வாரிசு அரசியல் மாதிரி வாரிசுகள் சினிமாவில் எளிதாக நுழைகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சரியா? ஏன் தமிழ் சினிமாவில் Nepotism பற்றிய சர்ச்சை எதும் இல்லை?
இந்தியாவில் உள்ள பல சினிமா நட்சத்திரங்கள் பெரிய சினிமா குடும்பங்களில் இருந்து தான் வருகிறார்கள். ஆனால் எல்லா பிரபலங்களும் இப்படி இல்லை. இப்படி சினிமா துறையில் இருந்த நடிகர் நடிகைகளின் வாரிசுகள் கதாநாயகர்களாகவும் கதாநாயகிகளாகவும் வருவதை Nepotism என்று சமீப காலமாக அழைக்கிறார்கள். ஆனால் இந்த வார்த்தைக்கான அர்த்தம் எல்லா துறைக்கும் பொருந்தும்.
சினிமாவை பொறுத்தவரை Nepotism பற்றி எப்போது சர்ச்சையான கருத்துக்கள் எழுகிறது என்று பார்த்தால் அப்போது தகுதியற்ற ஒருவருக்கு வாய்ப்பளிக்கபடும் போது அல்லது தகுதியுள்ள மற்றொருவரின் வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படும் போதும் Nepotism தவறானது என்ற பேச்சு வருகிறது. இதற்கு எளிதான எடுத்துக்காட்டாக இன்றைய சினிமா களத்தை பார்க்கலாம்.
பேன் இந்தியா படங்கள் என்றும் இந்தியாவை உலக மேடையில் அலங்கரிக்கும் படங்கள் சினிமாவின் ரசனையையும், பிரிவினையையும் நீக்கியுள்ளது. இந்தியாவில் பாலிவுட் சினிமாவில் Nepotism என்பது பெரும் சிக்கலாக காணப்படுவதும், அதன் பின்னால் இருக்கும் காரணங்கள், ஏன் பிற மொழி திரைத்துறையில் பெரியளவில் இல்லை என்பதும் அதிகளவில் பேசப்படவில்லை.

சமீபத்தில் மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான பிரித்விராஜ் வெளிப்படையாக, சற்றே பெருமையாகவும் தான் ஒரு ‘Nepo Kid’ அதாவது வாரிசு நடிகர் என்பதை ஒரு காணொளியில் பேசியிருப்பார். மலையாள சினிமா தளைத்தோங்கி நிற்கும் போது இந்த பேட்டியில் அவர் கூறியது பரவலாக பேசப்பட்டது. மலையாள சினிமாவில் அவர் கூறியது போல முன்னணி நடிகர்கள் Nepo kids தான் என்றாலும் அவர்கள் இந்த இடத்தை பிடிக்க கடுமையான முயற்சியும், நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தி இந்தியாவில் பெரிதும் பேசப்படாமல் இருந்த மலையாள சினிமாவை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வியக்க வைத்தது அவ்வளவு எளிதல்ல.

உலக சினிமா அரங்கில் இந்திய சினிமா என்றால் ‘பாலிவுட்’ என்று இருந்தது இப்போது எல்லா மொழி சினிமாவும் அதன் தரமான கதைகளுக்கு ஏற்ப அளவிட ஆரம்பித்துள்ளனர். இதில் எப்படி Nepotism ஒரு காரணியாக இருக்கிறது? பாலிவுட் சினிமாவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு – வாரிசு நடிகர்களால் சினிமாவின் தரம் குறைவதும், திறமையான பிற புதுமுகங்கள் வாய்ப்புகள் இல்லாமல் போவதும் தான். இதில் முதல் கூற்றுக்கள் விடையை மற்றுமொரு மலையாள Nepo kid ஒரு பேட்டியில் தந்துவிட்டார். இயக்குனர், பாடகர், எழுத்தாளர் வினீத் ஸ்ரீனிவாசன் ஒரு பேட்டியில் Nepo kids வெற்றி படங்கள் கொடுக்காமல் தொடர்ந்து தோல்விகள் தருவதே இந்த மாதிரியான எதிர்ப்புகளுக்கு காரணம் என கூறினார். ஒரு பக்கம் இதுவும் சரியான கவனிப்பாக இருந்தது.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் பலர் உண்டு. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மகன் நடிகர் பிரபு, இயக்குனர் எஸ். சந்திரசேகரன் மகன் நடிகர் விஜய், நடிகர் சிவக்குமாரின் மகன்கள் நடிகர் சூரியா, நடிகர் கார்த்தி என பலர் உண்டு. இவர்களை இந்த நெப்போட்டிஸம் அலை தாக்கவில்லை என்பது தவறு. நடிகர்கள் சூரியா, விஜய் நடிக்க வந்தபோது இவர்களும் அவர்களுடைய நடிப்பிற்காக கேளிக்கைக்கு ஆளானவர்கள் தான். இப்போது தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கோடிக்கணக்கில் வசூலுடன் தருபவர்கள் இவர்கள் தான். அவர்கள் மேல் வைக்கப்பட்ட எதிர்ப்புகளை ஏற்றுக்கொண்டு கடும் உழைப்பால் இன்று பிரபல நடிகர்களாக மாறியுள்ளனர்.

தெலுங்கு சினிமாவிலும் திரை குடும்பங்கள் தான் பெரும்பாலான சினிமா தொழிலை செய்து வருகின்றனர். அவர்களின் ஏதோ ஒரு தனித்தன்மையை திரையில் காட்டி பிளாக்பஸ்டர் படங்களை தந்துள்ளார்கள். கன்னட சினிமாவிலும் இப்படியான சூழ்நிலை தான். வாரிசு நடிகர்களும் தங்களின் படங்களை வெற்றிகரமாக நடித்து, தனக்கென சுயமாக வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

பாலிவுட்டில் பிரபல சினிமா குடும்பங்கள் பெரும்பாலும் தங்களின் பிள்ளைகளை அதிக பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் நடிக்க வைத்து, மூன்று, நான்கு படங்களுக்கு ஒப்பந்தங்கள் போட்டு, கதையை இல்லாத படங்களில் நடிக்கிறார்கள். அவர்களை சுற்றி எப்போதும் ஒருவித விசையை சமூக வலைதளங்கள் வழியாக ஏற்படுத்தி அதை வைத்து அவர்களின் படங்களை வெற்றிகரமாக ஓடவைக்க முயல்வது பயனலிப்பதாக இல்லை. பல திறமையான நடிகர்கள் எவ்வித பிரபல பின்னனி இல்லாமல் ஒரு வாய்ப்புக்காக வருடங்களாக காத்திருக்கும் போது, Nepotism என்ற பெயரில் தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் கிடைப்பதும் ரசிகர்களின் பெருமையை சோதிப்பதாக உள்ளது. தோல்விகளுக்கு பின் திறமையை வளர்த்துக் கொள்ளாமல் தனது அந்தஸ்தை வைத்து பலரின் வாய்ப்புகளை படிப்பதும் இந்த சர்ச்சைக்கு காரணம்.

இந்தி சினிமாவிலும் நல்ல திறமையான வாரிசு நடிகர்கள் Nepotism என்ற பழியை மீறி தனக்கென இடத்தை பிடித்துள்ளனர். இவர்களின் இடத்தை பற்றி ரசிகர்கள் எதிர்பதில்லை, முரண்படவில்லை. தொடக்கத்தில் எதிர்ப்புகளை சந்தித்தாலும் வரும் நாட்களில் இவர்களின் உழைப்பால் மக்களின் எண்ணத்தை மாற்றியவர்களும் உண்டு.
இறுதியாக Nepotism என்பது சினிமாவில் மட்டுமல்ல அரசியல், விளையாட்டு, வணிகம் என எல்லா தரப்பிலும் உண்டு. சினிமா என்பது பெரும்பாலான மக்களை ஈர்ப்பதால் இதை பெரிதாக பேசுகிறது சமூகம். எல்லா தரப்பிலும் வாரிசுகள் தங்களின் திறமையால் மட்டுமே நிலைத்து நிற்க்க முடியும் என்பதும் அனைவரும் ஒத்துக்கொள்ளும் கருத்தாகும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]