவம். அடுத்ததாக​ நடிகர் சூரியாவின் 44வது படத்துக்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாரயணன். அட்டகத்தி படத்தில் எளிமையாக ஆரம்பித்து, தன்னுடைய 50வது படமான கல்கியில் அதே துடிப்புடன் தொடருகிறார் சந்தோஷ் நாராயணன். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.