ஒரு படத்திற்கு கதையின் நாயகன் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அந்த கதையின் வில்லனும் நம்பக்கூடிய நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். தமிழில் பிரபல வில்லன்கள் பலர் இருந்தாலும் ஓரிரண்டு படங்களில் நடித்து பெரிதும் பாராட்டப்படாத வில்லன் நடிகர்களின் பட்டியல்.
ராகுல் போஸ் – விஸ்வரூபம்

கமல் ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த படம் ‘விஸ்வரூபம்’. 2013ல் கமல் ஹாசன், ஷேகர் கபூர், ராகுல் போஸ், ஆண்ட்ரியா ஜெரமயா, பூஜா குமார், ஜெய்தீப் அஹல்வத் நடித்திருந்த படம் பல இன்னல்களுக்கு இடையில் வெளியாகி வெற்றியடைந்தது. இந்த படத்தில் இவர் தான் வில்லன் என்று எளிதில் சொல்ல முடியாதவாறு திரைக்கதை அமைந்திருக்கும். இருப்பினும் ஓமர் குரேஷி என்ற தீவிரவாத தலைவனாக நடித்திருப்பார் ராகுல் போஸ். வித்தியாசமான பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பார். ராகுல் போஸ் ஒரு நடிகராக, ‘விஸ்வரூபம்’ படத்தில் மட்டுமல்லாமல் அவரின் அனைத்து படங்களிலும் தனித்து தெரிகிறார். பெரும்பாலும் ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களில் நடிக்கும் இவர் தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாத வில்லன்.
சென்றாயன் – ரௌத்திரம்

நடிகர் சென்றாயன் தன்னுடைய முதல் படமான ‘பொல்லாதவன்’ படத்திலேயே, திரையில் தோன்றிய குறைவான காட்சிகளில் பலரின் கவனத்தை ஈர்த்தார். அவரின் கடுமையான பார்வையும் வில்லத்தனமான உடல் மொழியும் திரையில் பார்க்க எதார்த்தமாக தெரிகிறது. 2011ல் வெளியான ‘ரௌத்திரம்’ படத்திலும் இவரின் கதாப்பாத்திரம் கச்சிதமாக இருந்தாலும் படத்தின் தோல்வியால் இவரின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை.
ஜான் விஜய் – மௌன குரு

பல ஆண்டுகளாக தனித்துவமான துணை கதாப்பாத்திரங்கள் ஐ ஏற்று நடித்து வருபவர் நடிகர் ஜான் விஜய். சமீபத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் Daddy என்ற வேடத்தில் அவரின் கலக்கலான நடிப்பால் பேசப்பட்டார். நகைச்சுவை பாத்திரங்களில் இவரை பல படங்களில் பார்த்திருந்தாலும், 2011ல் சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மௌனகுரு’ படத்தில் இரக்கமற்ற போலிஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இந்த படத்தின் இவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவரின் நடிப்பு பார்ப்பவர்களுக்கு தத்ரூபமாக அமைந்திருக்கும்.
ஜான் கொக்கன் – சார்பட்டா பரம்பரை

ஒரு ஃபேஷன் மாடலாக தொடங்கி பின்னர் படிப்படியாக படங்களில் நடிக்க வந்து சமீபத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த ‘துணிவு’ படத்தின் வில்லனாக நடித்தவர் ஜான் கொக்கன். சினிமாவில் நுழைந்தபோதே வில்லன் கதாப்பாத்தினங்களை தேர்ந்தெடுத்து நடித்த இவர், கன்னடத்தில் K.G.F படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் பா. ரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலி பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கும் ஆர்யாவிற்கும் நடுவில் உள்ள சண்டை காட்சிகளில் அசத்தலான நடிப்பால் அடுத்ததாக ‘துணிவு’ படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இளங்கோ குமாரவேல் – குரங்கு பொம்மை

பல படங்களில் இவரை துணை வேடங்களில் பார்த்திருந்தாலும், அவர் தொடர்ந்து பணியாற்றிய இயக்குனர் ராதா மோகன் இயக்கிய ‘அபியும் நானும்’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் இளங்கோ குமாரவேல். இந்த படத்தில் எவ்வளவு பாவமான எளிமையான பாத்திரத்தில் நடித்திருந்தாலும் 2017ல் நிதின் சாமிநாதன் இயக்கிய முதல் படமான ‘குரங்கு பொம்மை’ படத்தில் மிரளவைக்கும் வில்லனாக நடித்திருப்பார். திறமையான நடிகர் என்பதை அவரின் பன்முகத்தன்மை மூலமாக பல படங்களில் நடித்து நிரூபித்துள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]