சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி என நால்வரும் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழலைக் கண்டு கொதிக்கிறார்கள், குமுறுகிறார்கள். தங்களுடைய கோபங்களை எல்லாம் கேலி, கிண்டல் கலந்து யூ-ட்யூப் வீடியோவாக வெளியிட்டு சமூக அவலங்களைத் துகிலுரிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் என்ன செய்தாலும் அதிகாரமும், அரசாங்கமும் அடக்கத்தான் பார்க்கும் இதற்குத் தீர்வே இல்லையா எனக் குமுறும் கட்டத்தில் ‘’ஐம் வாட்சிங்’’ என என்ட்ரி கொடுக்கிறார் இந்தியன் தாத்தா. ‘’நாட்டை விட்டல்ல, முதலில் வீட்டைவிட்டே ஊழல்வாதிகளை துரத்தவேண்டும்’’ என ஊழலை ஒழிக்க ஐடியா கொடுக்கிறார் இந்தியன் தாத்தா. இந்தியன் தாத்தாவை மீட்பராக, ஆண்டவராகப் பார்க்கும் சித்தார்த் தலைமையிலான டீம் முதலில் தங்கள் வீட்டைவிட்டே குற்றவாளிகளைத் துரத்த எடுக்கும் முயற்சிகளும், அதன் பின் விளைவுகளுமே இந்தியன் 2 படத்தின் கதை!
ஒரு காட்சிக்கும், இன்னொரு காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் நகரும் திரைக்கதைதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். கமல்ஹாசனின் உண்மையான முகத்தைக்கூட காணமுடியாமல், அவரது நடிப்பையும் உணரமுடியாமல் செய்திருக்கிறது மேக்அப். மாறுவேஷப்போட்டி போல கமல் வந்துபோவதும், போலீஸ் அவரைப் பிடிக்கப்போடும் பிளான்களும் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அந்நியன்’ படம் போலக்கூட இல்லை. வசனங்கள் எல்லாம் அதிரப்பழைய வசனங்களாக இருக்கின்றன. எஸ்.ஜே.சூர்யாவை மூன்றாவது பாகத்துக்கு ரிசர்வ் செய்துவைத்துவிட்டு, இதில் இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டும் தலைகாட்டவைத்திருக்கிறார்கள்.
அனிருத்தின் இசை படத்துக்குப் பலம் சேர்க்கவில்லை என்றாலும், சொதப்பவில்லை. ரவிவர்மனின் கேமரா படத்துக்கு தேவையோ இல்லையோ, ஷங்கர் எதிர்பார்க்கும் பிரமாண்டத்தைத் தந்திருக்கிறது. இந்தியன்-2 படம் முடிந்தப்பின் இரண்டு நிமிடங்களுக்கு இந்தியன் 3 படத்தின் ட்ரெய்லரை ஒளிபரப்புகிறார்கள். மொத்தத்தில் அந்த ட்ரெய்லர் மட்டுமே பார்க்கும்படி உள்ளது!

படத்தின் க்ளைமேக்ஸில் கோ பேக் இந்தியன் ட்ரெண்ட் ஆகிறது. அது படம் பார்க்க வந்த பார்வையாளனைச் சொல்வதைப்போலவே இருக்கிறது. ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணி பார்வையாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை பரிசாக அளித்திருக்கிறது!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com