கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் ‘Indian-2’ படத்தின் இசைவெளியீட்டு விழா ஜூன் 1-ம் தேதி இரவு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்சினிமாவைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
ஆனால், விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த முக்கியமான நான்கு பேர் வரவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தநிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. பின்னர் அவர் இந்தியா தலைவர்கள் கூட்டணி சந்திப்புக்காக டெல்லி செல்வதால் வர இயலாது என தகவல் சொல்லப்பட்டது. பின்னர் ஸ்டாலினின் டெல்லி விசிட்டும் கேன்சல் ஆனது. இருந்தும் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதேப்போல் ரஜினிகாந்த் ‘Indian-2’ இசைவெளியீட்டுவிழாவில் கலந்துகொள்ள ஒப்புதல் தந்திருந்தார். அவரும் கடைசி நேரத்தில் ‘’இமயமலைக்குச் செல்கிறேன்’’ என்று ஆப்செண்ட் ஆனார். ஆனால், இவர்கள் இருவரும் ‘Indian-2’ படத்துக்கு வெளியே இருப்பவர்கள். படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த் இசைவெளியீட்டு விழாவுக்கு வரவில்லை என்பதால் கமல், ஷங்கர் என எல்லோருமே அப்செட். காதலியும் வருங்கால மனைவியுமான அதிதி ராவ் ஹைதாரியுடன் ஐரோப்பாவில் டூரில் இருக்கிறாராம் சித்தார்த். அதேப்போல் இயக்குநர் மணிரத்னமும் தக்லைஃப் ஷூட்டிங்கில் இருந்ததால் விழாவில் கலந்துகொள்ளவில்லை.

முக்கியமான இந்த நான்கு பேர் வரவில்லை என்றாலும் நடிகர் சிம்பு, நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் எனப்பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
நாகிணி சீரியல் மூலம் புகழ்பெற்ற மெளனி ராயின் அட்டகாசமான நடன நிகழ்வுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

சிம்பு, ‘Indian-2’ இசை நிகழ்சியில் பேசும்போது ‘’கமல்ஹாசனின் சிஷ்யன் நான். என்னோட சினிமா குரு அவர்தான். அவரோட தக்லைஃப் படத்துல நடிக்கிறதை ரொம்ப அதிர்ஷ்டமா பார்க்குறேன்’’ எனப்பேசிய சிம்பு, வெளியே செய்தியாளர்களிடம் பேசும்போது ‘’உண்மையைப் பேசுறுவங்கதான் ரொம்ப கஷ்டப்படுவாங்க. அதுல நானும் ஒருத்தன்’’ என பன்ச் பேசிவிட்டுப்போனார்.
இயக்குநர் ஷங்கர் விழாவில் பேசும்போது ‘’கமல் சார் 360 டிகிரி நடிகர் என நிறைய முறைப்பேசியுள்ளேன். ஆனால், இந்தியன் 2-வில் கமல் சார் 361 டிகிரி நடிகராக அப்டேட் ஆகியுள்ளார். இந்தப் படத்தில் 4 நாள்கள் கயிற்றில் தொங்கியபடி அவர் நடித்துள்ளார்’’ என்று சொன்னார்.
விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சிம்பு ‘தக்லைஃப்’ படத்தில் நடிப்பது, விழாவுக்கு வந்திருப்பது ஆகியவற்றுக்கு நன்றிசொல்லும் விதமாக ‘’நான் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவேண்டும்… சினிமாவைவிட்டு போகக்கூடாது என என்னைக் கட்டிப்பிடித்து அழுதார் டி.ராஜேந்தர்’’ என அப்பாவைப்பெருமைப்படுத்தும்படி சொல்லி சிம்புவை நெகிழவைத்தார் கமல்.
தொடர்ந்து பேசியவர் ‘’ எனக்கும் இந்தியன் தாத்தாவுக்கும் 15 வயது வித்தியாசம்தான். ஸ்ருதி மனசு வெச்சிருந்தா நான் எப்பவோ தாத்தாவாகியிருப்பேன்’’ என கலகலக்க வைத்தவர், ‘’தமிழன் என்பதுதான் என்னுடைய முதல் அடையாளம். அதன்பிறகுதான் நான் இந்தியன். தமிழன் இந்தியாவை ஆளும் நாள் விரைவில் வரும்’’ என்று சொன்னார்.
‘இந்தியன்-2’ படத்துக்கு அடுத்து ‘இந்தியன் – 3’யும் வெளிவரப்போகிறது என்பதுதான் கமல் ரசிகர்களுக்கான சந்தோஷமான செய்தி. இந்தியன் 2 ஜூலை 12-ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]