பொன்னியின் செல்வன் படங்களுக்கு முன்பே தமிழில் புத்தகங்கள் படமாக்கப்பட்டது.
படத்திற்கு கதை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நாடகங்கள், புத்தகங்கள், வரலாற்று நூல்கள் என பல உண்டு. அதில் புத்தகங்கள் படித்து அதில் வரும் கதாப்பாத்திரங்கள், ஒரு சிறு கதை, பிற மொழி தத்துவம் என பல விஷயங்கள் இயக்குனரை, கதை ஆசிரியரை ஈர்க்கும். அப்படி தமிழ் சினிமாவில் புத்தகங்கள் வழியே எடுக்கப்பட்ட படங்களின் சிறு பட்டியல்.
விடுதலை- 2023

வெற்றிமாறன் பல ஆண்டுகளாக ரசிகர்கள் சம்பந்தப்படுத்தி கொள்ளும் படங்கள் எடுத்துள்ளார். அவரின் சமீபத்திய படமான விடுதலை, எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலின் கதை. இந்த கதையை இரண்டு பாகங்களாக இயக்கி வெளியிட திட்டமிட்டு முதல் பாகத்தை வெளியிட்டார். படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானி நடிப்பிற்கு பாராட்டும் கிடைத்தது.
அசுரன்- 2019

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய மற்றுமொரு படம் அசுரன். எழுத்தாளர் பூமணி எழுதிய புதினம் ‘வெக்கை’ கதையை படமாக்கினார் வெற்றிமாறன். ஒரு மனிதனின் உணர்வுகளை பல சம்பவங்கள் எப்படி மாற்றுகிறது என்றும் ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை அவனை எப்படி மாற்றுகிறது என்றும் பேசும் கதை. தனுஷுக்கு இந்தியா முழுவதும் கிடைத்த பாராட்டு தகுதியானது தான்.
சூரரை போற்று- 2020

ஏ. ஆர். கேபிநாத்தின் சுய சரிதையை இயக்குனர் சுதா கோங்கரா படமாக்கி, பல இளைஞர்களை கவர்ந்தார். ‘சிம்ப்ளி ஃப்லை: ஏ டெக்கான் ஓடிசி’ என்ற புத்தகத்தின் கதையை திகைக்க வைக்கும் திரைக்கதையாக மாற்றி வெற்றி படமாக தந்துள்ளார் இயக்குனர் சுதா கோங்கரா. சூரியா மற்றும் அபர்ணா பாலமுரளி தங்களின் கதாப்பாத்திரங்களை மிக எதார்த்தமாக நடித்திருப்பார்கள்.
நான் கடவுள்- 2009

இயக்குனர் பாலாவின் படங்கள் பேசும் தத்துவமும் வெளிப்படையும் வெகு சிலரால் மட்டுமே செய்யமுடியும். நான் கடவுள் படத்தை பற்றியும் அந்த படத்தில் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்களும் அவர்களின் உழைப்பும் சினிமாவின் மறக்கமுடியாத பங்கு. இந்த கதையும் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ புத்தகத்தில் இருந்து தழுவிய படம் தான். படத்தில் ஆர்யா, பூஜா மற்றும் மற்ற அனைத்து துணை நடிகர்களும் அதன் சாராம்சத்தை திரையில் தெளிவாக காட்டியிருப்பார்கள்.
பரதேசி- 2013

நடிகர் அதர்வாவிற்கு மட்டுமின்றி இயக்குனர் பாலாவின் படங்களில் மிக முக்கியமான படம். படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் கண்டனமும், கடுமையான முயற்சி என்றும் பேச்சுக்கு ஆளானார் இயக்குனர் பாலா. ஆனால் படத்தில் பேசப்படும் கதாப்பாத்திரங்கள் நிஜத்தில் இதை விடவும் கொடூரங்களை சந்தித்து இருப்பது புத்தகத்தை படிக்கும் போது தெரிகிறது. ‘ரெட் டீ’ என்ற ஆங்கில புத்தகத்தை ஹாரிஸ் டானியல் எழுதியிருப்பார். இதன் கதையை பரதேசி படத்தின் கதை. தேயிலை தோட்டத்தில் நடக்கும் வன்கொடுமைகளை கண் எதிரே காட்டிய படம்.
கண்ணத்தில் முத்தமிட்டாள்- 2002

மணிரத்னம் இயக்கத்தில் போரின் கொடுமைகள் பற்றியும் பிரிவின் ஏக்கம் பற்றியும் அரசியல் கலந்த கதை. மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், கீர்த்தனா, பிரகாஷ் ராஜ் நடித்து சினிமா ரசிகர்களால் விட்டு கொடுக்க முடியாத படம். இந்த படம் எழுத்தாளர் சுஜாதாவின் படைப்பான ‘அமுதாவும் அவனும்’ என்ற கதையின் பிரதிபலிப்பு. மனதை உருக்கும் கதை, அதின் ஆழம் வரை சென்று பார்ப்பவர்களின் உணர்ச்சிகளை தூண்டும் திரைக்கதை மற்றும் நடிகர்கள் என ஒரு முழுமையான படம்.
இயற்கை – 2003

ரஷ்யன் புதின எழுத்தாளர் ஃப்யோதர் டோஸ்டாவ்ஸ்கி எழுதிய மிக முக்கியமான கதை ‘வைட் நைட்ஸ்’. வாசிப்பாளர் யாராக இருந்தாலும் டோஸ்டாவ்ஸ்கியின் எழுத்தின் தாக்கத்தை விட்டு விலக முடியாது. மனதை உருக்கும் உண்ணதமான படைப்புகள் அவருடையது. இயற்கை படத்தின் கதையும் அப்படி தான். பழம் விற்கும் பெண்ணை காதலிக்கும் மாலுமி, அவளை காத்திருக்க சொல்லி செல்லும் மற்றொரு கப்பலின் காப்டன். நடிகர் ஷ்யாம், அருண் விஜய், நான்சி நடிப்பில் வந்த படம் உணர்வுகளை சோதிக்கும்.
முள்ளும் மலரும்- 1978

எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய கதையை நடிகர்கள் ரஜினிகாந்த், சரத் பாபு, நடிகைகள் ஷோபா, ஜெயலட்சுமி நடிக்க வெளியான வெற்றி படம். அண்ணன் தங்கை பாசம், வாழ்க்கையின் இயல்பான ஏற்றம் இறக்கம் பற்றிய படம். நடிகர் ரஜினிகாந்த்தின் திரை பயணத்தின் முக்கியமான கதாப்பாத்திரம் இந்த படத்தின் காலி. எளிமையான கதைகளாக இருந்தாலும் அதை வர்ணித்த விதமும் காட்சிப்படுத்திய விதமும் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் – 2000

இரண்டு சகோதரிகளின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். முன்னணி நடிகர்கள் பலர் நடிப்பில் வெற்றி கண்ட படம் ஒரு ஆங்கில புதினத்தின் தழுவல். பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜேன் ஆஸ்டன் எழுதிய ‘சென்ஸ் அண்ட் சென்ஸிபிலிட்டி’ உடைய கதையை இந்திய ரசிகர்களின் புரிதலுக்கு மாற்றி அழகாக எடுத்திருப்பார் இயக்குனர் ராஜிவ் மேனன். திரைக்கதை எந்த இடத்திலும் சலிக்காமல் இரண்டு துறுவங்களாக இருக்கும் சகோதரிகள், அவர்களின் குடும்பம், கனவை சுற்றி நகர்த்தியிருப்பார்.
சில நேரங்களில் சில மனிதர்கள் – 1977

எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ் மக்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய படைப்புகள் பலவற்றை தந்துள்ளார். அதில் ஒன்று சில நேரங்களில் சில மனிதர்கள். இந்த புத்தகத்துக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. படமாக்கப்பட்டு நடிகை லட்சுமி கதாநாயகியாக நடித்திருப்பார். படத்திற்க்கும் தேசிய விருது கிடைத்தது. ஏழ்மையான பிராமண குடும்பத்தில் பிறக்கும் பெண் அவளின் வாழ்க்கையில் கற்பு, பொருப்பு, வேலை என பலவற்றை கற்று இந்த சமூகத்தில் இருக்கும் தீமைகளை எப்படி சமாலிக்கிறாள் என்பது கதை. பெண்கள் தங்களின் வாழ்நாளில் இந்த படத்துடன் ஏதாவது ஒரு காட்சியையாவது ஒப்பிட்டுக்கொள்ள முடியும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]