21ஆம் நூற்றாண்டில் காதல் பல வகையில் கொண்டாடப்படுகிறது. Lover படம் அதின் அதிர்ச்சியான எதார்த்தத்தை பேசுகிறதா? ஆணாதிக்கம் பேசுகிறதா?
Lover(2024)

Lover படம் வெளியானதும் அனைவரையும் போல் ஆவலாக, ஒரு நல்ல காதல் படத்தை பார்க்க சென்றோம். படத்தின் தொடக்கத்தில் மற்ற காதல் படங்களை போலவே ஒரு அழகிய காதல் கதை. எல்லா காதல் கதையும் போல கல்லூரயில் சந்தித்து காதலில் விழும் ஜோடி. இந்த கட்டம் வரை கிளாசிக் காதல் கதையை ரசிகர்களிடம் காட்டி, பின்னர் இன்றைய காதலும் அதில் நடக்கும் சங்கடங்கள், பிரச்சனைகள், மனக்கசப்புகள், ஈகோ என அனைத்து காரணங்களையும் தத்ரூபமாக வெளிச்சம் போஓட்டு காட்டி உள்ளார் இயக்குனர் பிரபு ராம் வியாஸ். மாடர்ன் காதல் இது தான் என்று எல்லா காதல் கதையும் இந்த கட்டத்துக்குள் அடக்கிட முடியாது. ஆனால் பெரும்பாலான மாடர்ன் காதல் இன்றைய காலத்தில் சண்டையில் முறிந்து ஒன்று சேராமல் முடிவதற்கு இந்த படத்தில் கூறிய காரணங்கள் பல ஒத்துப்போவது ஆச்சரியமான மாற்றமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய முழுவதும் சினிமா சமூகத்தை மாற்றக்கூடிய திறன் கொண்டது. ஹீரோ worship என்ற வார்த்தை தெரியாமல் இருக்கலாம் அனால் அந்த கலாச்சாரம் பிரபலமாக நடைமுறையில் இருப்பது இங்கு தான்.
ஆனால் ஒரு படத்தின் ஹீரோவை கொண்டாடி அவரின் குணங்களை ரசிகர்கள் பின்பற்றுவது சினிமா வந்த காலத்திலிருந்தே உள்ளது. கதையின் நாயகன் எப்போது ஒரு மாஸ் ஹீரோவாக, ஆக்ஷன் நாயகனாக சித்தரிக்கப்பட்டதோ, அப்படியே அதன் நீட்சியாக ‘ஹீரொ’வின் குணாதிசயங்கள் மாற ஆரம்பித்தது. இது காதல் கதையிலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. தன் காதலை ஏற்காத ஹீரோயின், அவளை துரத்தி காதலில் விழ வைக்கும் ஹீரோ என்ற கதைகள் எத்தனையோ முறை திரையில் பார்த்திருப்போம்.
Mouna Ragam(1986)

90களில் ஒரு தலை காதல், அதில் இருக்கும் வலி, ஏக்கம் என மக்களும் படத்தோடு ஒன்றி இருந்தனர். ‘மௌன ராகம்’, ‘மூன்றாம் பிரை’ போன்ற படங்களின் முடிவில் காதலின்அனைத்து உணர்வுகளையும் திரையில் நிரப்பி, ரசிகர்களை மனதார அந்த பாத்திரங்களுடன் இணைத்தனர். இந்த படங்களில் நாயகனாக திகழ்ந்தது கதை தான். இதில் காட்டப்பட்ட காதல் அந்த காலத்தின் பிரதிபலிப்பு. 2000த்திற்கு பின் வந்த படங்கள் காதலை துடிப்பான, இலேசான பார்வையில் பேசியது. இந்த காலத்தில் காதல் தோல்வி, ஆணின் காதல் பெண்ணின் காதல் என பிரித்து அதில் எது பெரியது என போட்டி களமாக மாறியது சினிமா. 2000தின் தொடக்கத்தில் காதல் ஒரு உருக்கமான பொக்கிஷமாக காட்டப்பட்டது. ‘அலைபாயுதே’, ‘ரிதம்’, ‘மின்னலே’ போன்ற படங்கள் இன்றைக்கும் காதலுக்கு சான்றாக, அந்த காலக்கட்டத்தில் காதலர்கள் என்னென்ன சிக்கல்கள் சந்தித்தார்கள் என்பதை பேசியது.
OK Kanmani(2015)

பின்னர் ‘காதல்’ என்பதை பல பரிமாணங்களில் இயக்குனர்கள் சினிமாவில் படமாக்கினர். நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் இருந்து காதல் என்பதின் எடுத்துக்காட்டு மாற தொடங்கியது. ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘ஓ காதல் கண்மணி’, ‘ராஜா ராணி’, ‘காற்று வெளியிடை’ ஆகிய படங்கள் மாடர்ன் காதலை அதில் உள்ள பிரச்சினைகளுடன் பேசியது. இளவயதில் வரும் காதலில் உள்ள அறியாமை, காதல் இருந்தும் அதை அடைய தடையாக இருக்கும் மற்ற பிரச்சினைகள், இருவரின் தனிப்பட்ட கனவுகளை சோதிக்கும் காதல் என புதிய பின்னனியில் பேசப்பட்டது.
Arjun Reddy(2017)

இந்த வரிசையில் கடந்த சில ஆண்டுகளில் காதலில் ஆண் பெண் என இருவரின் தனிப்பட்ட விருப்பங்கள், அவர்களின் பிடிவாதம், இந்த காதலில் யார் பெரியவர், யாருடைய காதல் புனிதமானது என பல முறையில் காதல் முறிவுகள் ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் Patriarchal thinking என்றும் Male Chauvinist என்றும் குறிப்பிடுவர். அதாவது ஆண் ஆதிக்க சிந்தனை கொண்ட காதல் கதைகள் சமீபத்தில் வந்தது. தெலுங்கில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் ‘அர்ஜுன் ரெட்டி’. தமிழ் மற்றும் ஹிந்தியில் பின்னர் படமாக்கப்பட்ட போது தான் அந்த படத்தில் சித்தரிக்கப்பட்ட மாடர்ன் காதல் எவ்வளவு ஆணாதிக்க சிந்தனையாக உள்ளது என பலரும் உணர்ந்தனர். அந்த படத்தில் வரும் காதல் படம் வெளியான போது நடைமுறையில் நடப்பதாக பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் நடைமுறையில் நடக்கவே இல்லை என நம்ப முடியாது. 2024ல் வெளியான ‘Animal’ மற்றும் ‘Lover’ படங்கள் பெரிய எதிர்பார்ப்பை சந்தித்தது. அதிலும் ‘Animal’ படத்தில் ஆண் என்றால் ஆதிக்கத்தை கையில் எடுத்து காதலில் கூட ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தியது சமூகத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழில் வெளியான ‘Lover’ படமும் இன்றைய இளைஞர்கள் காதலில் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் பற்றி பேசி, இருவரில் யாரோ ஒருவரின் கை ஓங்கி இருக்கும் எண்ணத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் மணிகண்டன் தன்னுடைய தத்ரூபமாக நடிப்பில் இன்றைய காதலை அப்படியே வெளிப்படுத்தினார். இந்த படத்தின் தனித்துவம் என்னவென்றால் இதை போல் கண்டிப்பாக நம் வாழ்க்கையிலோ, நம்மை சுற்றி நடந்திருப்பதை பார்த்திருப்போம். அதில் சினிமாவில் ட்ராமா இல்லாமல் உள்ளதை உள்ளபடியே காட்டியது தான். இதே போல எடுக்கப்பட்ட படங்களில் இந்த ஆண் ஆதிக்கம் அந்த பெண்ணை பாதிப்பது காட்டப்பட்டது ஆனால் அதை இருவரும் கடந்து, உணர்ந்து முன்னேறுவது போல காட்டப்படவில்லை. ‘Lover’ படத்தில் படத்தின் முடிவு வரையில் மணிகண்டனின் கதாப்பாத்திரம் எதையும் உணராமல் இருப்பது போலவே இருக்கும். மற்றொரு எதிர்மறையான பாத்திரம் ஒன்றை வைத்து அவனுக்கான புரிதலை மிக எளிமையாக சொல்லிவிடுவார். இந்த டாக்சிக் காதலை பார்க்கவா தியேட்டருக்கு வந்தோம் என்ற கேள்விக்கு பதில் இன்றைய காதல் இந்த தன்மையில் தான் இயங்குகிறது. மாடர்ன் காதல் ஒவ்வொரு பத்து ஆண்டுகளில் மாற்றம் பெற்று வருவது போல் இந்த படத்தில் காட்டியது இன்றைய டாக்சிக் காதல். அதோடு கிடைக்கும் போனஸ், இந்த சிக்கலில் இருந்து விடுபடும் விடையும் வெளிப்படையாக கூறப்பட்டது தான்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]