விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ மெகா சீரியல் மூலம் பிரபலமானவர் ரச்சிதா. பெங்களூருவைச் சேர்ந்த ரச்சிதா இந்தத் தொடர்மூலம் மீனாட்சியாக தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். சரவணன் மீனாட்சி தொடரில் மிர்ச்சி செந்தில், ரியோ என ஹீரோக்கள் மாறிக்கொண்டேயிருந்தாலும் ஹீரோயினாக ரச்சிதாவே தொடர்ந்து நடித்து புகழ்பெற்றார்.
சின்னத்திரையில் செல்வாக்கோடு இருந்தபோதே திருமண வாழ்க்கையிலும் இணைந்தார் ரச்சிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் நடித்தபோது உடன் நடித்த தினேஷ் என்பவரை ரச்சிதா காதலிக்க, இருவரும் ரீல் அண்ட் ரியல் கப்புளாகவே சின்னத்திரையில் பிரபலமடைந்தனர். ஜீ தமிழில் 2019-ல் ஒளிபரப்பான ‘நாச்சியார்புரம்’ சீரியலில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். ஆனால், இந்த சீரியல் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாததால் 200 எபிசோடுகளிலேயே மூட்டைக்கட்டப்பட்டது.

இந்தச்சூழலில் தினேஷுக்கு சீரியல் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க, ரச்சிதா மட்டுமே தொடர்ந்து ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘சொல்லமறந்த கதை’ என சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தார். இதற்கிடையே ரச்சிதாவுக்கும், தினேஷுக்கும் இடையே பர்சனல் வாழ்க்கையில் தொடர்ந்து சண்டையாகவே இருக்க இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். ரச்சிதாவும் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்ட பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார்.
இந்தச்சூழலில்தான் ஜீ தமிழில் விரைவில் வெளியாகயிருக்கும் மெகா தொடரில் ரச்சிதா ஜெய் ஆகாஷுடன் இணைந்து நடிக்கயிருக்கிறார். ஜெய் ஆகாஷ் ‘ரோஜா கூட்டம்’ படம் மூலம் பிரபலமானவர். தெலுங்கில் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தவர். 2020-ல் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நீதானே என் பொன்வசந்தம்’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் வந்தார் ஜெய் ஆகாஷ். இந்த சீரியல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் தற்போது மீண்டும் ஜீ தமிழில் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
‘அம்ருததாரே’ என்கிற பெயரில் ஜீ கன்னடாவில் ஒளிபரப்பாகிவரும் தொடரின் தமிழ் ரீ-மேக்கில்தான் ஜெய் ஆகாஷ் – ரச்சிதா இணைந்து நடிக்கயிருக்கிறார்கள். 45 வயதாகியும் திருமணமாகாத பெரும் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் ஜெய் ஆகாஷ் நடிக்க, 35 வயதாகியும் திருமணமாகாத, குடும்பத்தினரால் ஒதுக்கப்படும் கதாபாத்திரத்தில் ரச்சிதாவும் நடிக்கயிருக்கிறார்கள். ஜெய் ஆகாஷ், ரச்சிதா என இருவருக்குமே இது ஒரு மாறுபட்ட கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய தொடர் ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகயிருக்கிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]