தமிழ் நாட்டில் இயல்பான குடும்பத்தில் பிறந்து, பல இளைஞர்களை போல் வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றவர் தான் Vijay Sethupathi. மூன்று ஆண்டுகள் துபாயில் அக்கவுண்டன்டாக பணியாற்றிய விஜய் சேதுபதி, பெரிதாக எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தவர். ஒரு நாள் வேலை முடிந்து நடந்து செல்லும்போது தொலைக்காட்சியில் பிரபல ஆங்கில காமெடி பாத்திரங்களான லாரல்- ஹார்டி உடைய நடிப்பை பார்த்து வியந்து நின்றவர் அதில் வரும் பாத்திரத்துடன் தன்னை ஒப்பிட்டு ‘தான் ஒரு நடிகன்’ என்று தீர்க்கமாக நம்பி தினமும் அதை மனதார எண்ணினாராம்.

Vijay Sethupathi ஒரு நடிகராக மாற தொடக்கத்தில் கஷ்டப்பட்டு வாய்ப்புகளை தேடினாராம். பொதுவாகவே தத்துவ வாதியான விஜய் சேதுபதி, பிற நடிகர்களுடன் தன்னை ஒப்பிடாமல் சினிமாவின் பல துறைகள் பற்றி கற்றுக்கொண்டு மெருகேற்றி கொண்டார். அவருக்கு எப்படிப்பட்ட பாத்திரங்கள் ஒத்துப்போகும் என்று மட்டும் சிந்திக்காமல் அவரால் எளிதில் நடிக்க முடியாத பாத்திரங்கள் பற்றியும் அறிந்து கொண்டு அதற்கு தகுந்த படங்களுடன் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார்.

தொடக்கத்தில் விஜய் சேதுபதியை சிறு சிறு வேடங்களில் பார்த்திருப்போம். ‘M. குமரன் S/O மகாலட்சுமி’, ‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘சுந்தரப்பாண்டியன்’ போன்ற படங்களில் சில நொடிகள் நடித்த விஜய் சேதுபதி, அந்த படங்களில் கிடைத்த அனுபலத்தை பொறுப்பாக பயன்படுத்தி பின்னாளில் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படி அறிமுகமானது தான் கார்த்திக் சுப்பராஜ்– விஜய் சேதுபதி கூட்டணி. 2011ல் ‘பீட்சா’ படம் நல்ல வரவேற்பு பெற்றது, Vijay Sethupathi என்ற நடிகரை வெளிக்காட்டிய படமும் அதுவே.

2010ல் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் அறிமுக நாயகனாக இருந்தாலும், ‘பீட்சா’ படத்தால் தியேட்டர் ஆடியன்ஸ் பக்கம் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தின் கதை, நடிப்பு என வித்தியாசமாக இருந்தாலும் விஜய் சேதுபதியின் தோற்றத்தை வைத்து படத்தை வெளியிட வேண்டாம் என்றும் பேச்சு கிளம்பியது. ஆனால் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜின் குறும்படங்களில் நடித்ததால் விஜய் சேதுபதி மீது நம்பிக்கை வைத்து படத்தை வெளியிட்டார். படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி தேர்ந்தெடுத்த கதாப்பாத்திரங்கள் அவரின் வித்தியாசமான தொடக்கத்துக்கு உதவியது.

‘நடுவுள கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘இதற்கு தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா’, ‘பண்ணையாறும் பத்மினியும்’ போன்ற படங்களில் தனித்துவமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து, ஹீரோவாக மட்டுமல்லாமல் எப்படிப்பட்ட பாத்திரமானாலும் அதில் அவருக்கு திருப்தி இருந்த கதைகளில் நடித்தது நல்ல முடிவாக அமைந்தது.
விஜய் சேதுபதி, துணை பாத்திரங்களில் நடிப்பது இன்றும் தொடர்ந்து வருகிறது. ‘மாஸ்டர்’, ‘பேட்ட’, ‘விக்ரம் வேதா’, ‘விக்ரம்’, ‘ஓ மை கடவுளே’, ‘விடுதலை’ ஆகிய படங்களில் அவரின் கதாப்பாத்திரம் முக்கியமானதாக அமைந்ததை தாண்டி இந்த பாத்திரங்களை இவரை போல் நடிப்பது கடினம் என்று கூறும் அளவுக்கு நடித்துள்ளார். முன்னணி நாயகனாக மாறிய பின்னும் இது போல துணை பாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதிலும் தன்னுடைய மார்க்கெட்டை விடாமல் நடிக்கும் ஒரே நடிகர் Vijay Sethupathi தான்.

அவரின் படங்களில் முழுமையாக ஈடுபட்டு நடிப்பவர் Vijay Sethupathi என்பது ‘விக்ரம் வேதா’ படத்தில், ஒரு காட்சியில் அவருக்கு அவ்வளவு திருப்தி இல்லை என்பதால் அதில் வசனம் ஒன்றை சேர்க்க எண்ணி படப்பிடிப்பு முடிந்து வாரங்களுக்கு பின் வேறொரு வசனத்தை இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரியிடம் கூறி மாற்றியுள்ளார். இது போல அவரின் படங்களின் வசனங்களை மெருகேற்ற அயராது உழைக்கிறார்.
“தப்பே செஞ்சாலும் தண்டணை என்ற ஒரு தர்மம் இருக்குல்ல”
Vikram Vedha (2017)

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் போராடி தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்களில் புதுமையும் எதாவது ஒரு சிந்தனையையும் கூற சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக ஒப்பில்லாத கதாப்பாத்திரத்தை, சிலிர்க்க வைக்கும் உண்மை தன்மையுடன் வெளிக்காட்டியது எத்தனை முன்னணி ‘ஹுரோ’க்களால் முடியும் என்பது இங்கு கேள்விக்குறி. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து அதனை திரையில் வெளிப்படையாக நகர்த்தி சினிமா பிரியர்களுக்கு மறக்கமுடியாத கதாப்பாத்திரத்தை தந்து சிறந்த துணை நடிகருக்கான தகுதியான தேசிய விருதை வென்றார் நடிகர் Vijay Sethupathi.

‘கடைசி விவசாயி’ என்ற படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஆழமான அர்த்தம் உள்ளதாக இருக்கும். அதிலும் நடிகர் விஜய் சேதுபதி, ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்திற்கு மதிப்பு சேர்க்கும் வகையில் இதுவரை பார்க்காத ஒரு கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக நடித்திருப்பார். விஜய் சேதுபதியின் துணிச்சலான கதாப்பாத்திர தேர்விற்கு இதுவே நல்ல சாட்சி. படத்தில் துணை பாத்திரமாக இருந்தாலும் திரையில் அவரின் நடிப்பு நிஜவாழ்க்கையின் பிம்பமாக இருப்பதும் அவரின் தனித்துவம்.
சினிமா பின்னணி இல்லாமல் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் இந்த மாதிரியான தைரியமான பாத்திரங்களை ஏற்பதில்லை. விஜய் சேதுபதி பல நேர்காணலில் இதை பற்றி அதிகம் பேசியுள்ளார். தனக்கு எளிதில் ஒத்துப் போகும் பாத்திரங்களும், தன்னிடம் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் கதைகளை எப்படியாவது நடித்து தீரும் எண்ணத்தில் தான் இயங்குகிறார் விஜய் சேதுபதி.
’96’ படத்தில் விக்ரம் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் உணர்ச்சிகரமாக நடித்திருப்பார். தற்போது பாலிவுட் இயக்குனர்களுடன் இணையும் விஜய் சேதுபதி, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ , ‘ஃபர்ஸி’ என மற்றொரு இன்னிங்ஸை தொடங்கினார். சில தமிழ் படங்களுக்கு பின்னணி குரலும் தந்துள்ளார்.

துபாயில் சாதாரண இளைஞரை போல ஒரு வேலையில் இருந்து இப்போது தன்னுடைய 50வது படமான ‘மகாராஜா’வை அதே ஊரில் விளம்பரப்படுத்தி வருகிறார். உழைப்பால் உயர்வது மட்டுமின்றி அந்த உயரத்தை தக்கவைத்துக் கொள்ளும் தந்திரமும் விஜய் சேதுபதியிடம் உள்ளது. சமீபத்தில் அவரின் படங்கள் பெரியளவில் ஓடவில்லை என்றாலும் இதில் இருந்து மீண்டு வர ‘மகாராஜா’ படம் உதவுமா என பொருத்திருந்து பார்ப்போம்!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]