விஜய் 1974-ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி இயக்குநர் எஸ் சந்திரசேகர், ஷோபா ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்தார். இவரது அப்பா இயக்குனர் மற்றும் அம்மா பின்னணிப்பாடகி என்பதால் விஜய்க்கு பிறப்பிலேயே சினிமா இரத்தம் ஊறியிருந்தது. விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தது. அவருக்கு 2 வயது இருக்கும் போது தங்கை இறந்து விட்டார். சுட்டித்தனமாக இருந்த விஜய் அதற்க்குப்பிறகு அமைதியாக மாறி விட்டார்.

பள்ளி படிப்பை முடித்த விஜய் கல்லூரி படிப்பை சினிமா ஆர்வம் காரணமாக முடிக்க முடியாமல் போனது. 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக தந்தையின் படத்தில் அறிமுகமாகினார். பின்னர் தந்தையின் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வந்த விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து தனது அப்பா இயக்கத்தில் நடித்து வந்த விஜய், இயக்குனர் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்தார். இதுவரை விஜய் அஜித் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இது. விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. தனது முதல் படத்தில் விஜயகாந்த் உடன் நடித்தார். பின்னர் சிவாஜி கணேசன் உடன் ஒன்ஸ் மோர் படத்தில் நடித்துள்ளார். அதற்க்கு பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கொரு இடத்தை பிடித்து தற்போது தமிழ் சினிமாவின் “தளபதி” என்ற தவிர்க்க முடியாத ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். விஜய் நடிப்பில் மட்டுமல்ல தனது பெரும்பாலான படங்களில் பாடல்கள் பாடியும் அசத்தியுள்ளார். அந்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியும் உள்ளது. தனது நடன திறமை மூலம் இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார்.
விஜய் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் ஆவார். ரஜினிகாந்தின் நடிப்பை பார்த்து தான் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டதாக கூறியிருந்தார். கதாநாயகனாக அறிமுகமான ஒரு சில வருடங்களில் கலைமாமணி விருதை பெற்றார்.
நடிக்க தொடங்கிய ஆரம்ப காலத்தில் இந்த முகத்தை வைத்துக்கொண்டு எப்படி ஹீரோ ஆவது என்று கிண்டலுக்குள்ளான விஜய், அடுத்த 25 ஆண்டுகள் கழித்து அதே முகத்தை வைத்து லட்சக்கணக்கான ரசிகர்களை சம்பாரித்தது மாபெரும் சாதனை தான். பல முன்னணி நடிகர்கள் படம் அவ்வப்போது ஒரு சில ஆண்டுகள் இடைவெளியில் வெளியாகும். ஆனால் விஜய் 1992-க்கு பிறகு கிட்டத்தட்ட வருடத்திற்கு ஒரு படம் என 32 வருடங்களாக தொடர்ந்து நடித்து வந்துள்ளார். விஜய் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டுகளாக 1995,1996, 1997 இருந்தது. அந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட வருடத்திற்கு 4,5 படம் என 14 படங்களில் நடித்திருந்தார். அனைத்து படங்களும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருந்தது.
காதல், ஆக்க்ஷன் என வெற்றிப்படங்களை கொடுத்து வந்த விஜய் 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு குஷி, பிரியமானவளே, பிரண்ட்ஸ், பத்ரி என தொடர்ந்து பிளாக் பாஸ்டர் படங்களை தந்து மிரட்டினார். 2004-ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையை உச்சத்திற்கு கொண்டு சென்றது. “ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி டா” என்ற வசனமும், “ப்ளேடு மேல வச்ச நம்பிக்கையை உன் மேல வை” என்ற வசனமும் பட்டையை கிளப்பியது. அமைதியான,ஜாலியாக நடித்து வந்த விஜய் திருமலை படத்திற்கு பிறகு ஆக்க்ஷன் ஹீரோவாக கொண்டாடப்பட்டார்.
அதன் பின்னர் 2007-ஆம் ஆண்டு வந்த போக்கிரி படம் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசப்படும் அளவில் மெகா ஹிட்டானது. “இளைய தளபதி” என்று ரசிகர்களால் கூறப்பட்டு வந்த நிலையில் அட்லீ இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான மெர்சல் படத்திலிருந்து “தளபதி விஜய்” என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் நாட்டில் எந்த அளவு ரசிகர் பட்டாளம் உள்ளதோ அதே அளவு கேரளாவிலும் ரசிகர்கள் கொண்ட ஒரே நடிகர் விஜய் மட்டும் தான்.
2008-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை விஜய் நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மனம் தளராமல் 2012-ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தின் மூலம் தன்னை மீண்டும் நிரூபித்தார் விஜய். 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியாக விஜய்க்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. “பாக்ஸ் ஆபீஸ் கிங்” என்ற அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தார்.
விஜய் விருது, ஜீ சினி விருது, பிலிம்பேர் விருது, தமிழக அரசின் விருது, அனந்த விகடன் சினிமா விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார். 2023-ஆம் ஆண்டு ஜப்பான் அரசால் ஒசாகா நகரில் நடைபெற்ற விழாவில் மெர்சல் படத்திற்காக சிறந்த நடிகருக்காக விருதை பெற்றார். மேலும் எம் ஜி ஆர் கல்வி நிறுவனம் விஜய்க்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
நாளைய தீர்ப்பு, கோயம்பத்தூர் மாப்பிள்ளை, பூவே உனக்காக, மாண்புமிகு மாணவன், லவ் டுடே, ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், துள்ளாத மனமும் துள்ளும், மின்சார கண்ணா, குஷி, பிரியமானவளே, பிரண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான், தமிழன், யூத், திருமலை,கில்லி, திருப்பாச்சி, சச்சின், போக்கிரி, நண்பன், துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், லியோ என 30-க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தந்துள்ளார். இந்திய சினிமாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த்திற்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்து வருகிறார்.
நடிப்பில் மட்டுமல்ல போது சேவை செய்வதிலும் கில்லி என்பதை நிரூபித்து வந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் என்ற சமூக சேவை இயக்கத்தை தொடங்கினார். தனது ரசிகர்களை நிர்வாகிகளாக மாற்றி தொடர்ந்து பல சமூக சேவைகளை செய்து வந்தார். புயல், மழை வெள்ளம் ஏற்படும் போது தனது இயக்கத்தின் மூலம் பல உதவிகளை செய்து வந்தார். ஏழை மாணவர்களுக்கு உயர் படிப்பிற்கு உதவி வந்தார். 10 மற்றும் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு ஊக்க தொகை அளித்து வந்தார்.
தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இது இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]