திறமையான பல Heroineகள் அவர்களின் தோற்றத்தை தாண்டி திரையில் தன் திறமையால் ஒரு இடத்தை பிடித்துள்ளனர். இன்றும் Heroineகள் சினிமாவில் ஜொலிக்க முடியுமா?
சினிமா உலகில் பிரபலங்கள் பலர் அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தி அதன்படி தனக்கென்று தனி ரசிகர்களை சம்பாதித்து உள்ளனர். திறமையான பல Heroineகள் அவர்களின் தோற்றத்தை தாண்டி திரையில் தன் திறமையால் ஒரு இடத்தை பிடித்துள்ளனர். இதற்கு அந்த படங்களின் இயக்குனர்களும் காரணம். படத்தின் கதைக்கு தேவையான கச்சிதமான நடிகர்களை தேர்வு செய்வது மட்டுமல்லாமல் அந்த நடிகர்களின் பங்கும் படத்தில் தெரிய அதற்கு ஏற்ப கதாப்பாத்திரத்தை எழுதி இயக்க வேண்டும்.

கதையின் நாயகிக்கு அவரின் ஆற்றலை வெளிப்படுத்த அந்த கதையில் இடம் இருக்க செய்வது கதை ஆசிரியரின் புத்திசாலித்தனம். அதை தெளிவாக இயக்கி திரையில் நாயகனும் நாயகியும் சமமாக நடிக்க செய்வது இயக்குனரின் வேலை. தமிழ் சினிமாவில் பல Heroineகள் சரியான படங்களை தேர்வு செய்து அதில் தன் முழு திறமையும் வெளிப்படுத்தி பிரபலமாகி உள்ளார்கள்.
ஒரு படத்தின் மதிப்பு அதில் உள்ள கதையின் ஆழத்தை வைத்து, நடிகர்களின் ஈடுபாட்டை வைத்தும் கணக்கிடக்கூடிய ரசிகர்கள் இன்றைக்கும் உள்ளார்கள். ஆனால் இன்றைய தமிழ் சினிமா படங்கள் மிக எளிதாக கமர்ஷியல் மையமாக்கபடுகிறது. காதல் படம் என்றால் அதில் Heroine அழகாக ஆடி பாடி கொண்டு இருப்பதும், ஹீரோவை கொஞ்சம் பின்னால் சுத்த விட்டு பின்னர் அவருக்கு ஆதரவாக சண்டை காட்சிகளில் பின்னால் நிற்பதுமாக இன்றும் கதாநாயகி பாத்திரம் எழுதப்படுவது சினிமா பின்னோக்கி பயணிப்பது போல் உள்ளது.

Female oriented அதாவது பெண்ணை மையமாக வைத்து எடுக்கும் படங்களை விட எந்த படத்திலும் Heroine என்பவர் ஒரு அலங்கார பாத்திரமாக, ரசிகர்களுக்கு வலைதளங்களில் பேசு பொருளாக, ஒரு புது crush என்ற எண்ணத்திலேயே காண்பிக்கிறார்கள். படத்தின் மையமாக கதாநாயகியை வைத்தும் கூட ஹீரோ, Heroine இருவருக்கும் சமமான பங்கை நிலைநாட்ட முடியும்.

‘பூவே பூச்சூடவா’- சுந்தரி, ‘மகளிர் மட்டும்’-ஜானகி, ‘சதிலீலாவதி’- லீலாவதி, ‘மௌன ராகம்’- திவ்யா என இந்த கதாப்பாத்திரங்கள் இன்றைக்கும் மனதில் நிற்பத்ற்கு காரணம் அந்த பாத்திரத்தில் ஆழமாக நடிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. நாயகிகளும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை அழகாக கணித்து அதில் தேவையான பாவணைகள், எதர்சையான கோபம், இயக்குனர் எந்த எண்ணத்தில் எழுதியிருப்பாரோ அதை அப்படியே வெளிப்படுத்தி இருப்பார்கள்.

எதார்த்தம் என்பது கவலை, வலி, ஏழ்மையில் மட்டுமே இன்றைய நாயகிகளுக்கு கொடுக்கப்படுகிறது. ‘காக்கா முட்டை’, ‘மகாநடி’, ‘அங்காடி தெரு’ போன்ற படங்களில் அற்புதமாக நடித்திருப்பார்கள் நடிகைகள். கண்டிப்பாக பேசப்பட வேண்டிய கதாப்பாத்திரங்கள் தான் இது அனைத்தும். ஆனால் இந்த பாத்திரங்கள் போன்ற உருக்கமான, கவலையுடன் நடித்தால் தான் இன்றைய நடிகைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால் படத்தில் இரண்டு நாயகன்கள் இருந்தும் ‘வாலி’, ‘காதல் தேசம்’, ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’, ‘தேவர் மகன்’ போன்ற படங்களில் ஹீரோயின்கள் தவிர்க்க முடியாத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

இரண்டு ஹீரோயின்கள் ஒரே படத்தில் நடித்தாலும் அதில் இருவரின் கதாப்பாத்திரம் ஏதோ ஒரு வகையில் நியாயமானதாக தான் இருக்கும். தேவர் மகன் படத்தில் ரேவதி மற்றும் கௌதமி தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடங்களை எந்த இடத்திலும் அளவுக்கு அதிகமாக நடிக்கவில்லை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும், தபு மற்றும் ஜஸ்வர்யா ராய் தங்களின் தனிப்பட்ட பாத்திரங்களில் மின்னி இருப்பார்கள். நினைத்தேன் வந்தாய் படத்தில் தேவையானி-ரம்பா படம் முழுவதும் இணையில்லாத நடிப்பை வெளிப்படுத்தி அவரவரின் கதாப்பாத்திரத்தில் உண்ணதமாக நடித்திருப்பார்கள்.
இன்றைய ஹீரோயின்கள் புதிதாக எந்தவித மாற்றத்தையும் ஏற்காமல் பெரிய ஹீரோக்களின் படத்தில் நடிப்பதையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். தற்போதைய புதுமுக நடிகைகள் ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்கிறார்கள். அதன் பின் OTTன் உதவியால் மற்றொரு மொழியில் இரண்டு மூன்று கமர்ஷியல் படங்களில் நடித்து சினிமாவை விட்டு வலைதளங்களில் ரீல்ஸ் செய்கிறார்கள். எப்படி ஹீரோக்களை stereotype செய்கிறார்களோ அதை போலவே நல்ல படங்களை தேர்வு செய்து அதில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி உள்ளனர். அந்த மாதிரி ஹீரோயின்களுக்கு ஒரே மாதிரியான வேடங்கள் மட்டுமே கிடைக்கிறது.

‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அதை தொடர்ந்து ‘ஃபர்ஹானா’ படத்தில் நடித்தார். சமூக சீர்திருத்த கதைகளை இவர் தேர்ந்தெடுத்து நடிப்பதும், இளம் இயக்குனர்கள் இது போன்ற கதைகளுக்கு ஜஸ்வர்யா ராஜேஷ் கச்சிதமாக இருப்பார் என்றும் stereotype செய்யப்படுகிறாரா? வடசென்னை பற்றிய படங்களில் கூட ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ஹீரோயின்கள் பலரும் இது மாதிரியான குறிப்பிட்ட கதாப்பாத்திரங்களை நடிப்பதும் அவர்களின் ஆற்றலை குறைப்பதாக இருக்கிறது.
இன்னொரு புதிய டிரெண்ட் என்னவென்றால், ஹீரோயினை வைத்து ஒரு பாடலை வைரலாக்கி அதனால் படத்தை பற்றி தெரியவைப்பது. தமிழில் பிற மொழி நாயகிகள் நடிப்பதை பற்றி பல கருத்துக்கள் முரணாக உள்ளது. இருப்பினும் நடிகைகள் ஊர்வசி, அமலா, ராதா, அம்பிகா போன்றவர்கள் பிற மொழி நடிகைகள் என்றாலும் எந்த திரைத்துறையில் படித்தாலும் அதில் அவர்களின் இடத்தை பதிவு செய்து சென்றார்கள்.
இன்றைக்கும் நடிகை ஊர்வசி பல குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கி வருவது அனைவராலும் சாத்தியமில்லை. அவர்களின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த கூடிய கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதே இதற்கு காரணம்.

ஹீரோயின் கதாப்பாத்திரங்கள் சுவாரஸ்யம் இல்லாமல் எழுதப்படுகிறதா? ‘டாக்டர்’, ‘டான்’ போன்ற படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தமிழில் அவருடைய எல்லா கதாப்பாத்திரங்களும் ஆரம்பத்தில் துடிப்பான இளம்பெண்ணாக காட்டப்பட்டு பின்னர் ஹீரோவை காதலித்து அவருக்கு உறுதுணையாக இருப்பது போன்றவை. இப்படி எளிதில் பார்க்கும் ரசிகர்களே கணிக்க கூடிய கதாப்பாத்திரங்கள் பல உண்டு. ஹீரோவின் காதலை ஏற்காத பெண், பின்னர் அவரின் நல்ல குணங்களை பார்த்து காதலில் விழுகிறாள். அதன் பின் ஹீரோ தனது குடும்பத்தை காப்பாற்ற அல்லது வில்லன்களை எதிர்க்கும் போது அவருக்கு துணையாக நிற்பது தான் சமீபத்தில் எல்லா பிரபல ஹிட் படங்களில் ஹீரோயின்களின் கதாப்பாத்திரம்.
இதுபோல் பல காரணங்களால் இன்றைய Heroineகள் வரும் காலத்தில் மறக்கடிக்கப்பட்டு, பத்தோடு பதினொன்றாக இருக்க வாய்ப்பு உண்டு. இன்னும் சற்றே எழுத்தாளர்களும் இயக்குனர்களும் இந்த மாற்றத்தை செய்யலாம். அதே சமயம் ஹீரோயின்களும் கதைகளை தேர்வு செய்யும்போது கவனமாக செய்தால் அவர்களும் நீண்டகாலம் இந்த சினிமா துறையில் பயணிக்கலாம்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]