காதல் மாறாதது, ஆனால் காதலின் விதம் பல உண்டு. இதில் ஒன்று தான் முக்கோண காதல்.
காதல் ஒரு உலகறிந்த மொழி. அதுக்கு கோட்பாடு இல்லை பிரிவினை இல்லை. இந்த காதலை பரிமாணத்தில் நமக்கு படம் போட்டு காட்டியுள்ளார்கள் நமது தமிழ் சினிமா இயக்குனர்கள். அதிலும் குறிப்பாக ஒரே கதையை பல விதங்களில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம். அது தான் முக்கோண காதல். இருவர் ஒருவரை காதலிப்பது, மூன்று பேரும் தெரியாமலேயே காதலிப்பது, நண்பர்கள் காதலில் விழுவது என மூன்று நபர்கள் காதலில் விழுவதை வைத்து அந்த கதையை தூசி தட்டி ஆண்டாண்டாக இயக்கி வருகிறார்கள். சமீபத்தில் கூட இந்த முக்கோண காதல் கதை படமாக்கப்பட்டது, ஆனால் நினைத்ததை போன்ற வரவேற்பு கிடைக்கவில்லை.
தமிழ் சினிமாவில் இந்த முக்கோண காதல் கதைகள் பல இருந்தாலும், அந்த பெரிய வரிசையில் சில நல்ல படங்களும், சில சொதப்பல் படங்களும் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.
சர்வர் சுந்தரம்
1964ல் வெளிவந்த சர்வர் சுந்தரம் படம், நகைச்சுவை, காதல், நட்பு என அத்தனையும் அழகாக பேசிய படம். நகைச்சுவை நடிகர் என்று மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகர் என கொண்டாடப்படும் நாகேஷ் அவர்களின் பிரகாசமான நடிப்பில் வந்த படத்தில் இவர் ஒரு பணக்கார பெண்ணை காதலிப்பார். இதற்காக அவர் போராடி பெரிய நடிகராக மாறி அவளை மணக்க நினைப்பார். ஆனால் அந்த பெண்ணும் நடிகர் நாகேஷின் உயிர் நண்பனும் காதலிப்பார்கள். இந்த படத்தின் கதையை போல இன்னும் பல கதைகளை தமிழ் சினிமாவில் பார்த்திருப்போம்.

முத்து
1995ல் வந்த சூப்பர் ஹிட் படம் முத்து. இதில் புது கதைக்களத்தில் ஏழை நாடக நடிகையை விரும்பும் ஊரின் ஜமீன், நாடக நடிகை மீனாவும் ஜமீனின் குதிரை வண்டி ஓட்டுநர் ரஜினிக்கும் காதல். படத்தின் பெரும் பகுதி இது இல்லை என்றாலும் படத்தில் பெரிய மாற்றம் இதனால் தெரியவரும். முக்கோண காதல் கதையின் ஒரு அம்சமாக வந்தாலும் அதை உபயோகித்து விதம் புதியது.

மின்சார கனவு
1997ல் வெளியான மின்சார கனவு படத்தின் மொத்த கதையும் முக்கோண காதல் தான் என்றாலும், கதையின் பாத்திரங்கள், நடிகர்கள், அதில் வரும் மாற்றங்கள் கதையை சுவாரஸ்யமாக வைத்திருக்கும். பணக்கார வீட்டு பையன் இன்னொரு பணக்கார வீட்டு பெண்ணை விரும்ப, அதை அவளுக்கு புரிய வைக்க ஒரு ஏழ்மையான வாலிபனை உதவ சொல்வான். கடைசியில் எல்லாரும் கணித்தது போல அந்த ஏழை வாலிபருடன் காதலில் விழுவாள் ஹீரோயின். முக்கோண காதலாக இருந்தாலும் இந்த படத்தில் உள்ள பொழிவு, காட்சிகள், கதை சொல்லும் விதம் என மற்ற காரணிகள் சேர்ந்து இந்த படத்தை இன்றும் க்ளாசிக் ஆக வைத்துள்ளது.

வாலி
1999ல் நடிகர் அஜித் இரு வேடங்களில் நடித்த படம் வாலி. இந்த முக்கோண காதலை வேறொரு பார்வையில் காட்டிய படம். தம்பியின் மனைவியை காதலிக்கும் அண்ணன். இரண்டு வேடங்களையும் மிக நுணுக்கமாக நடித்திருப்பார். படத்தில் சிம்ரன் மற்றும் அஜித் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். முதல் முறையாக ஒரு முக்கோண காதல் கதையில் வில்லனை என காட்டி மக்களை வெறுக்க வைத்த படம்.

படையப்பா
1999ல் வந்த மற்றொரு படம், பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டான படம். முக்கோண காதலில் இரண்டு பெண்கள் -ஒரு ஆண் என்று எடுக்கப்பட்ட கதை. நீலாம்பரி என்ற கதாப்பாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு, படத்தின் முழுமையும் மூவரின் காதல் பேசப்பட்டு இருக்கும் படம், படையப்பா.

மின்னலே மற்றும் ஷாஜகான்
2001ல் வந்த இரண்டு படங்கள், இரண்டிலும் முக்கோண காதல் பலிச்சென தெரியும் கதை. ஆனால் இரண்டுமே ஹிட். மாதவன், ரீமா சென், அப்பாஸ் நடித்த மின்னலே மற்றும் விஜய், ரிச்சா பல்லோட், கிருஷ்ணா நடித்த ஷாஜகான். இரண்டு படங்களிலும் ஹீரோ ஹீரோயினை பார்த்ததும் காதலில் விழுவார்கள். இரண்டு படத்தின் வித்தியாசம் ஒன்றில் ஹீரோ நாயகியை கரம்பிடிப்பார், விஜய் காதல் தோல்வியை சந்திப்பார். இரண்டு படங்களும் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காதலை நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிதாக கூறியது முதல் படம். காதலின் வலியை மிக எதார்த்தமாக கூறியது இரண்டாவது படம்.

இதுவரை பார்த்த படங்கள் முக்கோண காதல் கதையை தெளிவாக பயன்படுத்தி ரசிகர்களுக்கு ஒரு நல்ல படத்தை தந்தது. பல படங்களில் கதையின் மையமாக இந்த கருத்தை வைத்திருந்தால் வெற்றிகரமாக ஓடி இருக்கும்.
காத்துவாக்குல இரண்டு காதல்
சமீபத்தில் வந்த காத்துவாக்குல இரண்டு காதல் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முன்னனி நடிகர்கள் நடித்து படமாக்கப்பட்டது, ஆனால் படத்தில் முக்கோண காதல் என்பதை மிக முற்ப்போக்காக, கமர்ஷியல் படமாக எடுக்கப்பட்டது. ஹீரோ இரு பெண்களை காதலிப்பது தெரிந்தும் இரு பெண்களும் விட்டுக்கொடுக்காமல் நகைச்சுவைக்காக எடுத்திருப்பார். இதுவே படத்தின் பெரிய பின்னடைவாக அமைந்தது.

இஞ்சி இடுப்பழகி
இதே போல சில ஆண்டுகளுக்கு முன் வந்த இஞ்சி இடுப்பழகி படமும் முக்கோண காதல் கதையாக பயணிக்கும். அனுஷ்கா உடல் எடை அதிகம் உள்ள பெண்ணாக நடித்திருப்பார். உடல் எடை அதிகமாக உள்ளதால் கல்யாணமாகமல் இருக்கும் பெண்ணாக நடித்திருப்பார். ஹீரோ அவளுக்கு எடையை குறைக்க உதவுவார் ஆனால் ஹீரோயினுக்கு அவர் மேல் பிரியம் ஏற்படும். அவளின் எடையை காரணமாக்கி அவளை ஒரு தோழியாக பார்ப்பது போல எடுத்திருப்பார் இயக்குனர். இந்த உடல் எடை பற்றிய படங்கள் அவசியம் தான், அதில் காதல் என்பதை நேர்மறையாக காட்டியிருக்க வேண்டும், அதற்கு மாறாக இன்னொரு பெண்ணுடன் ஒப்பிட்டு காட்டியது தான் படத்தின் வீழ்ச்சி.

மின்சார கண்ணா படத்திலும் ரம்பாவின் காதல் கடைசி வரையில் படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சேர் ஒரு காரணமாகவே அமைந்துவிடும். படத்தின் முக்கிய கதையில் இருந்து மாறாமல் முக்கோண காதலை ஒரு பாகமாக மட்டுமே பயன்படுத்தி இருப்பார்கள்.
ரெமோ மற்றும் குட்டி
இன்னொரு பரிமாணமானம் நிச்சயமான பெண், அவளின் வாழ்க்கையில் வரும் ஹீரோ. அவளின் வாழ்க்கையில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி அவளை காதலை உணர வைக்கும் கதைகள். சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வந்த ரெமோ. படத்தில் ஹீரோ என்ற அடையாளம் இருக்கும் ஒரே காரணத்தால் பெண் வேடமிட்டு நிச்சயமான ஹீரோயினை காதலில் விழ வைப்பது நிஜத்தில் நடக்க சாத்தியம் இல்லை என்பதை தாண்டி அதில் உண்மைதண்மை எவ்வளவு என்ற கேள்வி எழுகிறது. இதே போன்ற கதை தான் தனுஷ், ஷ்ரேயா நடித்த குட்டி படத்திலும். ஏற்கனவே காதலில் இருக்கும் பெண்ணை அவள் காதலிப்பது தெரிந்தும் அவளுக்கு தன்னுடைய “காதலை” உணர வைக்கும் ஹீரோ. இதில் அந்த பெண்ணின் சுய சிந்தனை, முக்கோண காதலில் அவள் படும் கஷ்டங்கள் என பல கேள்விகள் விடை இல்லாமல் போகிறது.

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]