
Vijayakanth என்ற மனிதரை பற்றி பேசும் அனைவரும் அவரின் நல்ல மனதை பாராட்டி பேசி பார்த்துள்ளோம். நடிகராக மட்டுமில்லாமல் ஒரு நல்ல மனிதராகவும் தமிழ் மக்களால் இன்றும் நீங்கா இடம் பெற்றவர் Vijayakanth. நடக்கும் ஆசையுடன் திரைத்துறையில் நுழைந்த இளம் Vijayakanth, தொடக்கத்தில் தன்னுடைய நிறத்தால் வாய்ப்புகளை இழந்தார். பலரும் அவரின் தோற்றத்தை பார்த்து வாய்ப்பு தராமல் போனதும், மனம் தளராமல் தன்னுடைய கனவை நோக்கி நகர்ந்தார்.

மதுரையில் பிறந்த சாமானிய இளைஞன் அழகர்சாமி விஜயராஜ், தன்னுடைய விடாமுயற்சியாலும், அர்ப்பணிப்பாலும் தமிழ் சினிமாவே கொண்டாடும் கேப்டனாக மாற்றியது அனைவராலும் சாதிக்க முடியாது. அதிலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் சினிமாவில் பெரும்பான்மையான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருந்தபோது எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் அவர்களுக்கு நிகராக வெற்றி படங்களை தந்தவர்.
சினிமாவில் நுழைந்து கிடைத்த நிராகரிப்பை தட்டிவிட்டு 1979ல் தன்னுடைய முதல் படமான ‘இனிக்கும் இளமை’ படத்தில் Vijayakanth என்று தன்னை புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். தன் முதல் நான்கு படங்கள் படுதோல்வி அடைந்தாலும், 1980ல் ‘தூறத்து இடி முழக்கம்’ படத்தின் வழியாக திறமையான நடிகனாக நிலைநாட்டினார்.

முற்போக்கு சிந்தனை கொண்ட படங்களை ஆரம்பத்தில் இருந்தே தேர்ந்தெடுத்து நடித்து, ‘சிவப்பு மல்லி’, ‘ஜாதிக்கொரு நீதி’ படங்களில் புரட்சிகரமான தோற்றத்தில் நடித்தார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக கமர்ஷியல் வெற்றியை ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் வழியாக தந்தார். இயக்குனர் S.A. சந்திரசேகர் உடன் பல வெற்றி கூட்டணி அமைத்தார் கேப்டன் விஜயகாந்த்.
‘வைதேகி காத்திருந்தாள்’, ‘ஊமை விழிகள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘டௌரி கல்யாணம்’, ‘நூறாவது நாள்’ படங்களில் ஆழமான நடிப்பையும் பதிவிட்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான கதாநாயகனாக உருவெடுத்தார்.

தமிழ் சினிமாவின் நேர்மையான போலீஸ் என்றால் அது நடிகர் விஜயகாந்தின் கதாப்பாத்திரம் தான். 20 முறைக்கு மேல் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஊழல்களை எதிர்த்தும், தேச பக்தி, நேர்மையான தோற்றங்களில் நடிகர் விஜயகாந்தை பலமுறை பார்த்திருப்போம்.
‘உழவன் மகன்’ படத்தில் முதல் முறையாக இப்ராஹிம் ராவுத்தர் உடன் பணியாற்றினார். இந்த பந்தம் நெடுங்காலம் தொடர்ந்து பல ப்ளாக் பஸ்டர் படங்களாக மாறியது. ‘கூலிக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S. தானு, விஜயகாந்துக்கு ‘புரட்சி கலைஞர்’ என்று பட்டம் வழங்கினார்.
வசூல் சாதனை படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் பல சின்ன பட்ஜெட் படங்களில் தன்னுடைய சம்பளத்தை குறைத்தும், உடன் பணியாற்றுபவர்களின் சம உரிமை, படப்பிடிப்பில் அனைவருக்கும் சீரான உணவு, என அனைத்தையும் தன் கடமையாக எடுத்து செய்தவர். இதனாலேயே கருப்பு MGR என்றும் அழைக்கப்பட்டார்.

தன்னுடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் உடன் இணைந்து நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் ஒரு கண்ணியமான IFS அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். இதில் இருந்து ‘கேப்டன்’ என்ற அடைமொழி அவரின் பெயருடன் பிரபலமாக அழைக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் தன்னுடைய நூறாவது படத்தை ப்ளாக் பஸ்டராக மாற்றிய சில முன்னணி நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். ‘கேப்டன் பிரபாகரன்’ படம் 500 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் கோலாச்சியதும் அப்போது இருந்த முன்னணி நடிகர்களால் கூட எட்டமுடியாத சாதனை.
கிராமத்து கதாப்பாத்திரங்களை மனதார உள்வாங்கி இந்த படங்களுக்கென தனி ரசிகர்களை சேர்ந்தவர். ‘சின்ன கவுண்டர்’ படம் கேப்டன் விஜயகாந்தின் திரைப் பயணத்தில் பிரபலமாக பேசப்படும் படம். 2000த்திற்கு பின்னரும் ‘வானத்தை போல’, ‘வல்லரசு’, ‘நரசிம்மா’, ‘தவசி’ என தொடர் வெற்றிகளை தந்து தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இயக்குனர் A.R. முருகதாஸ் உடன் ‘ரமணா’ படத்தில் ஊழலை எதிர்க்கும் கதாநாயகனாக நடித்து, ‘சிறந்த படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது’ பெற்றார்.

கேப்டன் விஜயகாந்தின் திரை ஆளுமையின் நீட்சி, சிக்கலில் இருந்து நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று, நடிகர்களை திரட்டி வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்றது. கஷ்டப்படும் துணை நடிகர்களுக்கும், மூத்த நடிகர்களுக்கும் உதவிக்கரம் நீட்டினார், இதையே அரசியலில் தொடரவும் செய்தார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி பல தரப்பட்ட மக்களுக்கு எவ்வித நன்கொடையும் பெறாமல் தன்னுடைய சொந்த செலவில் உதவிகள் செய்தவர். ஒரு தேர்தலில் நல்ல வரவேற்பு கிடைத்து எதிர்கட்சித் தலைவராக இருந்தவர். உடல்நலக் குறைவால் படங்களில் நடிப்பதும், தேர்தல் களத்தில் இருந்தும் விலகி இருந்தார். அவரின் கடைசி நாட்கள் வரையிலும் தமிழ் மக்களின் நலனுக்காக பல தொண்டுகள் செய்தவர். அவரின் காலம் முடிந்த பின்னும் பாமர மக்கள் முதல் திரைப்பட பிரபலங்கள் வரை அவரின் நல்ல குணத்தால் வென்று காலத்துக்கும் நல்ல பெயர் ஈட்டிச் சென்றது மிகச்சிலரே, அதில் கேப்டன் விஜயகாந்தும் ஒருவர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]