விஜய் டிவியில் முதன் முதலாக 2019-ஆம் ஆண்டு குக் வித் கோமாளி என்ற ஷோ ஒளிபரப்பாகி நல்லவரவேற்பை பெற்றது. இதில் தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். முதல் சீசன் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றது. குக்குகள் சமைக்கும் போது கோமாளிகள் அவர்களை தொந்தரவு செய்வது, உதவி செய்வது என காமெடி எண்டர்டைன்மெண்ட் ஆக இருந்தது. கோமாளிகள் செய்யும் சேட்டைகளை தாண்டி போட்டியில் தந்த டாஸ்க்குகளை முடிப்பது என்பது குக்குகளுக்கு சவாலாகவே இருந்தது.
சீசன் 1
முதல் சீசனில் நடுவர்களாக சமையல் கலை வல்லுநர்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்தனர். இதனை விஜய் டிவி தொகுப்பாளரான ரக்ஸன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் அறந்தாங்கி நிஷா ஆகியோர் தொகுத்து வழங்கினார். முதல் சீசனில் போட்டியாளர்களாக நடிகைகள் வனிதா விஜயகுமார்,உமா ரியாஷ் கான்,ரம்யா பாண்டியன், ரேகா,பிரியங்கா ரோபோ சங்கர் மற்றும் நடிகர்கள் தாடி பாலாஜி, மோகன் வைத்யா, பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களை தொந்தரவு செய்வதற்காக கோமாளிகளாக புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி, தங்கதுரை, வி.ஜே பப்பு, பிஜிலி ரமேஷ், சாய் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடக்கம் முதலே கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
முதல் சீசன் கிட்டத்தட்ட 3 மாதங்களில் 27 எபிசோடுகள் ஒளிபரப்பானது. குக்குகள் ஒவ்வொருவராக எலிமெட் ஆகி வந்தனர். இறுதி போட்டியாளர்களாக வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஷ் கான், ரேகா ஆகியோர் இருந்தனர்.இதில் முதல் பரிசு வனிதா விஜயகுமார், இரண்டாவது உமா ரியாஷ் கான், மூன்றாவதாக ரம்யா பாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றனர். குக்குகளை தொடர்ந்து சிறந்த கோமாளியாக சிவாங்கி மற்றும் பாலா ஆகியோர் வெற்றி பெற்றனர். இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
சீசன் 2
முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை இரண்டாவது சீசன் 41 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டது. இதில் 9 போட்டியாளர்கள் கொண்டு பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. போட்டியாளர்களாக கனி திரு, ஷகிலா ,அஷ்வின் குமார், பவித்ரா லட்சுமி,டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், ரித்திகா, தர்ஷா குப்தா, தீபா சங்கர், மதுரை முத்து ஆகியோர் பங்கேற்றனர். கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, தங்கதுரை, சக்தி, வி ஜே பார்வதி, சரத் ஆகியோரும் கலந்து கொண்டனர். முதல் சீசனை போலவே கோமாளிகள் அட்டகாசம் தாங்க முடியாமல் குக்குகள் படாதபாடு பட்டனர். இறுதி போட்டியாளர்களாக கனி திரு, ஷகிலா ,அஷ்வின் குமார், பவித்ரா லட்சுமி,டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் பரிசு கனி திரு, இரண்டாவது ஷகிலா, மூன்றாவதாக அஷ்வின் குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். சிறந்த கோமாளிகளாக சுனிதா மற்றும் சிவாங்கி தேர்வு செய்யப்பட்டனர். இந்த சீசனில் சிவகார்த்திகேயன், ஆர்.ஜே பாலாஜி,வாணி போஜன், மாருதி ஜெயின், ரியோ ராஜ் ஆகியோர் ஒரு எபிசோடில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார். இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக சந்தோஷ் நாராயணன், அவரது மகள் தீ மற்றும் அறிவு, முகேன் ராவ் மற்றும் சிலம்பரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சீசன் 3
முதல் இரண்டு சீசனின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசன் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 54 எபிசோடுகள் நடைபெற்றது. இதில் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஸ்ருதிகா அர்ஜுன், தர்ஷன், அம்மு அபிராமி, வித்யுலேகா ராமன், சந்தோஷ் பிரதாப், கிரேஸ் கருணாஸ், ரோஷினி ஹரிபிரியன், ஆண்டனி தாஸ், மனோபாலா, ராகுல் தாத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக முத்து குமார் மற்றும் சுட்டி அரவிந்த் பங்கேற்றனர். கோமாளிகளாக ஒரு பட்டாளமே இருந்தது. புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, குரேஷி, சக்தி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பரத், ஷீத்தல் கிளாரின், தங்கதுரை, சரத் ஆகியோர் கலந்து கொண்டு ரசிகர்களை எண்டர்டைன் செய்தனர்.
கடுமையான போட்டிக்கிடையில் ஸ்ருதிகா அர்ஜுன், தர்ஷன், அம்மு அபிராமி, வித்யுலேகா ராமன், சந்தோஷ் பிரதாப், கிரேஸ் கருணாஸ் ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருந்தனர். முதல் பரிசு ஸ்ருதிகா அர்ஜுன், இரண்டாவது தர்ஷன், மூன்றாவது அம்மு அபிராமி ஆகியோர் தட்டி சென்றனர். சிறந்த கோமாளியாக பாலா மற்றும் புகழ் தேர்வு செய்யப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக மலையாள நடிகர் துல்கர் சல்மான், அதிதி ராய், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ஆர்.ஜே பாலாஜி, பார்த்திபன், பிரிகிதா சாகா, தேவதர்ஷினி, செஃப் கௌசிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
சீசன் 4
இந்த சீசன் 2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 53 எபிசோடுகள் ஒளிபரப்பானது. மூன்றாவது சீசனை போல இதிலும் 12 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். மீம் கோபி, ஸ்ருஷ்டி டாங்கே, விசித்ரா, பிரென்ச் நடிகை அண்ட்ரியான், ஷெரின், வி.ஜே விஷால், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார் ஆகியோருடன் கடந்த மூன்று சீசனில் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக கலந்து கொண்டார். வைல்ட் கார்டு எண்ட்ரியாக டி.ஆர்.கே கிரண், கஜேஷ் ஆகியோர் பங்கு கொண்டனர். கோமாளியாக மோனிஷா, ஜி.பி முத்து, தங்கதுரை, சுனிதா, குரேஷி, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாஹா, சில்மிஷம் சிவா, ஓட்டேரி சிவா, மணிமேகலை, பரத், சரத், சக்தி, ஷீத்தல் கிளாரின், அதிர்ச்சி அருண், வினோத் ஆகியோருடன் புகழ் அவ்வப்போது சேட்டை செய்ய வந்தார்.
முதல் பரிசு மைம் கோபி, இரண்டாவது ஸ்ருஷ்டி டாங்கே மூன்றாவது விசித்ரா ஆகியோரும் வென்றனர். இந்த சீசனில் சிறந்த கோமாளியாக மோனிஷா மற்றும் குரேஷி தேர்வு செய்யப்பட்டனர். சீசன் முதல் ஷோவில் ஆர்.ஜே பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் ஒருசில ஷோகளில் கவின், ஹன்சிகா, ஐஸ்வர்யா லட்சுமி, மணிகண்டன், ரமேஷ் திலக், சித்தார்த், சாந்தனு, ஆர்யா, சித்தி இத்தனி, சரத் குமார், கிரிக்கெட் வீரர்களான வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி, அர்ஜுன் தாஸ், துசார விஜயன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்தனர். இறுதி போட்டியில் பரத், வாணி போஜன், இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் பங்கு கொண்டனர்.
சீசன் 5 வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் ஒளிபரப்பாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் குக்குகள், கோமாளிகள் யார் என்று ஒரு சில செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் யார் யார் பங்கு பெறுவார்கள் என்று ஷோ தொடக்கத்தில் தான் தெரிய வரும். கடந்த 4 சீசன்களை போலவே இந்த சீசனிலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]